சொல்கிறார்கள்
ஆறுதல் தான் வேண்டும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் வழங்கும் ராஜேஸ்வரி: என் சொந்த ஊர் ஈரோடு. கணவர் வேன் டிரைவர். இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் படிக்கின்றனர். நர்சிங் முடித்து விட்டு, தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். சேவையையே முக்கிய நோக்கமாக, நினைத்து படித்த இந்த படிப்பிற்கு, அங்கு அதை செயல்படுத்துவதற்கான சூழல் முழுமையாக இல்லை. பணம் இருந்தால் நல்ல சிகிச்சையும், இல்லாவிட்டால் நோயாளிகளிடம் கருணை காட்டாமல் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளின், போக்கே வேறு மாதிரி உள்ள து.இந்நிலையில் தான், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், "இமயம் அறக்கட்டளை'யில் கைவிடப்பட்ட, புற்று நோய் நோயாளிகளைக் கவனிக்கும் பணிக்கான வாய்ப்பை அறிந்து, நான் அங்கு சென்றேன். ஆரம்பத்தில் இங்குள்ள நோயாளிகளின் நிலையைப் பார்க்கும் போது, மனம் முழுக்க வேதனை நிரம்பும். இப்போது அதை வேதனையாகச் சுமக்காமல், அவங்களுக்கான பிராத்தியாக மாற்றும் நேர்மறையான பக்குவம் வந்துள்ளது. அறக்கட்டளையில் உள்ள மருத்துவர்களின் சேவை மகத்தானது.குடும்ப உறவினர்களால், பார்த்துக் கொள்ள முடியாத நிலையிலும், சிகிச்சையளிக்க வசதியில்லாத நிலையிலும் இங்கு கொண்டு வந்து விட்டு விடுகின்றனர். மருந்து மாத்திரைகளை விட, அவர்களுக்கு உடனடித் தேவை அன்பான பேச்சு தான். உடை மாற்றி விடுவது, உணவு சாப்பிட வைப்பது, புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு, அதை சுத்தம் செய்து, மருந்து போடுவது என்று அனைத்து பணிவிடைகளையும் செய்கிறேன். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இறுதி நாட்களை இங்கு கழித்துள்ளனர்.எய்ட்ஸ், புற்று நோய் மட்டுமல்ல, கை வலி, முதுகு வலி என்று உடல் முடங்கும் நம் உறவுகளின் முதல் மருந்து, அனுசரணையும், ஆறுதலும் தான். பணம் செலவழித்து, வைத்தியம் பார்க்க முடியாவிட்டாலும், அவர்களின் கை பிடித்து நம்பிக்கை சொல்லுங்கள். அது தான் அவர்களின் முதல் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக