உண்மையை உணர்த்தும் நீதியை வேண்டும் நல்ல கட்டுரை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
டோக்ரா இனத்தவருக்கு அநீதி
First Published : 06 May 2011 01:11:45 AM IST
சமீபத்தில் காஷ்மீரில் ஓர் இனத்துக்கு எதிரான அநீதி வெகு சிறப்பாக அரங்கேறியுள்ளது. காஷ்மீரில் ஒருபோதும் அமைதி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஹுரியத் மாநாடு அமைப்பு இதனை முன்னின்று நடத்தியுள்ளது.தங்களின் வழக்கமான பாணியில் வன்முறைப் போராட்டத்தில் ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். "டோக்ரா சான்றிதழ்' வழங்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்து விட்டது. அதென்ன டோக்ரா சான்றிதழ், அதன் மூலம் மக்களுக்கு அப்படி என்ன அநீதியை இழைத்துவிட மத்திய, மாநில அரசுகள் துணிந்துவிட்டன என்பதைப் பார்த்தால் டோக்ரா இனத்தவர் மீதுள்ள நியாயம் புரியும்."டோக்ரா' இன மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பனி படர்ந்த லடாக் பகுதியில் வசித்து வரும் பூர்வகுடிகள்.இவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை சுமார் 9 லட்சம். பஞ்சாப், இமாசலப் பிரதேச மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் இவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பொதுவாக சற்று உயரம் குறைந்தவர்கள். சராசரி உயரமே 160 செ.மீ.தான். ஜம்முவில் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த மக்களும் துணை ராணுவத்தில் சேர்வதற்காக, உயரம், மார்பளவு ஆகியவற்றில் சில சலுகைகளைக் கோரினர்.இந்தச் சலுகையைப் பெறும் வகையில் அவர்களுக்கு "டோக்ரா சான்றிதழ்' வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிவிக்கையை கடந்த ஜனவரியில் வெளியிட்டது.டோக்ரா இனத்தவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்றாலும், வீரத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. பனிச் சிகரத்தில் ஏறுவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே ராணுவத்தில் "டோக்ரா ரெஜிமெண்ட்' படைப்பிரிவும் உள்ளது.முழுக்க முழுக்க காஷ்மீரில் பின்தங்கிய ஒருபகுதி மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிக்கை வெளியானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது எதைவைத்துப் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்று காத்திருந்த சில பிரிவினைவாதிகள் இந்த விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.இன ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி இது. இந்தச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமெனக்கூறி, போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானி.டோக்ரா சான்றிதழுக்கு எதிர்ப்புக் கிளம்பியதுமே, உள்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா. அடுத்த சில நாள்களிலேயே டோக்ரா சான்றிதழ் விஷயத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். ஓமர் அப்துல்லாவின் தந்தையும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லாவும் இதே போன்ற கருத்தைக் கூறி டோக்ரா மக்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விஷயத்தின் வேரிலேயே வெந்நீரை ஊற்றினார்.இந்தக் கருத்து குறித்து தனது "மகிழ்ச்சியின்மையை' வெளிப்படுத்துவதைத் தவிர, காங்கிரஸ் கட்சியால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.தொடர்ந்து டோக்ராக்களுக்கு தனிச் சான்றிதழ் வழங்குவது காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, வன்முறை நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் மிதவாத ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்.இதனால் மாநிலத்தில் டோக்ரா சான்றிதழ் வழங்குவதற்கு எதிராகக் கடையடைப்பு, வன்முறை, தீவைப்பு என போராட்டம் தீவிரமடைந்தது.இதனிடையே திடீரென டோக்ரா சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்தார் முதல்வர் ஓமர் அப்துல்லா. பிரிவினைவாதிகள் விஷமப் புன்னகையுடன் அடுத்த போராட்டத்துக்குக் காரணத்தைத் தேடத் தொடங்கிவிட்டனர்.மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி மாநில அரசின் மேலும் ஒரு மோசமான அணுகுமுறை இது என்று கூறி பிரச்னையை முடித்துக் கொண்டது.கடைசியில் சலுகையை இழந்த காஷ்மீரில் சிறுபான்மையினரான டோக்ரா மக்களுக்காகப் போராட யாருமில்லை. ஏனெனில் தேர்தலின்போது அவர்களின் வாக்கு வங்கி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.முஸ்லிம்கள் சிறுபான்மையினத்தவராக உள்ள மாநிலங்களில் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்று போராடுகின்றனர்.அதேசமயம் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் மற்றொரு சிறுபான்மை இனத்தவருக்கு இதுபோன்ற சலுகை கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். தங்களது செயல்பாடுகள் சரியானதுதானா? என்பதை அவர்கள் ஆத்ம பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கு எதிரான போராட்டத்தையும், அதற்குப் பணிந்து விட்ட மாநில அரசின் செயலையும் உள்ளக் கொதிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் டோக்ரா மக்களின் மனவேதனை எப்படி அடங்கும் அல்லது அது எந்த வகையில் வெளிப்படும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக