ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஏனிந்த அவசர மாநாடு? : பரதேசி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 

on 27-06-2010 21:38  
Favoured : 3
தமிழா! தமிழா!!
உனக்கும் எனக்கும்தான்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்! தமிழ்!! தமிழ்!!!
என்றவர்களுக்கெல்லாம்....
உலகத்தமிழ்ச் 'செமத்தியான' மாநாடு
தமிழன்னை எங்கே?
தமிழ்ச் சான்றோர் வாரிசுகளெங்கே?
வந்த விருந்தினரின் உரையிலும்
வழி நடத்துபவரின் உரையிலும்
ஆங்கில ஆதிக்கமேனோ?
மொழிபெயர்ப்புக்கு வழி தோன்றாததேனோ?
'கவிக்கோ' அரங்கிலும்
'கவிப்பேரரசு' அரங்கிலும்
'கொடநாடு, கோமளவள்ளியைத் தவிர்த்து
கவிதைபாடத் தமிழில் ஏதுமில்லையோ?
Image
திடீரெனத் தமிழ்மீது பாசம்
தமிழ்மொழியின்பால் கரிசனம்
தமிழில் 'கலப்பின'த் தூசியை தட்டத்தான் முயற்சியோ?
இல்லை தமிழைத்தேடித் தேடித் தூர் வாறும் துர்பாக்கிய நிலையோ?
முதல் வகுப்பிலிருந்து முதுகலைவரை
தமிழ் படித்த தமிழ்க் காதலர்களுக்கு தரப்படுமா வேலை?
விடும் மூச்சில்கூடத் தமிழ் வாசம்
தளைக்கச்செய்யும் தமிழறிஞர்கட்கு தருவீரா அங்கீகாரம்?
தமிழக அரசே!
தமிழில் அரசாணை எங்கே?
தமிழாட்சி மொழி வெறும் கனவுதானா?
தமிழெழுத்துக்களால் கோப்புகள் நகருமா?
தமிழில் வழக்காட வாய்ப்பில்லையிது தகுமா?
தமிழகம் கட்டாயத் தமிழுக்கு தகுதி பெறுமா?
கணினித் தமிழ் கை கொடுக்குமா?
தமிழில் பெயர்ப்பலகை எங்கே?
தமிழில் வர்த்தகம் வளருமா?
தமிழனில் ஒற்றுமை ஓங்குமா?
தமிழினம் ஓரினமாகுமா?
தமிழனை தலை தெறிக்க விரட்டும்
தரம் கெட்டவன் தண்டிக்கப்படுவானா?
தமிழர்களைத் தாக்கியவர்களை...
தமிழ்த்தாயை கற்பழிக்கத் துடிக்கம் துரோகிகளை...
தமிழர்களை சிறையிலிட்டு குதூகளிக்கும் பாசிச வெறியர்களை....
தண்டிக்க வக்கில்லை தமிழர்க்கு!
கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்கும்
தமிழ்த் துரோகிகளே!
ஏனிந்த அவசர மாநாடு?
ஆதியில்
தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்
தமிழர்கள் தடம் மாறினர்
இடையில் தமிழ் மொழியா? ம்..ஹீ..ம்
மறுக்கிறார்கள்.... தமிழையே வெறுக்கிறார்கள்...
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில்
உலகத்தமிழினமே ஒய்யாரமாய் ஒன்றானீரே...
உயர் தமிழுக்கு உரம் சேர்ப்பீரா?
ஒரே கூடாரத்தில் ஒன்றுபட்ட ஆய்வாளர்களே
உழவனுக்கு உபயோகமா இம்மாநாடு? - இல்லை
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
தமிழா! தமிழா!!
உனக்கும் எனக்கும்தான்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்... தமிழன்... தமிழினம்... தமிழர்களுக்காக...
என்போருக்கும், அவர்தம் உற்றார் உறவினர்க்கும்
இது ஊர் சுற்றும் மாநாடு!
- பரதேசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக