சனி, 16 ஜூலை, 2011

New facility introduce in 108 ambulance: மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 மருத்துவ ஊர்தியில் புதிய வசதி விரைவில் அறிமுகம்

பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. அவசர மருத்துவ ஊர்தி வந்தும் மருத்துவமனைக்குச் செல்லும் மு்னபே உயிரிழந்தோர் பலர் உள்ளனர். இனி அந்த நிலை மிகவும் குறையும். எனினும் பணியாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணிநேரம் ஆக்கியும் அவர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளவர்களுக்கான ஊதியத்தை வழங்கியும்  தேவையான மருந்துப்பொருள்கள் வழங்கியும் பணியாளர்கள்  ஈடுபாடடுடன் பணியாற்ற வகை செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்சில் புதிய வசதி விரைவில் அறிமுகம்
சென்னை: திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை, விரைந்து காப்பாற்ற, 108 ஆம்புலன்சில் புதிய வசதி செய்யப்பட உள்ளது. கடும் நெஞ்சு வலி காரணமாக ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, அவருக்கு சாதாரண நெஞ்சுவலியா அல்லது மாரடைப்பா என்பதை, ஆம்புலன்சில் செல்லும்போதே கண்டுபிடித்து, மாரடைப்பு எனில், அதற்குரிய சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2008ம் ஆண்டு செப்., 15ம் தேதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. முதலில், 20, ஆம்புலன்ஸ் களுடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது, 428, ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், இந்த ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நகர்ப்புறங்களில், சராசரியாக, 17 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் சராசரியாக, 20 நிமிடங்களிலும் சிகிச்சை கிடைக்கும் வகையில், இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவி உட்பட, முதலுதவி சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இதில் உள்ளன. இந்த திட்டத்தில், இதுவரை, 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்காக தனி, ஆம்புலன்ஸ் வசதி, கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, மாரடைப்பு நோயாளிகளை விரைந்து காப்பாற்ற, புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. மாரடைப்பு ஏற்படும்போது, நேர விரயத்தை தடுக்கவும், விரைந்து சிகிச்சை அளிக்கவும் இத்திட்டம் உதவும். நெஞ்சு வலி காரணமாக, 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, அவருக்கு, "இ.சி.ஜி.,' வரைபடம் எடுக்கப்படும். அந்த வரைபடம், மொபைல் போன் மூலம், சென்னையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சென்னை அலுவலகத்தில் உள்ள மருத்துவக் குழு, இந்த வரைபடத்தைக் கொண்டு மாரடைப்பின் தீவிரத்தை கணிக்கும். பின், அருகில் உள்ள தீவிர இதய சிகிச்சை பிரிவை அறிந்து, அது குறித்து, தகவல் கொடுக்கும். மேலும், அந்த மருத்துவமனைக்கும், முன்பே தகவல் தெரிவித்து நோயாளிக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்ய கேட்டுக்கொள்ளும். இந்த, புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை, அரசுடன் இணைந்து செயல்படுத்தும் ஜி.வி.கே., நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ், இது குறித்து கூறும்போது,""இத்திட்டம், முதல் கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் செயல்படுத்தப்படும். பின், படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடும் மனக்குறையுடன் உள்ளனர்.

இது குறித்து, இத்திட்டத்தில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரம் பணிபுரிகிறோம். இப்போது, மாதச் சம்பளம், 5, 500 ரூபாய். இதில், பெண் ஊழியர்கள் அதிகம். பல ஊர்களில், பொது இடங்களில் தான் ஆம்புலன்சை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், மருந்து தட்டுப்பாடு இருந்தது. இப்போது ஓரளவு மருந்து, "சப்ளை' சீரடைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் உட்பட எல்லாவித நோயாளிகளையும் தொட்டு தூக்குகிறோம். ஆனால், எங்களுக்கு போதிய கையுறைகள் வழங்குவது இல்லை. ஆம்புலன்சை சுத்தம் செய்ய தேவையான அளவு, "டெட்டால், பினாயில்' வழங்குவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து, மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: பணியில் சேரும்போதே, 12 மணி நேர வேலை என்று சொல்லித்தான் சேர்க்கிறோம். எவ்வளவு ஊதியம் என்பதையும் முன்பே தெரிவித்து விடுகிறோம். இது லாப நோக்கமில்லாத சேவை நிறுவனம். இருப்பினும், ஆண்டுதோறும் சம்பள உயர்வு அளிக்கிறோம். ஆம்புலன்சை நிறுத்த, பல ஊர்களில் இடம் இல்லைதான். கழிப்பிட வசதி உள்ள இடத்தில் நிறுத்த அரசின் உதவியை கோரி உள்ளோம். "டெண்டர்' நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதால், மருந்து "சப்ளை'யில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இப்போது அதுவும் சரி செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். இவ்வாறு பிரபுதாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக