ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கொழும்பில் பாரதியார் விழாவா?

கொழும்பில் பாரதியார் விழாவா? உடனே நிறுத்துமாறு தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோள்.


நட்பு இணைய இதழ் பதிவு செய்த நாள் : 29/04/2012


கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து சென்னை பாரதியார் சங்கம் இலங்கையில் உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்த உள்ளது. இதனை உடனே நிறுத்தி வேறு நாட்டில் நடத்துமாறு பாரதியார் சங்கத்திற்குத் தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இனப் படுகொலை புரிந்த நாட்டில் சுற்றுலாவாம்!


பேரினப்படுகொலை புரிந்த சிங்களக் கொடுங்கோலரசு எல்லாவகையிலும் தான் தமிழ் மக்களை மதித்து அவர்கள் நல்வாழ்வில் கருத்து செலுத்துவதுபோல் காட்ட முயன்று வருகின்றது. இந்திய அரசுடன் சேர்ந்து பல நாடகங்களையும் நடத்தி வருகின்றது. ஒரு வதை முகாமிலிருந்து மற்றொரு வதை முகாமிற்கு மாற்றி விட்டுக் குடியமர்த்தியதாகக் கதை கட்டுகிறது. அங்கே உண்மையான மனித நேய அமைப்புகளும் மனித நேய ஆர்வலர்களும் நுழைவதற்குத் தடை விதிக்கின்றது. தன் ஊதுகுழலாக உள்ளவர்களை மட்டும் உள்ளே வரவிட்டுத் தான் சொல்ல வேண்டிய பொய்களை அவர்கள் மூலம் உலவ விடுகின்றது. அங்கேதான் பாரதியார் சங்கம் விழா நடத்துகின்றது. கொழும்பு நகரில் 2.6.12 அன்று “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என வேதனையுற்ற பாரதியாருக்கு விழாவாம். அதற்கு முன்னதாக31.5.12 அன்று கண்டி சுற்றுலாவாம்; 1.6.12 அன்று கதிர்காமம் சுற்றுலாவாம். வாய்ப்பும் பாதுகாப்புச் சூழலும் நன்கு அமைந்தால் ஒருநாள் யாழ்ப்பாணப் பயணமும் அமைக்க விரும்புகின்றனராம். வாய்வாள் வீசிச் சென்ற மேதகுத் தலைவர்கள் எல்லாம் திரும்பியபின் அமைதியாக அடங்கி உள்ள பொழுது இவர்கள் மட்டும் அங்கே தமிழர்களைச் சந்திக்க முடியும் என்று நம்புவார்களா என்ன?

எதிர்க்க வேண்டியவர்கள் கை கோக்கும் கொடுமை


     “ நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் – இது
     நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
     பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் “
எனப் பாரதியார் வழியில் வாழ்வுரிமைக்குப் போராடுகின்றவர்களைப் படுகொலை செய்தநாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் அந்த மண்ணில் சுற்றுலா செல்கிறார்களாம்!

    “என்றுதணியும் இந்த சுதந்திரமோகம்
     என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “
என்றும்
    “ வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
     வேறொன்று கொள்வாரோ ”
என்றும் பாரதியார் வழியில் விடுதலை வேட்கை கொண்டதால்
உயிரையும் உடைமையையும் உற்றார உறவினரையும் நிலத்தையும் இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு எச்சில் துண்டுகளை எறிய நினைக்கிறது சிங்கள கொடுங்கோல் அரசு. அதற்கும் அதற்குத் துணை நிற்கும் பிற நாடுகளுக்கும்

    “ மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
      மாண்பினை இழப்பரோ? “
என்பதை உணர்த்த வேண்டிய பாரதியார் சங்கம், கொடுங்கோலர்களுடன் கைகோக்கலாமா?அங்குள்ள தமிழர்களுக்காகத்தான் விழா நடத்துவதாகச் சொல்லலாம். ஆனால், வஞ்சகக் கும்பலால் ஆட்சியில் உள்ளவர்களும் விழாவிற்கு அழைக்கப்படுவார்கள் அல்லவா?அவர்களுடன் இணைந்து அவர்கள் கொலைகாரர்கள் அல்லர் என உலகிற்குக் காட்டப் போகிறார்களா?


      “விதியே விதியே தமிழச்சாதியை
       என்செயக்கருதி இருக்கின்றாயடா? “
என உள்ளம் வெம்பிய பாரதியார்

     “ தமிழச்சாதி தடியுதை உண்டும்
     காலுதைஉண்டும் கயிற்றடி உண்டும்
    வருந்திடும் செய்தியும மாய்ந்திடும் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளால் சாதலும் …..
                             ……. நலிவினால் சாதலும்
    இஃதெலாம் கேட்டும் எனது உளம்அழிந்திலேன் ”
என உள்ளம் நைந்த பாரதியார், இன்றைக்கு இருந்தால், கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பெற்ற நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை கண்டு குருதிக்கண்ணீர் வடித்து உலக மக்களைத் திரட்டி இருக்கமாட்டாரா? அவர் பெயரால் சங்கம் வைத்திருப்போர் அங்கே மக்கள் இன்பமாக வாழ்ந்து இலக்கியச் சுவை உண்பதாகக் காடடும் வகையில் அங்கே விழா நடத்தலாமா?

காந்தி நீங்களுமா?

நடத்துவது யார்? உயர்தனிச் செம்மொழித் தகுதியுடைய தமிழுக்குப் போட்டியாகத் தகுதியற்ற மொழிகள் உரிமை கொண்டாடுவதற்காக வழக்கு தொடுத்தவர் – வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டல் வந்தும் பணியாதவர் – நான் தமிழ்ப் போராளி பேராசிரியர் இலக்குவனார் மாணவன்; எனவேதான் தமிழ் உணர்வோடும் போராளிக் குணத்தோடும் இருக்கின்றேன் எனச் சொல்பவர் – மதிப்பிற்குரிய மூத்த வழக்குரைஞர் காந்திஅவர்கள்தாம். எனவே, அவரை உலகத்தமிழர்கள் சார்பில் தமிழ்க்காப்புக்கழகம் மூலம் அன்போடு வேண்டுகின்றோம்! தமிழ்நலம் நாடும் காந்தி அவர்களே! வரும் ஆண்டில் தமி்ழ் ஈழத்தில் பாரதியார் விழா நடத்தலாம். இப்பொழுது உடனே இத்திட்டத்தைக் கை விடுங்கள். மனிதநேய உணர்வுள்ள வேறு நாட்டில் பாரதியார் விழா நடத்துங்கள். நீங்கள் அங்கே விடுதலை விழா நடத்த வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை. பொறுமையுடன் இருங்கள்.


இவ்வாறு தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்துள்ளது போல், உலகத் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் உடனே கண்டனக் குரல் தெரிவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக