vaigai anesu61
  பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு.
  மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
   இறந்த முன்னோர்களை நடுகல் வைத்து வழிபடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது. அந்நடுகல்லை போகி அன்று மாலை வேளையில் தூய்மை செய்து மஞ்சள் குங்குமம் வைத்து, நடுகல்லைச்சுற்றிலும் சிவப்பு அல்லது மஞ்சள் வண்ணத்தில் பட்டுத்துணிகளைக் கட்டி வைத்துப் பொங்கல் வைப்பார்கள். ஒரு சிலர் மது, ஆடு, மாடு கோழி போன்றவற்றைப் படையலாக வைப்பார்கள்.
  இரண்டாவது நாளான பெரும் பொங்கலை முன்னிட்டுப் புத்தாடை அணிந்து, வீட்டில் புதிய மண்பானைகளில் பொங்கல் வைத்துத் தங்கள் மூதாதையரின் நினைவைக் கொண்டாடுவார்கள். இதில் தங்களுடைய தெய்வங்களைக்காட்டிலும் மூதாதையர்களுக்கு முதன்மை தந்தனர்.
  மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படும். பட்டி என்பது ஆடு, மாடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடமாகும். இதனைத் தொழுவம் எனவும், பண்ணை எனவும் அழைப்பர். வயல்காட்டிலுள்ள கால்நடைகளின் பட்டியில் அல்லது தங்கள் நிலத்தில் பொங்கல் கொண்டாடுவார்கள். கால்நடைகளான ஆடு, மாடுகளை ஆறு, குளம் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அவற்றின் நெற்றி, உடல், கொம்புப் பகுதிகளில் வண்ணம் பூசி, மஞ்சள், குங்குமம், வண்ணப்பொடிகள் ஆகியவற்றைக்கொண்டு மாட்டை அழகுசெய்தும் புதிய மூக்கணாங்கயிறு, புதிய தாளணி(இலாடம்) அடித்தும் அனைத்துக் கால்நடைகளையும் பட்டியில் வைத்து அடைப்பார்கள். அந்தப் பட்டியின் நுழைவு வாயிலில் வேப்பிலை, மஞ்சள் கொத்து, கரும்பு போன்றவற்றை இணைத்துப் பெரிய தோரணம் ஒன்றைக் கட்டுவார்கள். பட்டியின் நுழைவு வாயிலுக்கும், பொங்கல் வைத்த அடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாட்டுச்சாணத்தைக் கொண்டு பட்டியைப் போன்று தரையில் கட்டடங்கள் எழுப்புவது வழக்கம். அக்கட்டடத்தின் உட்பகுதியில் வேப்பிலையைப் பரப்பி அதில் தலைவாழை, பொங்கல், பழங்கள், நெய், வெல்லம் போன்றவற்றைப் படையலாகப் படைப்பார்கள். கண்ணேறு போன்றவற்றிற்குப் பட்டியின் முன்பு களிமண் அல்லது சாணத்தில் நாய் போன்ற பொம்மையைச் செய்து காவலுக்கு வைப்பார்கள். அதன் முன் தயிர், நெய் போன்றவற்றை ஊற்றி வாழைப்பழம் ஒன்றையும் வைப்பார்கள்.
  கால்நடை உரிமையாளர்கள், நன்றாக அழகுசெய்யப்பட்ட கால்நடைகளைப் பட்டியில் நிறுத்துவர்; புதிய மண்குடுவையில் பொங்கலின் வடிநீரையும் படையலின்போது ஊற்றுவர்; தேங்காய்த் தண்ணீரையும் தீர்த்தம் என்று கூறி வேப்பிலைக்கொத்தில் நனைத்து கால்நடைகளை மூன்று முறை வலம் வந்து கால்நடைகளின் மேல் தெளிப்பார்கள்.
  இவ்வாறு செய்த பின்னர் தாங்கள் படைத்த படையலைக் கால்நடைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதனைத்தொடர்ந்து பட்டியின் உட்பகுதியில் உள்ள கால்நடைகளில் அகவையில் சிறிய கன்றுக்குட்டி ஒன்றை முதலில் தோரணத்தின் உட்பகுதியில் நுழைத்து, அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து மீதமிருந்த அடுப்புக் கரியின் மீதும் அடுப்பின் மீதும் மிதித்தோ தாண்டியோ ஓடவிடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு நோய் வராது என்பதும், இனப் பெருக்கம் ஏற்படும் என்பதும் நம்பிக்கை.
  நான்காம் நாள் கன்று பொங்கல் அதாவது சல்லிக்கட்டைக் கொண்டாடுவார்கள். சில பகுதிகளில் பொங்கலுக்கென்று உள்ள பாட்டைப் பாடி கால்நடைகளின் மீது தாங்கள் செய்த தீர்த்தங்களைத் தெளித்து கால்நடைகளை பலியிடுவதும், சில பகுதிகளில் கால்நடைகளுக்குத் தீமிதி திருவிழா நடத்துவதும் வழக்கம். அவர்களிடம் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து நீளமாகத் தீயை வளர்த்து அதன் மீது அல்லது அதனைத்தாண்டி ஓடவிடுவார்கள். இதன் மூலமும் கால்நடைகளுக்கு நோய்கள் நீங்கும் என்றும் இனப் பெருக்கம் மிகும் என்றும் நம்புகிறார்கள்.
  இவ்வாறு பரம்பரையாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை புதுமை மயமாகித் தற்பொழுது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகையின்போது மாடுகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உண்டு. மாடுகளுக்கு தேவையான பொருட்களைச் சந்தைகளில் விற்பனை செய்வார்கள். தற்பொழுது கால்நடைகள் மளமளவெனச் சரிந்ததால் கால்நடைகளுக்கு தேவையான பொருட்களின் விற்பனையும் சரியத்தொடங்கியுள்ளது. தேவதானப்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான வண்ணப்பொடி, குஞ்சம், சாட்டை, மணி போன்றவை வாங்குவதற்காகவும் விற்பதற்காகவும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். தற்பொழுது கால்நடைகள் குறைந்ததால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் கடைகள் அமைந்துள்ளன.
பொங்கலுக்கான வண்ண விற்பனை
பொங்கலுக்கான வண்ண விற்பனை