திங்கள், 20 பிப்ரவரி, 2012

no care about Vallalaar house:


"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய' ராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலார் வாழ்ந்த சென்னை இல்லமே இன்று கவனிப்பாரற்று வாடிக் கொண்டிருக்கிறது. உலகிற்கே ஜீவகாருண்யத்தை போதித்த வள்ளலார் வாழ்ந்த இடத்தில், இப்போது அசைவ வாடை வீசிக்கொண்டிருக்கிறது.

கடந்த, 1825ஆம் ஆண்டில், ராமலிங்கம் இரண்டு வயதாக இருந்த போது, அண்ணன் சபாபதியுடன் ஏழுகிணறு, வீராசாமி தெருவில் உள்ள 31ம் நம்பர் வீட்டின் மொட்டை மாடியில் வாடகைக்கு குடியிருந்தார். 33 ஆண்டுகள் சென்னை ஏழுகிணறில் தங்கியிருந்தார்.

உலகமே பேசும் ஜீவகாருண்யம்: வள்ளலார் போதித்த ஜீவகாருண்யம், கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர். எல்லா உயிர்களும் நமக்கு சகோதரர்களே. சாதி, சமய, மத மற்றும் இன வேறுபாடுகளை தவிர்த்தல். உண்மை மற்றும் அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க, என அனைத்து அம்சங்களும் இன்று உலகளவில் போதிக்கப்பட்டு வருகிறது. உலகமே பேசப்படும் வள்ளலார் வாழ்ந்த இடத்தை அரசுடைமையாக்கி அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என, பக்தர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

திருவருட் பிரகாச வள்ளலார் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: வள்ளலார் வாழ்ந்த இடம் என்பதால் தான் அவர் வாழ்ந்த வீட்டை சுற்றியுள்ள பகுதிக்கு வள்ளலார் நகர் என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது இந்த வள்ளலார் நகர் என்ற பெயர் மட்டுமல்லாது, அவர் வாழ்ந்த இடத்தின் பெருமையும், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

காற்றில் பறந்த சட்டசபை தீர்மானம்: அ.தி.மு.க., ஆட்சியில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அ.தி.மு.க., இயற்றிய தீர்மானம் என்பதாலேயே அடுத்து ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை கவனிக்க வில்லை.

சைவத்தை போதித்தவர் வாழ்ந்த வீட்டில், அசைவ வாடை: வள்ளலார் 33 ஆண்டுகள் வாழ்ந்த இல்லம் லீலாவதி என்பவரின் பாட்டிக்கு சொந்தமானது. தற்போது லீலாவதி தான் இந்த வீட்டுக்கு உரிமையாளர். இடையில் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தவர்கள் ராமமூர்த்தி மற்றும் தனபால் சகோதரர்கள். லீலாவதியின் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்காக ஒரு முறை பணம் கொடுத்து உதவினர். லீலாவதியால் இன்று வரை அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாததால், வள்ளலார் வாழ்ந்த இல்லம் தற்போது, தனபால் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வள்ளலார் வாழ்ந்த இல்லம், பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பிரிண்டிங் பிரஸ் மற்றும் தனித்தனியாக மூன்று குடித்தனங்கள் உள்ளது. தைப்பூசம் மற்றும் வள்ளலார் பிறந்த தினத்தில் மட்டுமே, வள்ளலார் வாழ்ந்த அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்கின்றனர். மற்றபடி, 363 நாட்களும், உலகுக்கே சைவத்தை போதித்த வள்ளலார் வாழ்ந்த வீட்டை சுற்றிலும் அசைவ வாடை தான் வீசுகிறது.

காணாமல் போகும் வள்ளலார் வாழ்ந்த இடம்: வள்ளலார் போதித்த அறநெறிகள் இன்று உலகளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அவர் 33 ஆண்டுகள் வாழ்ந்த இல்லம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வள்ளலார் வழி சென்ற விவேகானந்தர், சில நாட்களே தங்கியிருந்த இடம் இன்று மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லமாக காட்சி தருகிறது. அதுபோல், திருவருட்பா மூலம் தமிழுக்கு அருட்தொண்டாற்றிய ஜீவகாருண்யத்தை போதித்த வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி, தியான மையமாகவோ அல்லது நினைவிடமாகவோ அரசு மாற்ற வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க., அரசு அரசுடைமையாக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, கிடப்பில் போன அந்த தீர்மானத்தை மீண்டும் அ.தி.மு.க., அரசு தான் உயிர்ப்பிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுப்பது யார்? இதுகுறித்து, கடந்த 2008ல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான விவரங்கள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. வள்ளலார் பிறந்த நாளுக்கு, மது மற்றும் மாமிசக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தால் போதாது, தலைநகர் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லத்தை, அரசு அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

- எஸ்.சந்திரசேகர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக