வெள்ளி, 16 ஜனவரி, 2015

தேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை

61waterlorry-changing-drainagelorry
  தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன.
  தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் சுமையூர்திகள், பொறிஇழுவைகள், மூலம் வழங்கப்பட்டது.
  தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோயில் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் தண்ணீரை எடுத்து அருகில் உள்ள வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதி வரை தண்ணீர் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வேளாண்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொறிஇழுவைகள், சுமையூர்திகள் போன்றவை தண்ணீர் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டன.
  தற்பொழுது நிலைமை மாறி அனைத்துப் பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பியதாலும், இயற்கையாக மலைப்பகுதிகளில் ஊற்றுகள் உருவாகி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததாலும் தண்ணீர் விலைக்கு வாங்குவது குறைந்தது. இதனால் தண்ணீர் விற்பனை செய்யப்பயன்படுத்தப்பட்ட சுமையூர்திகள், பொறிஇழுவைகள் போன்றவை மறுபடியும் உழவுக்குப் பயன்படுத்தப்பட்டன.
  ஆனால்   நீரூர்திகள் தேவை இல்லாமல் போனதால், அவை அனைத்தும் தற்பொழுது புதிய வசதியுடன் கூடிய கழிவுநீர் எடுக்கும் ஊர்திகளாக மாற்றப்பட்டு தேவதானப்பட்டி பகுதியில் கழிவுநீர்த் தொட்டிகள், சாக்கடைகள் போன்றவற்றைத் தூய்மை செய்யும் பணிக்கு மாற்றப்படுகின்றன.

அகரமுதல 61




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக