வியாழன், 13 பிப்ரவரி, 2014

பாலு மகேந்திரா காலமானார் - Balu Mahendhira expired



முதுபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்
 

 உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இயக்குநர் பாலுமகேந்திரா(அகவை 74)  பண்டுவம் பயனின்றி  இன்று (13.02.14)  காலை காலமானார்.

  பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்னும் இயற்பெயருடையவர்;  மே 20, 1939 இல் இப்போதைய தமிழ்ஈழத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு அருகே உள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர். இளம் பருவம் முதலே ஒளிப்படக்கலையில் ஆர்வம் மிக்கவராக விளங்கியவர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் தொடர்பான படிப்பை முடித்தார்;  பின்னர்ப் பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்தார்; படிப்பில் தங்கப் பதக்கம் வென்று பாராட்டுகள் பெற்றார்.

  திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். மலையாளத் திரையுலகில் 'நெல்லு', ‘இராசஅம்சம்', 'மக்கள்', 'இராகம்' என  மலையாளப்படங்களில் இவரது ஒளிப்பதிவு  பாராட்டப்பட்டது. 

  ஒளிப்பதிவினைத் தொடர்ந்து பாலுமகேந்திரா  'கோகிலா'. என்னும் கன்னடப் படம் மூலம் தன்னை இயக்குநராக வெளிப்படுத்தினார். இப்படம் தமிழ்ப்படுத்தப்பட்டும் வெளியிடப்பட்டது.

 பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. அதனைத் தொடர்ந்து  'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா இராகம்', 'வண்ண வண்ணப் பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'இராமன் அப்துல்லா', 'யூலி கணபதி', 'அது ஒரு கனாக் காலம்',  'தலைமுறைகள்' ஆகிய படங்களை இயக்கினார்.

 தமிழில் படங்கள் இயக்கியது மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு முதலான மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். படங்கள் இயக்குவது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்கள் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து வந்தார்.  இயல்பான வெளிச்சத்திலேயே படப்பிடிப்பு நடத்தி அதில் புகழையும் பெற்றார்.

 இலங்கை  வானொலி நாடகங்களில் நடித்துள்ளார்.

 இவரது அழியாத கோலங்கள் படத்தில் உணர்ச்சிக்  கவிஞர் காசி ஆனந்தன்  மூன்று சிறுவர்களில் ஒருவனாக நடித்திருப்பார்.

  இவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்துதான் கமல் சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதைப் பெற்றார்.

  மகேந்திரன் இயக்கி இவர்   ஒளிப்பதிவு செய்த 'முள்ளும் மலரும்' படம் இரசினிக்குத் திருப்பு முனையாக அமைந்தது.

  சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருதுகளும் கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றிருக்கும் சிறப்பாளர் ஆவார்.

.
 இயக்குநர்கள் பாலா,  ராம், சீமான். வெற்றிமாறன், சீனு இராமசாமி முதலான பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'தலைமுறைகள்'. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் ஆக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் ஒளிவிட்டுள்ளார்.  'தலைமுறைகள்' படத்தின் மூலம் தமிழையும் தன்னையும் மறக்க வேண்டா என வேண்டுகோள் விடுத்திருப்பார். இதுவே அவரது இறுதி ஆசை என எண்ணி அவரது அன்பர்களும் திரை அன்பர்களும் தமிழை மறக்காதிருப்பார்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக