பொள்ளாச்சியார், வள்ளலார் கொள்கையைப்
பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர்,
அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது பரிவு காட்ட வேண்டாவா?
மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக்
கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை.
தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை
எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ்
எழுத்துவடிவங்களைச் சிதைப்பதையே வாணாள் கொள்கையாகக் கொண்டுள்ளதே! இன்றைக்கு
அவரே நேரடியாக வரிவடிவச் சிதைப்பில் ஈடுபட்டுள்ளார். பின்புலத்தில்
உள்ளவர் யாராக இருப்பினும் வெளிப்பாடு இவர்தான் என்பதால் இவரிடம்தான் நாம்
முறையிட இயலும்.
அவருடைய ‘ஓம்சக்தி’ இதழில்
‘மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்’ என அவர் எழுதியுள்ளதைப் பார்த்துப்
பதைபதைத்த நண்பர் ஒருவர் தாய்மொழிநாளைக் கொண்டாட வலியுறுத்தும்
தமிழ்த்தொண்டர் சிவசுப்பிரமணியத்திடம் தெரிவிக்க அவர் வேதனையுடன் என்னிடம்
சுட்டிக்காட்ட நானும் படித்துப் பார்த்தேன். தமிழ் எழுத்துகளை
ஆங்கில/உரோமன் எழுத்து வடிவில் ஒலி பெயர்ப்பாக எழுதிப்படித்தால்தான் தமிழ்
வளரும் என 15 ஆண்டுகள் அரும்பாடுபட்டு ஒருக் கணியனை(software)
உருவாக்கியுள்ளாராராம். கிறுக்குத்தனத்திற் கெல்லாம் 15 ஆண்டுகள் தேவையா
என்பது புரியவில்லை.
1975 முதல் அமெரிக்கா சென்றுவரும் அவரிடம் தமிழ்க் குழந்தைகள் அறிவுக் கண்களைத் திறந்து விட்டனராம்.
ஆசிரியர் உதவி இல்லாமல் ஆங்கில எழுத்துகள் மூலம் சப்பான் மொழியையும்
இத்தாலி மொழியையும் அவர்கள் கற்கின்றார்களாம். தமிழையும் ஏன் அவ்வாறு
ஆங்கிலம் மூலம் கற்றுத் தரக்கூடாது எனக் கேட்டனராம். ஆங்கில எழுத்தில்
தமிழ் இலக்கணத்தையும் தமிழ் – ஆங்கில அகராதி ஒன்றையும் தந்துவிட்டால்,
தாங்களே தமிழைப் படித்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்களாம்.. அதுதான்
அவரைச் சிந்திக்கத் தூண்டியதாம்.. அகராதிகள் மூலம் அறிவை வளர்க்கலாம்
எனில், கல்விக்கூடங்களே தேவையில்லையே! அவற்றை எல்லாம் இடித்துத்
தள்ளிவிடுவோமா?
இதேபோல அமெரிக்காவிலுள்ள அறிஞர்கள்
தொல்காப்பியம் முதல் பெரியபுராணம் வரை உள்ள மூலத் தமிழ் நூல்களை உரோமன்
எழுத்துக்களில் அச்சிட்டுத் தந்துவிட்டால் போதும், தாங்களே அவற்றைப்
படித்துக் கொள்ளவும் ஆராய்ச்சி செய்யவும் உதவும் என்றனராம்.
இவ்வாறு உரோமன் எழுத்துகளில்
தமிழறியா மொழியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக இப்பொழுதும் நூல்கள்
வந்துள்ளன. தமிழ் இணையக் கல்வி்க்கழகத்தின் நூலகத்திலும் தொல்காப்பியம்,
சங்க இலக்கியங்கள் ஒலி பெயர்ப்பில் வந்துள்ளன. இதனால், எந்த அறிஞரும்
உருவானதாக வரலாறு இல்லை. அப்படியெல்லாம் இருப்பதுகூட அறியாமல் அதை
அரும்பெரும்வினையாக எண்ணியதுதான் வேடிக்கை.
இவற்றை எல்லாம் இப்பொழுது ஏன் கூறுகிறார் தெரியுமா? “பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாள் அல்லவா? நமக்கு நம் தாய்மொழியான தமிழ்தானே பண்பாட்டு. இன அடையாளம். அதைக் காக்க வேண்டாவா? உலகில் 43 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர். ஆனால், 39 நாடுகளில் தமிழே தெரியாமல் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு அந்த அடையாளத்தைக் காக்கும் வழியைச் சொல்லித் தர வேண்டாவா? அதற்குத்தானாம்!” தமிழை அழிப்பதுதான் தமிழர் என்னும் அடையாளத்தை அளிப்பதாகும் என்று எவ்வாறு மனம் கூசாமல் எழுதுகின்றார் என்றுதான் புரியவில்லை.
இவரிடம் முறையிட்ட சிறுவர்கள்
தமிழில் 247 எழுத்துகள் இருப்பது கடினம் என்று கூறினராம். எனவேதான், அருள்
உள்ளம் கொண்டு பெரும்பாலான தமிழ் எழுத்துகளைக் கருணைக் கொலை
செய்யமுடிவெடுத்துள்ளார் போலும்.
மேலும், ஒரு மொழியைப் பிற மொழியளார்
படிக்கத் தடையாக இருப்பது அதன் எழுத்துவடிவம்தானாம். எனவேதான் தெரிந்த
எழுத்து வடிவம் மூலம் தமிழைக் கற்பிப்பதற்காக இந்த முயற்சியாம். மொழி
என்பது வரிவடிவமும் ஒலிவடிவமும் இணைந்ததுதான் என்பதை அறியாதவரா இவர்?
அறிந்ததால்தான் வரிவடிவத்தை எப்படி யெல்லாமோ சிதைக்க முயன்றும்
முடியவில்லையே! இப்பொழுது வேறு வழியில் சிதைக்கலாம் எனப்
புறப்பட்டுவிட்டார் அருளாளர்.
வாதத்திற்காக இதை ஏற்று ஆராய்ந்து
பார்ப்போம். உலக மொழிகள் 2,796 என 1960இற்கு முந்தையப் புள்ளிவிவரப்படி
பேராசிரியர் சி.இலக்குவனார் ‘பழந்தமிழ்’ நூலில் குறித்துள்ளார். ஆனால்,
கோடை மொழியியல் நிறுவனம் (SIL- Summer Institute of Linguistics)
ஆய்விற்கு வராத பல மொழிகளை ஆண்டுதோறும் கணக்கிட்டு உலக மொழிகளின
எண்ணிக்கையை ஆண்டுதோறும் அறிவித்து வருகின்றது. இது வெளியிடும்
மொழித்தொகையின்படி(Ethnologue) 1969 இல் 4,493 மொழிகள்
கண்டறியப்பட்டதாகவும் 2013 இல் 7,105 வாழும் மொழிகள் கண்டறியப்பட்டதாகவும்
அறியலாம். இவ்வெண்ணிக்கையின்படி ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழி வரிவடிவம்
மூலம் பிற மொழிகளைப் படிப்பதாயின், 7,105 X 7,105 = 5,04,81,025
வரிவடிவங்கள் தேவை. ஒரே வரிவடிவங்களைப் பின்பற்றக்கூடிய சில மொழிகள்
உள்ளமையால் இதன் எண்ணிக்கை சிறிது குறையலாம். என்றாலும் ஐந்துகோடிக்குக்
குறையாத தாய் வரிவடிவ அயல்மொழிகள் என உருவாக்க வேண்டும். ஆனால், இதைப் பிற
மொழியாளருக்குச் சொல்லவில்லையே! சொன்னால் விட்டுவைக்க மாட்டார்கள் என
இவருக்குத் தெரியாதா?
உலக மொழியாம் ஆங்கிலத்தைப் படிக்க
நம் மக்கள் அல்லலுறுகிறார்கள். இதேபோல், பிரெஞ்சு, செருமனி, உருசியன்,
சீனம், சப்பான் மொழிகளைப் படிப்பதால் உலக அறிவு பெருகும். எனவே இதோ நான்
கண்டுபிடித்த தமிழ்வரிவடிவ ஆங்கிலம், தமிழ்வரிவடிவப் பிரஞெ்சு,
தமிழ்வரிவடிவச் செருமனி தமிழ்வரிவடிவ உருசியன், தமிழ்வரிவடிவச் சீனம்,
தமிழ்வரிவடி சப்பானியம் என உருவாக்கித் தருவதுதானே! தமிழில் இருப்பது
மொத்தம் 31 எழுத்துகள்தாம். சீன, சப்பானிய எழுத்து வடிவங்களை இந்த 31
வடிவத்தில் உருவாக்கலாமே!
ஆனால், இவ்வாறு செய்தால் தமிழை
அழிக்கும் நோக்கம் திசைதிரும்பிவிடுமே! எனவேதான், தமிழ் படிக்காத
தமிழர்கள் உள்ளார்களே எனத் தாய்மொழிநாளை முன்னிட்டுக் கவலைப்பட்டுக் கணியனை
உருவாக்கி உள்ளாராம்!
அவர் எப்படித்தான் தமிழை எழுத வேண்டும் என்கின்றார் என்ற ஆர்வம் வருகிறதா? அதையும் பார்ப்போம்!
சிவன் என எழுத வேண்டும் என்றால்
ஆங்கில எசு / s எழுத்தை எழுதி அதன் மேல் கொக்கி போட்டால் ‘சி’ ஆகிவிடுமாம்.
கொக்கி என்றால் தமிழில் உள்ள இகர வளைவு என எண்ணாதீர்கள். தலைகீழ் ‘ட’
வடிவம். ஆங்கில வி / v எழுத்தைக் குறிப்பிட்டால் ‘வ’ ஆகிவிடுமாம்.
ஆங்கிலச்சிறிய என் / n மீது புள்ளி வைத்தால் ‘ன்’ ஆகிவிடுமாம். இதே போல்
பார்வதி என்பதற்குப் பி / p பக்கத்தில் ஒற்றைக்கோடு போட்டால் பா
ஆகிவிடுமாம். பிற முதலில் குறிப்பிட்டால்போல்தான். எனவே இவ்வாறு எழுதினால்
பார்வதி என்றாகிவிடுமாம்.
“ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஒரு சொல்லில்
எத்தனை ஆங்கில எழுத்துக்கள் உள்ளனவோ, அதே எண்ணிக்கையில்தான் தமிழ்ச்
சொல்லின் எழுத்துக்களும் இருக்க வேண்டும்” என்பதுதான் இதன் சிறப்பியல்பு
எனப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அஃதாவது “தமிழ் எழுத்துகள் எத்தனையோ
அத்தனைக்கும், தான் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்தவில்லை. ஆங்கில
வரிவடிவத்திற்குள் தமிழ் வரிவடிங்களை அடைக்கின்றேன்” என்பதைத்தான்
அருவினையாகப் பெருமை யடைகிறார்.
இத்தகைய படுகொலைக்கென இவர் உருவாக்கியதுதான் மகாலிங்கம் உரோமன் கிரந்தம் (MRG) என்ற பெயரிலான கணியன்(Software).
இப்படு கொலையைத் தமிழைக்காப்பதற்காகக் கூறுவதுதான் வேடிக்கை. கல்லூரிவரை தாய்மொழிவழிக்கல்வி இல்லையல்லவா?. “இப்போக்கினைத் தடுத்தால்தான் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் இன அடையாளத்தையும் நாம் காப்பாற்ற முடியும்”
என்பதால் அவர் தரும் தீர்வுதான் சிறு அகவையிலேயே மனநோயாளிகளாக மாற்றும்
இந்த வழிமுறையாம்.. இரண்டு அகவையிலேயே மழலைக்கல்வி தருகிறார்கள் அல்லவா?
அதனை விளையாட்டுக் கல்வியாக மாற்றிவிட்டு, வரி வடிவம் படிக்கும் பருவத்தில்
ஒலி பெயர்ப்பு முறையில் கற்றுத் தருவதுதான் தமிழை வளர்க்கும் முறையாம்.
அது மட்டுமல்ல. “தமிழ் மாணவர்களுக்குக்கூட மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் தமிழ்ப் பாடத்தில் ஒரு புத்தகத்தை (Non Detail) உரோமன் வடிவில் ஒலிபெயர்த்து வாசித்துக் கொள்ளும் பயிற்சியைத் தர” வேண்டுமாம்.
தமிழை வளர்ப்பவர்கள் மெதுவாகச்
செயல்படுவதால், அழிக்க எண்ணுபவர்கள் விரைவாகவும் கூட்டாகவும்
சிந்தித்துச் செயலாற்றுகின்றனர். நாம், இதனை முளையிலேயே கிள்ளி எறியாததால்
இக்கூச்சல் பெருகிக் கொண்டுள்ளது.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
என்னும் தெய்வப்புவலர் திருக்குறளை(879) நாம் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி
அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை
உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்’
என்னும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் எச்சரிக்கையை நாம்
உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். சில திங்கள்முன்னர், மேதை
ஒருவர் நாளிதழ் ஒன்றின் மூலம் தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில்
ஈடுபட்டார். அதற்கு எதிர்ப்புகள் வந்தமையால் வேறொரு ‘மாமேதை’
இறங்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து மொழிப்பகைவர் வெவ்வேறு இடங்களில்
இருந்து வந்துகொண்டே இருப்பர்.நாம் இதனை எளிதாக எண்ணிப் புறந்தள்ளக்
கூடாது. இத்தகைய முன்னோர்களால்தான் தமிழ் வரிவடிம் சிதைந்து புதிய மொழிகள்
பல தோன்றித் தமிழ்ப் பரப்பு அழிந்துள்ள வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசமைப்புச்சட்டப்பிரிவு 29(1)
இல் தந்துள்ள ‘மொழியையும் எழுத்துவடிவத்தையும் பேணிக்காக்கும் உரிமை’க்கு
மாறாகச் செயல்படுவோர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய
வேண்டும்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
என்றும் ‘எண்ணெழுத்து இகழேல்’ என்றும் நம் ஆன்றோர் உரைத்த பொன்மொழிகளைப்
போற்றிச் செயல்படவேண்டும்.
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
-பாவேந்தர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக