வெள்ளி, 7 செப்டம்பர், 2012

உருகி மிரட்டும் பனிப்பாறைகள்தினமலர்
உருகி மிரட்டும் பனிப்பாறைகள்


ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள பிரமாண்ட பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக, நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். துருவ பகுதியில் உள்ள பனிப்பாறைகள், உலக தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதிலும், கடல் மட்டத்தை அளவாக வைத்திருப்பதிலும், முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, 1979ம் ஆண்டிலிருந்து, பனி உருகும் தன்மை செயற்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தற்போது, பூமி வெப்பமடைதலின் காரணமாக, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆர்க்டிக் கடலில், குறிப்பிட்ட பகுதியில் 2007ம் ஆண்டு 4.17 சதுர கி.மீட்டராக இருந்த பனிப்பாறையின் அளவு, தற்போது 4.1 சதுர கி.மீ., ஆக குறைந்துள்ளது. பொதுவாக, குளிர்காலத்தில் பனியின் உருகும் தன்மை குறைவாக இருக்கும். ஆனால், கோடை காலத்தில் உருகும் தன்மை ஆண்டுதோறும், 13 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், 2016ம் ஆண்டு ஆர்க்டிக் கடல், பனிப்பாறைகள் இல்லாததாக மாறிவிடும் என்கின்றனர். இதனால், காலநிலையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், கடல் நீரின் அடர்த்தி குறைகிறது. நீர்மட்டம் அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள், வன விலங்குகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைக்கு அதிகரித்து வரும் வெப்பநிலை, காடுகள் அழிப்பு, இயற்கைக்கு எதிராக மனிதர்களின் செயல்கள் போன்றவை காரணம். எனவே, இயற்கை சமநிலையை பேண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக