வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம்: தொலை பேசியில் சொன்னால் வீட்டுக்கு வரும்


தினமலர்

தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம்:   தொலை பேசியில் சொன்னால்  வீட்டுக்கு வரும்

சென்னை: காலரா, வாந்தி, பேதி பாதிப்புக்கு, தரமற்ற குடிநீரை மக்கள் பருகியதுதான் காரணம் என, தெரிய வந்துள்ள நிலையில்,சென்னையில் குடிநீர் வாரியம் விழிப்படைந்துள்ளது. தனியாரிடம் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டாம்; நாங்களே குறைந்த விலையில், குடிநீர் தருகிறோம் என அறிவித்துள்ளது.
"தனியாரிடம் வாங்காதீர்':

சென்னையில் கடந்த இரண்டு மாதமாக, குடிநீரில் கழிவு நீர் கலப்பு, குளோரின் குறைபாடு, குப்பைகள் தேக்கம் போன்ற காரணங்களால், காலரா, வாந்தி, பேதி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இரண்டு மாதங்களில், 600 பேர் வரை வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் தரமற்ற குடிநீர் தான் என்று கூறப்பட்டது. குடிநீரில் போதிய அளவு குளோரின் சேர்க்காததால் நோய்கள் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை குடிநீர் வாரியம் விழிப்படைந்து, "தனியாரிடம் தண்ணீர் வாங்க வேண்டாம்; நாங்களே தருகிறோம்' என, தெரிவித்துள்ளது.
6,000 லிட்டர் 400 ரூபாய்:


குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை குடிநீர் வாரியம் மூலம், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலமும், குடிநீர் போதிய அளவில் கிடைக்காத பகுதிகளுக்கு, லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதிக அளவு குடிநீர் தேவைப்பட்டால், குறிப்பிட்ட விலை அடிப்படையில், குடிநீர் வழங்கப்படுகிறது.
அலைபேசியில்...:


"டயல் பார் வாட்டர்' மூலம், 6,000 லிட்டர் குடிநீர், 400 ரூபாய் வீதமும், 9,000 லிட்டர் குடிநீர், 600 ரூபாய் வீதமும், லாரிகள் மூலம் வினியோகித்து வருகிறோம். குடிநீர் தேவைப்படுவோர், பகுதி பொறியாளர்களை அலைபேசியில் அழைத்தால், வீடுகளுக்கு வாரியத்தின் குடிநீர் வந்து சேரும். பொதுமக்கள் அதிக விலை கொடுத்து, தனியார் நிறுவனங்களிடமிருந்து தண்ணீர் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக