ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

சேம வங்கியின் பெயரில் போலி மின்னஞ்சல் : fake email in the name of Reserve Bank


சேம (ரிசர்வ்) வங்கி பெயரில் போலி மின்னஞ்சல்:  இணை ய  மோசடி க் கும்பலின் தொடரும் கைவரிசை

ஆன்-லைன் வங்கிக் கணக்குகளில், பணம் திருடும் கும்பல், ரிசர்வ் வங்கியின் பெயரில் அனுப்பிய போலி இ-மெயில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு நாளுக்குள் வங்கிக் கணக்கின், "டேட்டாபேஸ்' அனுப்பவில்லை எனில், ஆன்-லைன் கணக்குகள் முடிக்கப்படும்' என, அதில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், வங்கிகளும், வாடிக்கையாளர்களும், பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.
" ஆன்-லைன் வாடிக்கையாளர்கள் உஷார்' என, அனுப்பப்பட்டு உள்ள இ-மெயிலில் கூறப்பட்டிருந்ததாவது: ரிசர்வ் வங்கி, 24 மணி நேரம் இயங்கும் மத்திய கண்காணிப்பு மையத்தைத் துவங்கியுள்ளது. இணையதள வங்கி மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றங்களை, இம்மையம் கண்காணிக்கும். இதற்காக, வங்கியின் இணைய தள வங்கி வாடிக்கையாளர் கணக்கு விவரங்கள் தேவைப்படுகின்றன. அனைத்து வங்கிகளும், தங்களுடைய இணையதள வங்கி தகவல் தொகுப்புகளை, ரிசர்வ் வங்கியின், 24 மணி நேர கண்காணிப்பு மையத்தில் இணைக்க வேண்டும். இதற்கு, இ-மெயிலுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பைத் தொடர்பு கொண்டு, உங்களுடைய வங்கியைத் தேர்வு செய்து கொள்ளலாம். இ-மெயிலின் இணைப்பு, 24 மணி நேரத்துக்குத் தான் தொடர்பு கொள்ளும்படி இருக்கும். அதற்குப் பின் தொடர்பு கொண்டால், உங்களுடைய இணையதள வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். மீண்டும் கணக்குகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வர, ரிசர்வ் வங்கியை அணுக வேண்டியிருக்கும். எனவே, உடனடியாக உங்கள் கணக்குகளை, ரிசர்வ் வங்கி கண்காணிப்புப் மையத்துடன் இணைத்து விடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ செய்தி வடிவில், இ-மெயில் இல்லாமல் இருந்ததும், இ-மெயிலில் குறிப்பிட்டிருந்தபடி, கணக்கை, "அப்-டேட்' செய்ய முயன்றபோது, ஆன்-லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ரகசிய குறியீட்டு எண், மற்றும் கணக்கைப் பயன்படுத்தும் நுழைவு எண் ஆகிய விவரங்களைத் தரும்படி கோரப்பட்டதும், பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழக்கமான செயல்பாடுகளிலோ, வங்கியிலோ, வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்கள் கேட்கப்படுவதில்லை. இதையடுத்து, தனிநபரின் இணையதள வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, அதன்மூலம் பணம் திருடுவதற்காகவே, இது போன்ற இ-மெயில்கள் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரியிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் பெயரில், போலி இ-மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இதை நம்பி, வங்கிகளோ, வாடிக்கையாளர்களோ, ஆன்-லைன் பரிவர்த்தனை விவரங்களை, யாருக்கும் அளிக்க வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம், www.rbi.org.in என்ற முகவரியில் தான் இருக்கும். ஆனால், நேற்று அனுப்பப்பட்ட இ-மெயில், alert@rbi.org என்ற முகவரியில், அனுப்பப்பட்டு உள்ளது. ஆன்-லைன் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, மோசடி செய்யும் கும்பலே, இது போன்ற இ-மெயிலை ரிசர்வ் வங்கியின் பெயரில் அனுப்பியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை, அறிமுகம் இல்லாத இணைய தளத்திலோ அல்லது நேரடியாகவோ அளிக்க கூடாது என, வங்கிகளை ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதும், வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக