வியாழன், 19 ஜூன், 2014

நாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’

நாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’

நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3ஆவது ‘நம்ம வரலாறு’ நிகழ்வு கடந்த ஆனி 1. 2045 / 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீசுவரன் கோவிலில் நடந்தது. இம்முறை ‘நம்ம வரலாறு’ நிகழ்வில் “நாட்டார் தெய்வங்கள்” குறித்துஎடுத்துரைக்கபட்டது.
நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக்கு, திரு சே.சிரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டி முனீசுவரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசத் தேர்வு செய்ததில் இருந்தே புரிந்து கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுப்புற இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கெனத் தன் வாழ்வை ஒப்படைத்த தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்புப் பேச்சாளாராக அழைத்தது கூடுதல் சிறப்பு. தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் தோழர். முகிலன், வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருட்டிணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. விக்கி, சரவணன், அருணாச்சலம், வாகப்பு சாசகான், இரகுநாத்து, இளஞ்செழியன் கதிர், ஒளிப்படக் கலைஞர் திரு. குணா அமுதன், பாபு ஆகியோர்கள் உட்பட 50 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அதில் சரிபாதி பள்ளிக்கூடச் சிறார்கள்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சாதிக்கு, பாண்டிக் கோவில் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில் “கரூர் அருகே உள்ள நெரூர் ஊரில் முத்தரையர் பரம்பரையைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்புக்காக மதுரை வந்து, இப்போது பாண்டிக் கோவில் என்ற சொல்லபடுகிற இடத்தில் மண்ணைத் தோண்டுகிற போது சடைமுடியோடு சம்மணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்தச் சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்துக் கும்பிடத் தொடங்கினார்கள். சடாமுனீசுவரர் கோவில் என மக்கள் மத்தியில் புகழடைந்தது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக – நடக்கக்கூட சரிவரப் பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற சடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாகக் குழந்தைகள் அச்சப்பட்டனராம். நீண்டு வளர்ந்த சடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே கோவில் புகழடைந்துவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்குச் சில சட்ட- திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லாக் கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘”அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோவிலாக பாண்டிக்கோவில் மாறியது. வள்ளியம்மையின் மரபுவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். பூசாரி மரபுவழியில் பாண்டி என்பவர் இந்தக் கோவிலில் பூசாரியாக இருந்தபோது ‘பாண்டி பூசாரி கோவில்’ என அழைக்கப்பட்டு, நாளடைவில் சடாமுனீசுவரர் என்பது மாறி பாண்டி முனீசுவரர் கோவில் ஆனது என்று கோவில் தரப்பில் சொல்லப்படுகிறது”என்றார். மேலும் அவர் பேசுகையில் “மதுரை பாண்டி முனீசுவரர் கோவிலில் இருக்கிற பாண்டி முனி என்பது சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் என்று தொல்லியல் துறை ஆய்வு சொல்கிறது. அதே சமயம் இந்த இரண்டு கருத்துகளையும் மறுத்து, இந்தச் சிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் சிற்பமாக இருக்கலாம். இதை சமணத் தீர்ந்தங்கரர் என்று அறுதியிட்டுச் சொல்ல முழுமையான ஆய்வு இல்லை என்றும் தமிழ் அறிஞர் சிலர் கூறுகின்றனர். ஒன்றை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிந்து வாழுங்கள்” என்றார்.
“கிடா வெட்டுக்குப் புகழ்வாய்ந்த பாண்டிமுனி ஒரு சைவச்சாமி. பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கின்றன. பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து இறையன்பர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூசை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமயக் கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குக் கைம்மாறாக மக்கள் கிடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன முழுக்குதான் பாண்டிக்கு விருப்பம். அதை மீறி, பாண்டிக்கு எது கொடுத்தாலும் இறையன்பர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி. சுமையூர்திகளில், உழுவையூர்திகளில், பேருந்துகளில், மூடுந்துகளில், கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக் கடன் செய்ய வரும் பழைய இறையன்பர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய இறையள்பர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டிக் கோவிலில். சமய வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பட்ட மக்கள் பாண்டிக் கோவில் வந்து செல்கின்றன.” என்றார் பாண்டிக் கோவில் பரம்பரை அறங்காவலர் திரு.க. சிவாசி அவர்கள்.
தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்கள் பேசுகையில் “சைவம், வைணவம், வைதீகம், சமணம், பௌத்தம், தோன்றுவதற்கு முன்பு தமிழர்களுக்குச் சமயங்கள் இல்லை. ஆனால் கொற்றவை, அணங்கு, முருகு, போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. சிவன், விட்ணு போன்ற பணக்காரச்சாமிகளை பெரும் தெய்வங்கள் என்றும்… காளி, அம்மன், பாண்டி, கருப்பு, சுடலை மாடன், சமயன் போன்ற நமது நாட்டார் தெய்வங்களை சிறு தெய்வம் என்றும் அழைத்து வந்தனர். வரலாற்று உண்மை மிகுந்த நமது தெய்வங்களை “நாட்டார் தெய்வம்” என்ற வழக்கை மாற்றியது திருநெல்வேலியைச் சேர்ந்த திரு சிவா சுப்பிரமணியன் அவர்கள்தான். அக்காலத்தில் போரில் வீர மரணம் அடைந்தவர்களைப் புதைத்து நடுகல் நட்டு தெய்வமாக வழிப்படும் வழக்கம் தமிழ் சமூகத்தில் இருந்தது. ஊரைக் காலி செய்து வெளியூர் போகும் குடும்பத்தார்கள் தங்கள் குலசாமியின் பிடி மண்ணை எடுத்துக் குழைத்து, புதிதாகக் குடியேறும் ஊரில் சிலை வடித்தோ, கோவில் கட்டியோ வழிபடுவார்கள். பணக்காரத் தெய்வங்கள் போல் அல்லாமல் அவர்களுக்கு இரண்டு கால்கள், இரண்டு கைகள் என நம்மைப் போன்றே உருவம் இருக்கும். நம் நாட்டார் தெய்வங்களில் பெண் தெய்வங்கள் அதிகம். எல்லோரும் இரத்தமும் சதையுமாக நம்முடன் வாழ்ந்தவர்கள்.
நாட்டார் தெய்வங்கள் வரிசையில் மதுரை கிருட்டிணாபுரம் குடியிருப்பில் கோவில் சுவர் எழுப்பி ஒரு “பனை மரம்” தெய்வமாக வணங்கப்படுகிறது. மூத்தப் பழங்குடிச் சமூகத்தின் எச்சமாக மரங்களைத் தெய்வமாக வழிப்படுகிற வழக்கம் இன்றும் நம்மிடையே எஞ்சி நிற்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புனித சின்னப்பர் குருசடி கிறித்துவாலயம் இருக்கிறது. இங்கே மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து கிடாய் வெட்டிப் பொங்கல் வைத்து மொட்டை போட்டு சப்பரம் தூக்கி கொண்டாடுவார்கள். அதே போல புளியம்பட்டி அந்தோனியார் கோவிலும் மிகவும் புகழ் பெற்றது. உண்மையில் அது பாதிரியார் ஒருவர் அடக்கம் செய்யபட்ட இடமாகும்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குள் இசுமாயில் சா பள்ளிவாசல் இருக்கிறது. திருடர்களிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற உயிரை நீத்த பக்கீர் ஒருவர் புதைக்கபட்ட இடம் அது. மக்கள் அவரை, தெய்வமாக வழிபட்டு, அவருக்கு அசைவச் சாப்பாடு படைக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவரும் எளிய மக்கள் வழிபாட்டுக்கு ஓர் ஆதாரம். மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாட்டார் தெய்வ வழிபாடாகவே திகழ்கிறது. எந்தச்சமயமானாலும் எளிய மக்களுக்கு ஒன்றுதான்” எந்த நாட்டார் தெய்வமும் நாந்தான் இந்த உலகத்தைப் படைத்தேன் என்று சொல்வதில்லை. உயர்வு தாழ்வு கற்பிப்பதில்லை. நாட்டார் தெய்வங்கள்தான் உயர்ந்தது” என்றார்.
நிகழ்வு முடிந்ததும் எல்லாரும் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கலைந்தனர். மரியாதை நிமித்தமாக ஐயா மம்மது அவர்களுக்கு, கோவில் நிருவாகம் சார்பாக, பாண்டி முனிக்கு சாத்திய மாலை எடுத்து அணிவிக்கப்பட்டது.
நாட்டார் தெய்வம் என்பது நம் முன்னோர்களை வணங்கும் முறைதான். மூடநம்பிக்கைகள் எதில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் ஆணித்தனமாக அடித்து கூறுவேன்- கடவுள் என்பது இல்லை. தற்சார்பு, தன்னம்பிக்கை, தன்மானம் இழக்காத வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக