‘இந்தி, இந்திய மக்களில் பெரும்பாலோர்
பேசும் இலக்கிய மொழிகளுள் ஒன்றன்று. இந்திய மொழிகளுள் சிறுபான்மையோர்
பேசும் சிறு இலக்கிய, இலக்கண வளமற்ற மொழியேயாகும். எனவே இந்தி மொழி
பேசுவோர் அம்மொழியைப் பேசாப் பகுதிகளில் வாழ்கின்ற (குறிப்பாகத்
தென்னகத்து) மக்களின் இசைவையும் நல்லெண்ணத்தையும் நாட்டின் ஒருமை உணர்வு
கருதிப் பெறல்வேண்டும். இவ்வாட்சி மொழியேற்பாடு இன்றோடு முடிவுறும்
நிலையற்ற செயலன்று இக்காலத்தினரால் வரும் காலத்தினருக்காகச் செய்யப்படும்
நிலைபெற்ற செயலாகும். எனவே, இதனை இந்தி ஆர்வலர் எவரும் மறக்கலாகாது’ என்று
இந்திய அரசலமைப்பு’ (Indian Constitution) என்ற நூலில் 212, 213 ஆகிய
பக்கங்களில் இந்திய ஆட்சி மொழி பற்றிய சட்டப் பிரிவின் 343ஆவது பகுதியை
விளக்கிடும் ஆசிரியர் திரு. வீ.கண்ணையா அவர்களின் கருத்தாகும்.
‘‘இந்தி மொழி வெறும் நாடோடிமொழியே!
இலக்கியத்திலோ, கலைச் சொற்களிலோ வளராத நிலையில் உள்ளது. துளசிதாசு
இராமாயணத்தைத் தவிர சிறந்த காவியம் இந்தியில் இல்லை. இந்திப் பிரச்சார சபைகளினால்
வெளியிடப்படும் நூற்கள் வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகள், நாடகங்களின்
மொழி பெயர்ப்புக்களே இந்நிலையில்தானே இந்தி வெறியர்கள் ஆங்கிலத்தை
விலக்கிவிட்டு அதனிடத்தில் இந்தியைத் திணிக்க முயல்கின்றனர். இவ்வேளையில்
அறிஞர் இராதாகிருட்டினன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பெற்று,
பல்கலைக்கழகங்களின் கல்விமுறை குறித்து வாதித்து, இறுதியில் ‘இந்தியமொழிகள்
அறிவியல் சம்மந்தப்பட்டகலைகளின் விளக்கத்திற்கேற்ற அளவு வளரவில்லை. எனவே,
ஆங்கிலமே தொடர்ந்து கல்வி மொழியாக இருத்தல் வேண்டும். அஃதன்றி இந்தியே
அதற்கான மொழியெனில் வேண்டாத விளைவுகளும் மாணவர் தேர்ச்சியில் குறைவும்
ஏற்பட்டு விடும்’’ எனக் குழு தன் முடிவை வெளியிட்டது. ஆனால் இந்தி
வெறியர்களோ, ஆங்கிலேயர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். ஆங்கில மொழியையும்
வெளியேற்று என்று முரட்டுத்தனமாகக் கூச்சலிட்டனர். அத்துடன் அன்றைய அரசியல் நிருணய சபையின்
காலத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் வீணாக்கின்றனர். இன்றியமையாச்
செயல்கள் இவை என்று சிந்திக்காமல் பகுத்தறிவைப் பறிகொடுத்தவர்கள் தாம்
காங்கிரசுக் கட்சியில் பாதிப்பேர் என்று அறியப் பரிதாபம் அடைகின்றோம்.
இந்தி வெறிக்கு இவர்களே அடிப்படையாவர். இந்நிலையால், இந்தி ஆதிக்கம்
குறைந்தபாடில்லை’ என்று, ‘‘இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்பு’’ என்ற
நூலில் திரு. ந.வெங்கட்ராமன் அவர்கள் (பக்கம் 199201) கூறுகிறார்.
‘‘ஆங்கிலத்தின் இடத்தை நிரப்பும் அளவிற்கு இன்னும் இந்தி வளரவில்லை’’ என, கே.எம்.முன்சி கூறுகிறார்.
மேற்காணும் சான்றுகள் நம் மனத்திரையில்
நிழலிடும்போது சில உண்மை உருவங்கள் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றுள் சில.
இந்தி வளமற்ற மொழி என்பதற்கு இந்தி பேசுவோரே சான்றாவர். ஒரு குறிப்பிட்ட
பகுதியினர் கூடி வளர்த்த மொழி என்பதற்கும் வரலாறு இல்லை. பற்பல
மாநிலத்தவரும் தத்தம் தாய் மொழியுடன் கலந்து பேசிவரும் கதம்ப மொழியினும்
கடைமொழி என்பது உணரப்படுகிறது. ஒருவர் பேசும் இந்தியை மற்றொருவர்கட்குப்
புரிந்து கொள்ளும் அளவிலும் இல்லை.
இத்தகைய கலப்பு நிறை, கடைமொழிதான் இன்றைய
இந்தியத் துணைக்கண்ட மக்களாட்சி அரசியலின் ஆட்சிமொழி என்றால் ஒரு புறம்
வேதனையும் மறுபுறம் வெட்கமும் தோன்றாமல் இருப்பதில்லை. ஏறத்தாழ
எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளின் கலவையாளர் எண்ணிக்கையைக் கணக்கில்
எடுத்துக் கொண்டு 42 விழுக்காடு மக்கள் தனியாக இந்தி பேசுவோர் என்றால்
உண்மை விரும்பிகள், குடியாட்சி நிலைக்க வேண்டும் என்று எண்ணுவோர் இச்செயலை
அறவழிப்பட்ட தென்றா கருதுவர்? சிரிப்பர், வேதனையும் கொள்வர், ஆட்சியின்
அவலம் கண்டு!
இந்திய அரசியலமைப்பு பதினான்கு மொழிகளை
ஆட்சிமொழிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்தி தான் முதன்மொழி என்ற
நிலையில் இன்று காட்சி தருகின்றது. ஏனெனில், மைய அரசுப் பணித் துறைப்
பதவிகளில் முதலிடம் பெற வேண்டுமானாலும், பதவி உயர்வு அடைவதாயினும்
ஊதியத்தில் உயர்வு பெறவேண்டுமாயினும் இந்தியே வேண்டப்படுகின்றது.
(அண்மைக்கால அரசு ஆணை இதனை அறிவிக்கின்றது.) மாநிலங்களிலுள்ள இந்திப்
பிரச்சார சபைகளின் ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அரசே ஏற்றுக் கொண்டு
செலவு செய்ய முடிவெடுத்துவிட்டது. இதற்கெனத் திட்டக்குழு ஒரு கோடி வெண்பொற்
காசுகளை ஒதுக்கியுள்ளது என்று மக்களவையில் இந்தியக் கல்வித்துறைத்
துணையமைச்சர் திரு. பகத்தர்சன் அறிவித்துள்ளார். தென்னக மாநிலங்கள் தரும்
இசைவைப் பெற்று இந்தி மொழிப் பல்கலைக் கழகத்தை நிறுவவும் அரசு
எண்ணியுள்ளது. இவை காரணமாக இந்திக்கு முதன்மை ஏற்படுத்தி வருகிறது. இந்தி
வளர்ச்சிக்காக இந்தி (ய) அரசு பலகோடி வெண் பொற்காசுகளை மக்களின்
வரிப்பணத்தினின்றும், நாட்டைச் சூழ்ந்துள்ள இக்கட்டான நிலையையும்
மறந்துவிட்டுச் செலவு செய்து கொண்டு வருகிறது. இவையெல்லாம் மக்களாட்சியின்
மாண்பை உயர்த்துவனவா? அன்றி, தாழ்ந்துள்ளனவா? என்று எண்ணிப்பார்க்க
வேண்டும் ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு கட்சி,. ஒரே ஆட்சி என்ற நிலை இன்று
இந்தியாவில் நடைபெறுகிறது என்றுதான் மக்கள் எண்ணுவர். ஏனெனில் மக்களின்
கருத்தை எதிரொலிக்கும் எதிர்க் கட்சிகளின் வேண்டுகோளையும் அரசு ஏற்றுச்
செயல்பட வேண்டும் ஆட்சிமொழிகளென்று வரையறுக்கப்பட்டுள்ள பதினான்கு
மொழிகளுள் ஒன்றான இந்திக்கு மட்டும் முதலிடம் கொடுத்தல் அறநெறி ஆட்சி
அன்று. மாறாக மக்களின் மனக்கருத்தை மதியாத மற வெறியாளரின் ஆட்சி என்றே
கூறவியலும்.
மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
என்பது உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெள்ளத்தெளிய விளங்கும் உண்மையாகும்.
முதலாவதாக இத்திட்டப்படி ஒரு மாணவனோ அன்றி ஆசிரியரோ மூன்று மொழிகளைத்
தெரிந்திருத்தல் வேண்டும். ஒன்று அவரவர் தாய் மொழி அடுத்து ஆட்சி மொழியென
ஆட்சியினரால் மாற்றிக் கூறப்படும் இந்தி. மொழி மூன்றாவதாக ஆங்கிலமொழி.
பொதுவாக மாணவனோ அன்றி ஆசிரியரோ
இத்திட்டத்தால் தமக்குக் கொடுக்கப்படும் பயிற்சிக் காலத்துள் இம்மொழிகளை
நன்முறையில் கற்றல் இயலாது. தாய்மொழி வழியாகக் கற்கும் கல்வியால் பெறும்
பயனே சிந்தனையையும் மொழித் தூய்மையையும் இலக்கிய இலக்கண வளங்களையும்
மொழியின் எளிமைத் தன்மையையும் கற்கும் காலத்தின் அளவையும் சிறப்பாக
அமைத்துக் கொடுக்கும். அஃதன்றி வேற்று மொழி வழியாகக் கற்கும் போது
மேற்கண்டவை அனைத்தும் சிறப்புற அமையா, மேலும் மும்மொழிகளுள் எம்மொழியிலும்
சிறந்த அறிவைப் பெறல் என்றுமே இயலாது.
அடுத்து இன்றைய இந்திய அரசியலமைப்பு
விதிப்படி அவ்வமைப்பு ஏற்பட்ட பதினைந்தாவ தாண்டில் இப்போதுள்ள ஆங்கிலம்
அதாவது 1965இல் அகற்றப்பட்டு விடும். அதன்பிறகு தாய்மொழி, இந்தி என்ற இரு
மொழிக் கொள்கை உருவாகிவிடுகிறது. இதனால் இந்தியைக் கட்டாயம் கற்றாக வேண்டிய
வன்முறை, சட்டத்தின் மூலம் நம்மேல் திணிக்கப்படுகிறது. இஃது இந்தி
பேசாதோர் பெறும் நிலை இந்தி பேசுவோர் பெறும் நிலை என்ன? அவர்கள் ஒரே
மொழியைக் கற்றால் போதும். அதாவது அவர்களின் தாய்மொழியைக் கற்றுக் கொண்டாலே
போதுமானதாகும்.
(தொடரும்.)
- குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக