மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக்
கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு
மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல்
வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி
செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.
இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும்
கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில்
அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப்
பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன்
தன்மையாலா?
வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,
பதவிப்பற்று, எப்படியும் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கம் முதலியன
நிறைந்திருக்கும் இப்பெருங்கண்டத்தில் மக்களாட்சி முறைக்கு மாறாகச்
சென்றாலும் தடுத்து நிறுத்த எவரும் முன் வருவாரா? வந்தாலும் வெற்றி
பெறல்கூடுமா?
இந்தியக் கூட்டரசுப் பொறுப்பை ஏற்று
நடத்திவரும் ஆளுங்கட்சியினர், மக்களாட்சி முறையில் செல்லவில்லை யென்பதற்கு
இந்தியக் கூட்டரசு ஆட்சிமொழி பற்றி அவர்கள் கடைப்பிடித்துவரும் கொள்கையே
தக்க சான்றாக அமையும்.
‘கூட்டரசு’ என்பது பல அரசுகளும் சேர்ந்து
அமைத்துக் கொண்டுள்ள அரசாகும். கூட்டரசு ஆட்சியில் எல்லா அரசுகளுக்கும் –
மாநிலங்களுக்கும் சம உரிமையும் வாய்ப்பும் இருத்தல் வேண்டும். இல்லையேல்
கூடிவாழும் கூட்டரசுக் கொள்கை மாய்ந்து ஒற்றையாட்சித் தன்மை
மேலோங்கிவிடும். இந்தியக் கூட்டரசு உண்மையாகவே கூட்டரசாகவே என்றும்
நீடித்திருக்க வேண்டும் என்றால் கூட்டரசு மொழிகளும் ஒன்றாகிய இந்திக்கு
மட்டும் தனி உரிமையும் செல்வாக்கும் அளித்தல் பொருந்தாது இந்திமொழி
ஒன்றுதான் இந்தியக் கூட்டரசின் மொழி என்று கூறி ஏனைய அரசு மொழிகளை
இரண்டாம்தர நிலைக்குத் தள்ளிவிட்டனர். இச்செயல் கூட்டரசுக் கொள்கைக்கு
ஏற்றதன்று என அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் பெரியோர்களும்
எடுத்துரைத்துள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியாய் இயங்கும் திராவிட
முன்னேற்றக் கழகம் இந்தி முதன்மையை எதிர்த்துப் பெருங் கிளர்ச்சிசெய்து
வருகின்றது. அதன் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பிறரும்
சிறைக்குச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்தியக் கூட்டரசு மக்களாட்சி
முறையில் நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்குமானால், இந்திக்கு முதன்மை
தருவதை நிறுத்தி இருத்தல் வேண்டும். இந்தி முதன்மையை எதிர்ப்போரின்
கூற்றுகளைச் செவிமடுத்துத் தாம் கடைப்பிடித்து வரும் இந்தி மொழிக் கொள்கையை
நெகிழவிட்டிருக்க வேண்டும்.
இந்தியக் கூட்டரசு அவ்வாறு செய்திலதே! மாறாக இந்தி முதன்மையை விரும்பாதார் மீது சுமத்தும் செயல்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்திய அரசுத்துறைப் பணியினரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தேர்வு மொழி இந்திதான் எனக் கூறியுள்ளது.
இந்திய அரசுத்துறைப் பணியில் உள்ளோர் இந்தி
மொழிப் புலமை பெற்றாக வேண்டும் என அறிவித்து, பணியில் அமர்ந்துள்ளோரை
இந்தி மொழி படிக்குமாறு வற்புறுத்தி வருகின்றது. அவர்கள் அலுவலக
நேரங்களிலேயே இந்தியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றது.
படிக்காவிட்டால் வேலையுயர்வோ ஊதிய உயர்வோ கிட்டாது எனத் திட்டவட்டமாக
அறிவித்துவிட்டது.
இந்தி மொழியைப் பயிற்சி மொழியாகக் கொண்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றைத் தென்னாட்டில் தோற்றுவிப்பதற்கும் முயன்று வருகின்றது.
இம்மட்டோடு நிற்கின்றதா?
இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழி எழுத்தாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டுமெனக் கூறி அதற்குரிய செயல்முறைகளிலும் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே
உடலாகும். உடலாம் எழுத்தை அழித்தபின் உயிராகும் மொழி வாழ்வது எங்ஙனம்? ஆகவே
ஏனைய மொழிகளை அழித்துவிட்டு இந்திமொழி ஒன்றைமட்டுமே நிலைக்கச் செய்வதற்கு
ஒல்லும் வகையால் எல்லாம் ஓயாது முயன்று திட்டமிட்டுச் செயல்புரிந்து
வருகின்றனர்.
இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத்தகும்
நம் தாய்மொழியாம் தமிழை யிழந்தபின்னர் நாம் வாழ்வது எவற்றுக்கு?
மொழியிழந்து, வாழ்விழந்து, மானமிழந்து வாழச்செய்வதா மக்களாட்சிமுறை?
உண்மையான மக்களாட்சி முறையில் ஒவ்வொருவர் நலனும் உரிமையும் காக்கப்படல்
வேண்டும். இன்றேல் அது மக்களாட்சியாகத்தான் கருதப்படும்.
இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக
ஆக்குவதைத்தடுத்து நிறுத்தல் வேண்டும். ஒற்றுமையின்பேரால் நம் உயிரனைய
மொழியை அழிக்க வரும் திட்டத்தை உயிர் கொடுத்தேனும் தடுத்து நிறுத்த
ஒன்றுபட்டெழுதல் தமிழரின் தலையாய கடனாகும். வேற்றுமைகளை மறந்து வீறுகொண்டு
எழுமின். வெல்க தமிழ்.
- குறள்நெறி: வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக