மிக நல்ல கருத்து. ஆனால், நம் நாட்டில் நம் நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராகப் பேசினால் கூட விட்டு விடுவார்கள். அடுத்த நாட்டு அரசாங்கத்தின் படுகொலைச் செயல்களைப் பேசினால் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது எனத் தண்டிப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்து உரிமைக் குரல் கொடுப்பவர்கள், ஆளும் கட்சியானால் இதே சட்டப்பிரிவை வேண்டாதவர் மீது பயன்படுத்துகிறார்கள். தினமணி தலையங்கம் ஓர் இயக்கமாக மாறி இது போன்ற தேவையற்ற பல சட்டப்பிரிவுகளை நீக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலையங்கம்: வேண்டாம் இந்தச் சட்டம்!
First Published : 02 May 2011 02:10:14 AM IST
சட்டங்கள் எல்லாமே காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவைதான். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றப்படாவிட்டால், சட்டமீறல்கள் நடைபெறுவதை எந்த அரசாலுமே தடுக்க முடியாமல் போய்விடும். அந்த அரசும் வெகுஜன விரோத அரசாக மாறி, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். இந்தியா சுதந்திரம் அடைந்து இன்னும் சில மாதங்களில் 64 ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது. ஆனால், ஓர் அடிமை நாட்டை ஆள்வதற்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய பல சட்டங்களை நாம் இன்னும் மாற்றாமலும் அகற்றாமலும் பாதுகாத்து வருகிறோம் என்பதுதான் வேதனையான ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகவும் அவர்களைத் தண்டிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் இப்போது சுதந்திர இந்தியாவில் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? சமீபத்தில் டாக்டர் வினாயக் சென் மீது சத்தீஸ்கர் அரசால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கும் சில கருத்துகள், இந்தியச் சட்டவியலில் இருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைத்து, ஏனைய பல பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்திய சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலு சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, தேசத் துரோகக் குற்றம் தொடர்பான 124 அ பிரிவு தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இந்தியச் சட்டவியலில் 1870-ல் சேர்க்கப்பட்ட 124 அ என்கிற சட்டப்பரிவு, தேசத்துரோகம் என்கிற குற்றத்துக்கு, எந்தவிதமான அடிப்படைக் காரணங்களையும் குறிப்பிடாமல், மூன்று விதமான தண்டனைகளைப் பரிந்துரைக்கிறது. தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், ஆயுள்தண்டனையோ, மூன்றாண்டு சிறைத் தண்டனையோ, இல்லை வெறும் அபராதமோ நீதிபதியின் கணிப்புக்கு ஏற்ப விதிக்கப்படலாம் என்கிறது 124 அ பிரிவு. இவைஇவை தேசத்துரோகம் என்றோ, இன்ன தவறுக்கு இன்ன தண்டனை என்றோ இந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதுதான் வேடிக்கை. 1922-ல் மகாத்மா காந்தியடிகள் தமது "யங் இந்தியா' இதழில் இரண்டு கட்டுரைகளை எழுதினார். இந்தச் கட்டுரைகளுக்காக தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கூண்டில் நிறுத்தப்பட்ட மகாத்மா காந்தி கூறிய கருத்து இதுதான் - ""இந்த அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதுவதும் பேசுவதும் எனக்கு உணர்வுப் பூர்வமான விஷயமாகி விட்டிருக்கிறது. தேசப்பற்று என்பதைச் சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. இந்த 124 அ என்கிற சட்டப் பிரிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களில் முதன்மையானது''. இந்த 124 அ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட சுதந்திரப் போராட்டக் கால தலைவர்களின் பட்டியல் பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, லாலா லஜபதிராய், வீரசாவர்க்கார் என்று நீளும். இரண்டு முறை இந்தச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக் குற்றத்துக்காக திலகர் கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டபோதும், நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக எழுதவும், பேசவும் செய்தேனே தவிர இந்த தேசத்து மக்களுக்கு எதிராகச் செயல்படவில்லை என்று கூறி, தனக்கு தரப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்கிறது சுதந்திரப் போராட்ட சரித்திரம். 1951-ல் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு, நாடாளுமன்றத்திலேயே "இதுபோன்ற கண்டனத்துக்கு உரிய சட்டப் பிரிவு எதுவுமே இருக்க முடியாது என்றும், இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது என்றும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவெல்லாம் இருந்தும் இன்றும் ஏன் இப்படி ஒரு சட்டப் பிரிவு நமது சட்டவியலில் தொடர வேண்டும் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே, கருத்துச் சுதந்திரம்தான். கருத்துச் சுதந்திரத்தின் உயிர்ப்பான பகுதி எது என்று கேட்டால், ஆட்சியாளர்களுடனான கருத்து வேறுபாடும், அரசியல் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையும்தான். 1962-ல் பிகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில் 124 அ சட்டப் பிரிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்கியது. அரசின் செயல்பாடுகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது தேசத்துரோகம் என்று கருதப்படக் கூடாது என்பதுதான் அது. "தேசத் துரோகம்' பற்றிய 124 அ சட்டப் பிரிவு 1860-ல் இயற்றப்பட்ட இந்திய சட்டவியலில் கிடையாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திரத்துக்கான குரலை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டப் பிரிவு இணைக்கப்பட்டது. 1898-ல் இது மேலும் கடுமையாக்கப்பட்டு, அரசுக்கு எதிரான கருத்துகள் தேசத் துரோகக் குற்றமாக்கப்பட்டன. உலகில் உள்ள பல நாடுகளில் தேசத்துரோகம் என்கிற சட்டப் பிரிவு இருந்தால், அதை அகற்றி வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தேசத் துரோகக் குற்றம் வந்ததே நீர்த்துப் போய்விட்ட நிலைமை. பிரிட்டனில் கடைசியாகத் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் 1947 உடன் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவே பயன்படுத்தப்பட வில்லை. ஆனாலும் கூட 2010-ல் இந்தச் சட்டப் பிரிவு பிரிட்டிஷ் சட்டவியலிலிருந்து அகற்றப்பட்டது. ஏனைய நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகளையும், விமர்சனங்களையும் அடக்கவும் ஒடுக்கவும் இந்தச் சட்டப் பிரிவு, பிரிட்டனை முன் உதாரணம் காட்டி பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். மக்களாட்சி முறையில் விமர்சனங்கள் எழுப்பப்படுவதும், ஆட்சிக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதும் தடுக்கப்படக் கூடாது. விமர்சனங்களும், மக்களின் நியாயமான உணர்வுகளும் தேசத்துரோகம் என்று வர்ணிக்கப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கால 124 அ பிரிவு சட்டம், சுதந்திர இந்தியாவுக்குத் தேவையில்லை. மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் சட்டத்தால் அடக்க நினைக்கும் மடமைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவையில்லை இனியும் இந்த 124 அ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக