திங்கள், 11 ஜூலை, 2011

kannadars supporting eezha thamizhar - meenakam news: ஈழத் தமிழர்களுக்குத் தோள் கொடுப்போம் -மீனகம் செய்தி


ஈழத் தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்” – கன்னட மனித உரிமை அமைப்புகள் உறுதியேற்பு [படங்கள்]

தமிழகத்தைச் சேர்ந்த சேவ் தமிழ் இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்), கண. குறிஞ்சி (PUCL) , அமரந்தா (இலத்தின அமெரிக்க நட்புறவு அமைப்பு), ஆகியோரின் முன்னெடுப்பின் விளைவாய் ,கடந்த ஜூன் 2ஆம் தேதி பெங்களுருவில், கர்நாடக, ஆந்திர , கேரள, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி, “போர்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தினைத்” தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide – Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.
மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று – Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.
மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வை பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்-ஐ சேர்ந்த திரு.நாராயணன் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் தொடக்கத்தில், சேனல்-4 செய்தி தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் ‘ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
தொடர்ந்து மன்றத்தை அறிமுகம் செய்து மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு. நகரிகரே ரமேஷ் பேசினார்.
’2009 மே 18, 19-ல் நடந்த நிகழ்ச்சிகள் மனித உரிமை ஆர்வலர்களின் மனங்களை மட்டும் வேதனைப் படுத்துவதல்லாமல் ஒட்டு மொத்த மனித குலத்தையும் உறைய வைப்பதாக இருக்கின்றது. இது தமிழர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல. இதுமாதிரியான ஒரு கொடூரம் நம் கண்முன் நடந்தும் கூட நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப்போகிறோமா?, நாசிக்கள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய யூதர்கள் மீதான இனப்படுகொலை என்பது கடந்தகாலம். ஆனால் இன்று நம் கண்முன்னே நிகழ்காலத்தில் ஒரு இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது. அந்த இலங்கை அரசுக்கு இந்திய அரசும் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இலங்கை பாரதப் பண்பாட்டுடன் தொடர்புடையது. எனினும் இந்திய மக்கள் மௌனமாக இருந்தனர். தற்போது மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். போர் முடிவுற்ற நிலையிலும் தமிழ் மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அங்குக் கொல்லப்பட்ட மக்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர இயலாது. ஆனாலும், அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இலங்கை அரசு மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. இந்தக் குற்றங்களுக்காக முன்னாள் படைத்தளபதி பொன்சேகாவும் விசாரிக்கப்பட வேண்டும். இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதும் இதற்கு எதிராக போராடுவதுமான கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.
போர் நடந்தபோதும் அதற்குப் பின்னும் நடந்த கொடுமைகளுக்கு நாம் நியாயம் கோரவேண்டும். இந்த நோக்கத்துடனே இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் பற்றி உலக அரங்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக இத்தகைய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ஜி. இராமகிருஷணன், அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
“சேனல்4-ன் ஆவணப் படத்தைப் பார்த்த பின்பு மொழி தோற்றுப்போய்விட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் மத்தியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது ‘இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். எனவே இனி அமைதியைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்’ என்றார். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பற்றி அவர் குறிப்பிடவே இல்லை. உலக வல்லரசுகள் ‘ஒன்றாக இருக்கும் நாட்டை இரண்டாகப் பிரிப்பதன் மூலமும், இரண்டாக இருக்கும் நாடுகளை ஒன்றாக மாற்றுவதன்’ மூலமும் பேரழிவுகளை உருவாக்கியுள்ளன, உண்டாக்கி வருகின்றன.
ஒரே நாடாக இருந்த இந்தியாவை இரண்டாகப் பிரித்து நாசம் செய்தது இங்கிலாந்து. அய்ரோப்பியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் இலங்கையில் தமிழ் மக்களின் அரசும், சிங்கள மக்களின் அரசும் இருந்தன. இவ்வாறு இரண்டு நாடுகளாக இருந்ததை ஒரே நாடாக மாற்றி இலங்கையை நாசம் செய்தது இங்கிலாந்து.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் எந்த நாட்டின் மீது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. போர் முடிந்த இந்த நிலையிலும், இலங்கையில் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள, இலங்கைக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இலங்கை அரசு சட்டத்திற்கு புறம்பான அவமானகரமான செயல்களை எல்லோரும் அங்கீகரிக்கும்படி சட்டத்தின்மூலம் செய்துவருகின்றது. இலங்கை அரசும் இராணுவமும் செய்த கொடுமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இலங்கை அரசு நடத்தும் விசாரணையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஐநாவின் குழு பற்றிய இலங்கை அரசின் பதிலும், அந்தக் குழுவை இலங்கைக்கு அனுமதிக்காததுமே அதன் குற்றத்தைக் காட்டுகின்றது.
இலங்கையிலிருக்கும் பௌத்த சன்னியாசிகள் புத்தருக்குக் கௌரவம் தரும் எந்தச் செயலையும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா மதங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமசதுங்கா ஒரு சிங்களர். இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு நெருக்கமானவர். இருந்தும், இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்தார். அந்தக் காரணத்திற்காகவே அவர் கொல்லப்பட்டார். ஐநா பரிந்துரைக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: போரில் 40000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை தேவை, அரச பயங்கரவாதத்திற்கு முடிவு வேண்டும் உள்ளிட்டவை. இலங்கையில் இன்றும் நிலவுகின்ற அச்ச சூழ்நிலையை மாற்ற வேண்டும். ருவாண்டாவிலும், செர்பியாவிலும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அமெரிக்காவோ அல்லது அமெரிக்க ஆதரவு நாடுகளோ புரிந்த போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தப்படுவது இல்லை.
கம்போடியாவின் ஆட்சியாளர்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு அளித்தன. ஆனால், கம்போடிய மக்கள்தான் விசாரணை தேவை என்று கூறினார்கள். இன்று இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்பதில் சந்தேகமில்லை. இலங்கைத் தீவு அமைந்துள்ள இயற்கையான புவியியலைப் பயன்படுத்தித்தான் இலங்கை அரசு புலிகளை அழித்தது. இங்கு காட்டப்பட்டுள்ள சேனல்4 ஆவணப்படத்தை இந்தியப் பிரதமருக்குக் காண்பிக்க வேண்டும். இலங்கை அரசைப் போர்க்குற்றத்திற்காகவும், இன அழிப்புக் குற்றத்திற்காகவும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐநாவில் இந்தியா வலியுறுத்தவேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் அது அயோக்கியத்தனமாகும். இலங்கையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள் முள்வேலிக்குள் அடைத்து வைக்க்கப்பட்டுள்ளதைப் பார்த்தும் இந்தியா வெட்கமில்லாமல் செயலாற்றிவருகின்றது. இவ்வாறு வெட்கப்படாமல் இருக்கும் தன்மையைப் பற்றி இந்தியர்கள் அனைவரும் இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
இலங்கையில் தம் உரிமைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று இராமகிருஷ்ணன் பேசி முடித்தார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்(டப்ளின், அயர்லாந்து) மற்றும் ஐநா பரிந்துரைக் குழுவின் அறிக்கை குறித்து, பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன் விரிவான உரையாற்றினார்.
”போரின்போது இலங்கை இராணுவம் பள்ளிக்கட்டடங்கள், மருத்துவமனைகள், மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது திட்டமிட்ட வான்வெளித் தாக்குதல்கள் நடத்தியதை ஐநா அறிக்கை உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த அறிக்கை, இலங்கையின் இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டுகிறது என்பதை மன்னார் பகுதி பிஷப். ராயப் ஜோசப் அவர்களின் அறிக்கை தெளிவாக்குகிறது. அக்டோபர் 2008 அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிளிநொச்சி, வன்னி பகுதியில் வாழ்ந்தவர்கள் 4,29,059 பேர். ஜூலை, 2009 ஐநா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380. இதன்படி 1,46,679 பேர் போரில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்த மிகப்பெரிய மனிதப் படுகொலையை நடத்திய இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று பேசினார்.
பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் அவர்கள் ‘அரச ஒடுக்குமுறையில் இலங்கையின் போர் மாதிரி’ (Sri Lankan Model of War) என்ற தலைப்பில் பேசினார்.
”இரண்டாம் உலகப்போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான வன்முறைகளால் உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதனால்தான் மனித உரிமைகளைப் பாதுகாக்க அது தொடர்பான சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட்டன. இப்படி இருக்கும்போது, மனித உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கிவிட்ட இலங்கைப் போருக்குப் பிறகு, அதே நாட்டில் 44 நாடுகள் ஒன்றுகூடி இலங்கையின் வெற்றியைப் பாராட்டவும் வாழ்த்தவும் செய்திருக்கின்றன. ‘இலங்கை பின்பற்றிய அணுகுமுறை மற்ற நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டும்’ என்றும் கூறியிருக்கின்றன. இது போரை விட மிகவும் கவலைக்குரியது; இதயத்தை நொறுக்குவது.
‘தென் ஆப்பிரிக்காவில் நடந்தது போன்று வேறு எங்கும் நடக்கக் கூடாது’ என்றார் நெல்சன் மண்டேலா. ஆனால் இலங்கையில் இன ஒடுகுகுமுறையும் அதன் கொடூரங்களும் நடந்தேறி, அது ஒரு இன மக்களால் கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதற்கு எதிராகச் செயல்பட்டிருக்க வேண்டிய ஐநா அமைப்பு எந்த அதிகாரமும் அற்ற ஒரு வெற்று அமைப்பாக இருக்கிறது.
‘போபால் விசவாயு துயர சம்பவம்’ ஒரு விபத்தென்றால் பரவாயில்லை, ஆனால் ‘விசவாயு கசிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்’ என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மக்கள்மீது நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஆகும். அதுபோல இலங்கை அரசும் ‘அரசுக்கு எதிராக போராடுபவர்களை, எப்படி அழித்தொழிக்கலாம்’ என்ற ஒரு பரிசோதனையை இந்தியா உட்பட மற்ற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக்காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா தனக்கு ஆதரவாக இருக்கும் துணிச்சலில்தான் இந்த இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது.
தமிழக அரசு, இந்திய அரசு, இந்திய இராணுவம், உளவுத்துறை(RAW), அமெரிக்க உளவுத்துறை(CIA) என எல்லோரும் சேர்ந்தே இந்தக் கொடூரமான பரிசோதனையை இலங்கையில் நடத்தியுள்ளார்கள். இது ஏகாதிபத்திய முதலாளித்துவம், ஊழல் மயம் இவற்றின் கூட்டணியால் நடந்தேறியுள்ளது.
இவற்றுக்கான காரணங்கள் 1970 களில் ஆரம்பிக்கின்றன. அப்போது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது. அமெரிக்க அரசு நிலைதடுமாறிப் போகின்றது. தன்னுடைய ”வளர்ச்சி மாதிரி” யை உலகெங்கும் திணிப்பதன் மூலமே தன் இருத்தலைத் தக்க வைக்க முடியும் என்று செயல்படத் தொடங்குகிறது. உலக வங்கி உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் இயக்க ஆரம்பிக்கின்றது. அதைத் தொடர்ந்து வந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா ஒரு ‘ஒற்றை ரவுடி’யாக உருவெடுக்கிறது. இத்தகைய அமெரிக்கா தனது 400 வருட வரலாற்றில் மனித குல வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அனைத்துலக சந்தையைக் கைப்பற்றும் ஒரே நோக்கத்துடன் பல்வேறு போர்களை நடத்தியது. ஈராக் மற்றும் ஆப்கனில் தன் படைபலத்தை நிறுத்திக்கொள்ளும் நோக்கத்தில் போர்களை நடத்திவருகிறது.
முதலாளித்துவம் தன் வளர்ச்சி மாதிரியை எல்லா சமூகங்களின் மீதும் திணிக்கப்பார்க்கின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரித்தான பொருளியல் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளன. சான்றாக இஸ்லாம் மூலதனக் குவிப்பை அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்வதில்லை. வட்டிமுறையைக் கடைபிடிக்காதது, வருமானத்தில் 6-ல் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளைக் கொண்டுள்ளது.
வெளியில் இருந்து திணிக்கப்படும் முதலாளித்துவ வளர்ச்சி முறைக்கும் இஸ்லாமியர்களின் பாரம்பரிய வளர்ச்சிமுறைக்கும் இடையேயான உரசலையே பயங்கரவாதம் என்று முத்திரையிடுகின்றார்கள். ஆசியாவிலுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளின் சந்தைகளும் அமெரிக்காவிற்கு முக்கியம். தெற்காசியாவை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அமெரிக்கா இலங்கை அரசை ஆதரிக்கிறது. தனது உள்ளடக்கத்திலேயே கொடூரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் வளர்ச்சி முறையை எல்லா இடங்களிலும் திணிக்க முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் தமிழர்கள். தனக்கென தனித்த அடையாளம் கொண்ட இந்தத் தமிழர்களை பவுத்த சிங்களப் பேரினவாத அரசு எல்லா தளங்களிலும் புறக்கணித்து அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தியது. இதன் விளைவாகவே ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’(LTTE) இயக்கம் தோன்றியது. சேனல்4-ன் ஆவணப் படத்தைப் பார்க்கும்போது இலங்கை இராணுவத்தின் கொடூரங்கள் விளங்குகின்றன. அதே நேரத்தில் மக்கள் அஞ்சி ஓடுவதும் கதறுவதுமாக வரும் காட்சிகள், ‘விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களைப் போர்க்குணம் மிக்கவர்களாக தயார் செய்யவில்லையோ?’ என்ற கேள்வியை எழுப்புகின்றது.
இறந்த உடல்களைக் கூட இவ்வளவு மோசமாக இலங்கை இராணுவம் அவமதிப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு மனிதநேயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்குகிறது.
‘ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது?’ என்ற ஒரு மோசமான முன்மாதிரியை இலங்கை அரசு நிகழ்த்திக்காட்டியுள்ளது. பங்களாதேஷ் ராணுவம் ‘இந்த முன்மாதிரியை நாங்களும் கடைபிடிக்கப்போகிறோம்’ என்று சொல்வதன் மூலம் இது தெளிவாகியுள்ளது. இது சர்வதேச ஒடுக்குமுறை அரசுகள் மனித குலத்திற்கு எதிரான ஒரு ஒட்டு மொத்தப் போருக்குத் தயாராவதையே நமக்குக் காட்டுகிறது. . மிகப்பெரிய அளவில் மனித இனத்தைக் கொன்றொழித்து நமக்கெல்லாம் ஒரு செய்தியை இலங்கை அரசு சொல்கின்றது.
‘யாரேனும், ‘ஏதாவது ஒரு வகையில் போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் துணைநின்றால், போராளிகளைப் போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்” ’ என்பதே அந்த செய்தி. . இந்தப் போர் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகக் காட்சி அளிக்கின்றது. .
இதில் இன்னொரு துயரம் என்னவென்றால் இராணுவ அதிகாரத்தில் மட்டுமன்றி தகவல் பரிமாற்றத்திலும் இந்த அரசுகள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள ஊடகங்கள் உண்மைகளை மறைத்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டும் தங்களது நம்பகத்தன்மையையும் நேர்மையையும் இழந்துவிட்டன. ஒரு ஆரோக்கியமான சிந்தனையைக் கொண்ட ஒரு சமூகம் உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன.
ஈழத் தமிழர்கள் அளப்பரிய உயிர்த்தியாகங்களைச் செய்து பெருகிவரும் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான செறிந்த படிப்பினையை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்கள். .
இதைத் தொடர்ந்து புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு. ஜெகதீஸ், தமிழர்களின் 60 ஆண்டுகால வரலாற்றைப் பற்றி பின்வருமாரு பேசினார்.
“இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பு தேடிச் சென்றவர்கள் அல்ல. அம்மண்ணின் பூர்வகுடிமக்கள். தமக்கான தாயகத்தைக் கொண்ட தனித்த தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதன் அடிப்படையிலேயே சிங்கள அரசின் ஒடுக்கு முறையிலிருந்து காத்துக்கொள்ள தனிநாடு கோரி போராடினார்கள்.”
அதற்குப் பின்னர், காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு. காலித் வாசிம் அவர்கள், ”காஷ்மீர்-ஈழ தேசிய விடுதலைப் போராட்டங்கள்” என்ற தலைப்பில் பேசினார். இலங்கையைப் போலவே, காஷ்மீரிலும் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 8,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அயல்நாட்டு பயங்கரவாதிகள் என்று கூறி பொதுமக்களைக் கொல்வது என்பது இந்திய இராணுவத்தின் ஒரு மலிவான வணிகமாகவே மாறிவிட்டது. ஈழத்தின் போராட்டத்தையும் காஷ்மீர் போராட்டத்தையும் ஒப்பிடும் போது பின்வரும் விசயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.
Short URL: http://meenakam.com/?p=27923


--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக