திங்கள், 2 மே, 2011

வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதக் கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் பாராட்டுகின்ற வெளிநாட்டுக் கல்வி முறைகளில் வருகைக்கு முதன்மை அளிப்பதில்லை. அதனைப் பயன்படுத்தி நூலக வாசிப்பிற்கு முதன்மை அளித்து நம் கல்வி முறையை மாற்றலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published : 02 May 2011 01:06:52 AM IST


புது தில்லி, மே 1: வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக் கூடாது என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இதழியலை பாடமாக எடுத்து படித்த 3 மாணவர்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் மட்டம் போட்டனர். இந்த 3 மாணவர்களுக்கும் வருகை பதிவு 75 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து இவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுத பல்கலைக் கழகம் அனுமதி மறுத்தது.  இதையடுத்து 3 மாணவர்களும் தாங்கள் அளித்த மருத்துவ சான்றிதழை ஏற்று தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி கைலாஷ் காம்பீர் விசாரித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர் கூறியது:  மாணவனோ அல்லது மாணவியோ அவர்கள் படிக்கும் பாடத்தை அறிய முழு ஈடுபாட்டுடன் வகுப்புகளுக்குச் சென்றால்தான் அவர்கள் மேன்மை அடைய முடியும். ÷கல்லூரி,பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் வருகை பதிவு ஒரு சட்டம். அதற்கு விதி விலக்கு அளிக்க முடியாது. இந்த 3 மாணவர்களுக்கும் கருணை காட்டினால், ஒழுங்கீனத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரி,பல்கலைக் கழகங்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.  மாணவர்களின் வருகை பதிவு விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தங்கள் விதிகளில் உறுதியாக இருக்கும்படி வலியுறுத்தி உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இதில் விதிமுறை ஏதாவது தளர்த்தினால் அது பரிகாசத்துக்கு இடமாகிவிடும். இதனால் மாணவர்கள் வருகை பதிவு விஷயத்தில் நிவாரணம் தேடி நீதிமன்றத்துக்கு வரக் கூடாது.  அவசரத் தேவை ஏற்பட்டால் மாணவர்களின் வருகை பதிவில் 2 வாரங்கள் தளர்த்த பல்கலைக் கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் தளர்த்தக் கூடாது. ஒரு மாணவர் வகுப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் மருத்துவ சான்றிதழை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பரீசிலிக்கலாம் என்று நீதிபதி கைலாஷ் காம்பீர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக