dinamaniilakkiyathiruvizhaa
“தினமணி’ நாளிதழும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்த இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழா வரும் சூன் 21, 22 ஆம் நாள்களில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்வை இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ.ப.செ. அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்.
ஔவை நடராசன் தலைமையில் “இன்றைய தேவையும் இலக்கியமும்’, ஞான. இராசசேகரன் தலைமையில் “காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்’, மாலன் தலைமையில் “தகவல் ஊடகத்தில் தமிழ்’, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் “மொழியும் பெயர்ப்பும்’, சுதா சேசய்யன் தலைமையில் “சமயமும் தமிழும்’, ம. இராசேந்திரன் தலைமையில் “வாசிப்பும் பழக்கமும்’, இ. சுந்தரமூர்த்தி தலைமையில் “வேர்களைத் தேடி- இலக்கியம்’, இரா. நாகசாமி தலைமையில் “வேர்களைத் தேடி- கலைகள்’ என்று எட்டுத் தலைப்புகளிலான அமர்வுகளில் 24 அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
ஒவ்வோர் அமர்வுக்குப் பிறகும், ஒவ்வோர் அரசியல் தலைவர், இம்மியும் அரசியல் கலப்பின்றி “என்னைச் செதுக்கிய இலக்கியம்’ என்கிற தலைப்பில் அரை மணி நேரம் பேச இருக்கிறார். பழ. நெடுமாறன், திருச்சி சிவா, தமிழருவி மணியன், பழ. கருப்பையா, தொல். திருமாவளவன், வைகோ ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள்தான், தமிழ் இலக்கியத் திருவிழாவின் சிறப்பியல்புகளாகத் திகழப் போகின்றன.
இத்துடன் நின்று விடாமல் இரண்டு நாள்களும் மாலையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “கலைமாமணி’ சாகிர் உசேன் குழுவினரின் “தசாவதாரம்’ நாட்டிய நாடகம் முதல் நாளும், சொர்ணமால்யா குழுவினரின் ” இராசராசன்’ நாட்டிய நாடகம் இரண்டாவது நாளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்திடம், முன்னணிப் பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் இலக்கியத் தரமான படைப்புகளை மட்டும், விழா அரங்கத்திற்கு வெளியே விற்பனை செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
எதற்காக இப்படி ஓர் இலக்கியத் திருவிழா? இதனால் என்ன ஆகிவிடப் போகிறது? என்று கேட்கலாம். ஒவ்வொரு ஊரிலும் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சான்றாக, மதுரை சித்திரைத் திருவிழாவையே எடுத்துக் கொள்வோம். அந்த விழாவால் என்ன பயன் என்று கேட்டால் அதற்கு என்ன சொல்வது? பல்வேறு ஊர்களில், நாடுகளில் இருப்பவர்கள் ஒன்று கூடவும், கலந்து பேசவும், உற்றார் உறவினரை, சுற்றத்தினரை, நண்பர்களைச் சந்திக்கவும் நலம் உசாவவும் இதுபோன்ற விழாக்கள் வாய்ப்பாக அமைகின்றன என்பதுதானே அந்த விழாக்களின் சிறப்பு.
“தினமணி’ இலக்கியத் திருவிழாவின் நோக்கமும் அதுதான். தென்காசி திருவள்ளுவர் கழகத்தவரும், ஐதராபாத்து திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு வாய்ப்பு; கோவை இளங்கோவடிகள் மன்றத்தவரும், இராசபாளையம் கம்பன் கழகத்தவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாக ஒரு வாய்ப்பு; தில்லித் தமிழ்ச் சங்கச் செயலாளர் இரா. முகுந்தனையும், ஓசூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் புலவர் கருமலைத் தமிழாழனையும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து கைகுலுக்கி அளவளாவச் செய்ய இது ஒரு வாய்ப்பு.
“இலக்கியத் திருவிழாவால் அழிந்துவரும் தமிழ்மொழிக்கு ஆக்கத்தைச் சேர்க்க இயலுமா? தமிழ் ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக ஆவதற்கும், விளம்பரப் பலகைகளில் தமிழ் ஒளிரவும், செய்தித்தாள், தொலைக்காட்சி, திரைப்படங்களில் கொலை செய்யப்படும் தமிழைக் காக்கவும் என்ன செயல் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’ என்கிற ஓசூர் தமிழ்ச் சங்கச் செயலர் கருமலைத் தமிழாழனின் ஆதங்கமும், அவசரமும், ஆத்திரமும் புரியாமல் இல்லை. தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின்,பன்னூறாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்களின் மனக்குமுறல்தான் இது. ஆனால், அவரவர் ஆங்காங்கே மனப்புழுக்கத்துக்கு வடிகால் கிடைக்காமல் புலம்பித் தீர்ப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?
தமிழை நேசிக்கும் ஆர்வலர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடினால்தானே, ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமானால்தானே, தமிழைப் பாதுகாக்கும் முயற்சி ஆக்கமும் வீரியமும் பெறும்?
தமிழ் இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைவதால் மட்டுமே, தமிழ் வழக்காடு மன்ற மொழியாகவோ, கல்வி மொழியாகவோ மாறிவிடப் போவதில்லை. இது போன்ற இலக்கிய விழாக்கள் மூலம் அதற்கான கருத்தாக்கம் உருவாக்கப்படுவதன் மூலமும், தமிழார்வலர்களுக்கிடையே அறிமுகமும் நட்புறவும் ஏற்படுவதன் மூலமும்தான் அதை சாதிக்க முடியுமே தவிர, தீர்மானங்கள் போடுவதாலோ, அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ செயல்படுத்தக்கூடியது அல்ல அந்தப் பெரும்பணி.
தமிழை மீண்டும் தமிழர்களின் மன அரியணையில் ஏற்றி அமர்த்தும் முயற்சிதான் இலக்கியத் திருவிழாவே தவிர, தீர்மானம் போடவோ, போராட்டம் நடத்தவோ எடுக்கப்படும் முயற்சி அல்ல.
இது ஏன் மாநாடாக அல்லாமல் திருவிழாவாக நடத்தப்படுகிறது என்றால், திருவிழாக் கூட்டத்தைப் போலக் கூடிப் பேசி, ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, மகிழ்ந்து பிரிவதற்காகத்தான். “இந்த வாரம்’ பகுதியில் நான் எழுதியிருந்ததுபோல சிதம்பரம் ஆருத்ரா தரிசனம், மதுரை சித்திரைத் திருவிழா, திருப்பதி பிரம்மோற்சவம், திருவரங்கம் வைகுண்ட ஏகாதசி, பழனி தைப்பூசம், வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா, நாகூர் கந்தூரி விழா என்று இறையுணர்வாளர்கள் பெருந்திரளாகக் கூடி மகிழ்வதுபோல, தமிழன்பர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடிக் களிக்கும் நிகழ்வாக “தினமணி’ நாளிதழின் தமிழ் இலக்கியத் திருவிழா அமைய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
எங்களுக்கு மேடையில் பேச வாய்ப்புண்டா, உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படுமா, அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ளலாமா, இப்படிப் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் நானளிக்கும் ஒரே பதில், இது அரசு நடத்தும் மாநாடல்ல, “தினமணி’ நாளிதழ் நடத்தும் இலக்கியத் திருவிழா என்பதுதான். உங்களூர்த் திருவிழாவிற்குப் போக நீங்கள் உறைவிட உணவு வசதியா கேட்கிறீர்கள்? இல்லை, எனக்கும் கற்பூர ஆரத்தி காட்டி பூசை செய்ய வாய்ப்புண்டா என்றா வினவுகிறீர்கள்?
தனித்தனியாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பனுப்பும் அவசியமும் இல்லை. தமிழை நேசிக்கும் அன்பர்கள் ஓடியும் தேடியும் வந்து கூடிக் களிக்கும் விழா இது. இது உங்கள் விழா, தமிழ் பேசும் அனைவரும் அழைக்காமலே ஒருங்கிணைய வேண்டிய விழா.
ஆக்கபூர்வமான, மொழி வளர்ச்சிக்கான விவாதங்களை மையப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களையும், வாசக அன்பர்களையும், அறிஞர்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சி இது, அவ்வளவே!
தமிழன்பர்கள் கூடிக் குலாவ, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, பல தமிழறிஞர்களிடம் கலந்துரையாட, அனபிற்குரிய எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேச, இரண்டு நாள்கள் தமிழே மூச்சாகக் கிடைக்கும் வாய்ப்பாகக் கருதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஒருங்கிணையுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள், கோரிக்கை, அழைப்பு!
மக்கள் மத்தியில் தமிழ் இலக்கியத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்காங்கே செயல்படும் இலக்கிய அமைப்புகளின் சார்பில் “தினமணி’ நாளிதழ் எடுக்கும் விழா இது என்றுகூடச் சொல்லலாம்.
விழா அரங்குகளில் தமிழறிஞர்கள் பதிவு செய்யும் கருத்துகள் கட்டுரைகளாக, “வேர்களைத் தேடி’ என்கிற தலைப்பில் மலராகத் தொகுக்கப்படுகின்றன. அந்த மலரில் தமிழ் இலக்கியத் திருவிழாவில் பங்கு பெறும் இலக்கிய அமைப்புகளின் பட்டியலும் இடம்பெற இருக்கிறது. இந்தப் பெரும்பணியை ப. முத்துக்குமார சுவாமியும், கிருங்கை சேதுபதியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, தமிழை நேசிக்கும் அன்பர்களும், அமைப்புகளும், படைப்பாளிகளும், அறிஞர்களும் ஒன்றுகூடித் தமிழுக்கு விழா எடுத்து மகிழ்வோம். வாருங்கள்…. தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!
இப்படிக்கு அன்பன்,
ஆசிரியர் கே. வைத்தியநாதன், தினமணி