செருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா
நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல்
வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது
நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின.
செந்தமிழின் இனிமையும் பெருமையும்
என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை
உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார்
முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின்
சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத
ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்)
அவர்களின் அன்பு நினைவலைகளை நெஞ்சிலே ஏந்தி மீளாத்துயரில் வருந்தி வடித்த,
கவிப்பிரளயமாய் “அர்ச்சனைமலர்கள்” என்ற இனிய கவிதைத்தொகுப்பு
வெளியீட்டுவிழா கடந்த சித்திரை 20, 2045 / 03-05-2014 அன்று செருமனி
முன்சர் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.
இயற்கையின் காலநிலைக்கரமும் கை தட்டி
வரவேற்க மக்கள்திரள் மத்தியில் அழகுநிறை கல்லூரியின் அரங்கின் மண்டபத்திலே
தமிழ் மரபில் தீபச்சுடர் ஏற்றி மங்களம் எங்கும் பொங்கிநிற்க மண்ணின்
மகிமைக்காய் உயிர்நீத்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செய்து
வணங்கிக்கொள்ள,
தமிழ்கவி.ப.பசுபதிராசாவின்
எழுத்துவரிகளில் உருவாகிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தன்கொஞ்சும் குரலால்
பாடி அவையை இசைவசமாக்கினார் இசை ஆசிரியர் பல்கலைவித்தகி திருமதி கலைவாணி
ஏகானந்தராசா அவர்கள்.
வரவேற்புரையை திருமதி செயமலர்
செயேந்திரா அவர்கள் ஆற்ற, அடுத்த நிகழ்வாக இலண்டன் தமிழ்வானொலி, “”பா””
முகம் தொலைக்காட்சி அதிபர் திரு நடா மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அவர் தனது உரையில் சாதாரண வீட்டுப்பெண்
ஒருவர் தன்திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுப்பெண்ணாக, சமுதாயப் பெண்ணாக இந்த
அரங்கில் உருவாகி நிற்கும்கணம் உலகிற்கே வழிகாட்டும் இனிமையான தருணம்
என்று பாராட்டி மனமகிழ்ந்தார். தொடர்ந்து வரவேற்பு நடனம் ஒன்றை சிறப்புடன்
அளித்துப்பெருமை சேர்த்தார் செல்வி.சகானா.திருச்செல்வம்.
தொடரச்சியாக, அர்ச்சனைமலர்களின்
வெளியீடு அற்புதமாய் அரங்கேறியது. உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
அர்ச்சனைமலரை அள்ளி அழைத்துச்செல்ல, இதயங்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளமாய்
ஆனது. பாரிசு கண்ணதாசன் கலையரங்கப் பொறுப்பாளர் திரு இரவீந்திரன் மலரில்
அடங்கிய கவிதைகளைக் குறிப்பிட்டுமிகச் சுவையான விளக்கங்களைத் தந்தார்.
பின்பு திருமதி செயா நடேசனின்
அருமைப்பிள்ளைச்செல்வங்களைத் தங்கள் பேரன்பால் உறவுமனவயலில் அடைத்துக்கொண்ட
செருமனிய உறவு நெஞ்சங்களின் பாராட்டை அவர்களின் அன்புச் சொற்களில்கேட்டு
யாவரும் உள்ளம் குளிர்ந்தனர்.
தொடர் நிகழ்வாய் செருமனி தமிழருவி
சஞ்சிகையின் முதன்மை ஆசிரியர் திரு நயினை விசயன் அவர்கள் அர்ச்சனைமலரின்
கவிதைகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் திறனாய்வுசெய்து ஆசிரியரின் படைத்தல்
பெருமையினைக்கூறி மண்ணின் எம் வாழ்வுத்தடயங்களில் மனம் ஒன்றிப் பாடல்
ஒன்றையும் பாடி மகிழ்ந்தார்.
மீண்டும் பாராட்டுமழையால்
படைப்பாளியைப் பாராட்டினார் கவிஞர் ப.பசுபதிராசா. செருமனித் தமிழ்
எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.வ சிவராசா அவர்கள் இவ்விழாவிற்குத்
தவிர்க்கமுடியாத காரணத்தால் வர இயலாததால், அதன் செயலாளர் எழுத்தாளர்
பொன்.புத்திசிகாமணி அவர்கள் தனது வாழ்த்துரையையும் தலைவரின் உரையையும்
சேர்த்துப் பகிர்ந்துகொண்டார்.
பாரிசு நகரிலிருந்து வருகைதந்த
திரு.கிருபாகரன் அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து முன்சர்நகர
அரசவெளிநாட்டவர் அறிவுரைக்குழுவின் உறுப்பினர் திரு.பரமேசுவரன் வாழ்த்துரை
வழங்கினார். தொடர்ந்து எழுத்தாளர் திருமதி நகுலா சிவநாதன், திருமதி இராதா,
பாரிசு ரீ.ஆர்.ரீ வானொலியின் சார்பாக நோர்வேயிலிருந்து வருகைதந்த திருமதி
மாலா விமலன், நெதர்லாந்திலிருந்து வருகைதந்த இலண்டன் தமிழ்வானொலி உறவுகளான
திருமதி.செல்வி நித்தியானந்தன, திருமதி.வசிதா மொகமது, திருமதி செயமலர்
செயம் தங்கராசா ஆகியோர் வாழ்த்துமடல்களும் பரிசுகளும்கொடுத்துப்
பாராட்டுவழங்கிச் சிறப்பித்தனர்.
தொடர்ந்து செருமனி தமிழ்க்
கல்விச்சேவையின் நிறுவனரும், செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
துணைத்தலைவருமான திரு பொன் சிறீசீவகன் அவர்கள் மலரிலுள்ள கவிதைகளை அழகுறத்
திறனாய்வு செய்து உரையாற்றினார். கவிநயம் கொஞ்சும் இடங்களை அவர்
சுட்டிக்காட்டி அவர் அளித்த திறனாய்வு உரை அவையோரை அற்புதமாய்க் கவர்ந்தது.
தொடர்ந்த நிகழ்வாக திருமதி செயா நடேசன்
அவர்களால் இலண்டன் தமிழ்வானொலிக்கு எழுதப்பட்ட 20 பாடல்களைத் தெரிவுசெய்து
அவற்றை ஒரு சிறந்த இறுவெட்டாக ஆக்கித் தனது அன்புப்பரிசாக அவையில்
அரங்கேற்றி வழங்கிச் சிறப்பித்தார், இசை ஆசிரியர் திருமதி கலைவாணி
ஏகானந்தராசா அவர்கள். இவரின் பெருந்தன்மையைப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
இவ்விழாவானது சிறப்பாக நடைபெற
இளங்குயில்களின் அறிவுப்பணியானது பெரும் சிறப்புச் சேர்த்தது. அழகுதமிழில்
செல்வி சறிகா சிவநாதனும் செருமனிய மொழியில் செல்வி சோசுலின் செல்வரட்ணமும்
தொகுத்த சிறப்பு பாராட்டுக்குரியதாகும். சிலமணிநேரம் கண்ணுக்கும்
செவிக்கும் இனியவை இடைமறித்துக்கொள்ள வயிற்றுக்குச்சுவைததும்பும்
சிற்றுண்டி வகைகளை அனைவரும் உண்டு குடித்துப் பரிமாறி மகிழ்ந்தனர்.
தொடர் நிகழ்ச்சியாக செருமனி தமிழ்
எழுத்தாளர் சங்க உறுப்பினர்களின் கவி அரங்கத்தில் “”இன்றைய கவிஞர்களும்
கவிதைகளும்”” என்ற தலைப்பில் கவிஞர் திரு அம்பலவன் புவனேந்திரன்
தலைமைதாங்க, கவிஞர் திரு பொன்.புத்திசிகாமணி, கவிஞர் திரு ப.பசுபதிராசா,
கவிஞர் திருமதி.கெங்கா. தான்லி, கவிஞர் திருமதி கீதா பரமானந்தன் ஆகியோர்
அழகாகக் கவிவடித்து அவையோரை மகிழ்வித்தனர்.
மீண்டும் சிறிது நேர இடைவேளைக்குப்பின்
இலண்டன் தமிழ்வானொலியின் அருமையான பொன்மாலைப்பொழுது 127 ஆவது மேடை நிகழ்வு
குதூகலமாக ஆரம்பமாகியது. ஆடல் பாடல் எனப் பல்சுவை நிகழ்வுகள் அழகுற
மேடையேறி அவையோர் அகமகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வானொலின் அதிபர்
திரு நடாமோகன் முன்னின்று வளரும் சிறார்களையும் இளையோரையும் ஊக்குவித்தமை
சிறப்பானதாகும்.
இறுதியில் விழாநாயகி திருமதி செயா நடேசன் ஏற்புரையையும் நன்றியுரையையும் வழங்க விழா இனிதே நிறைவுகண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக