செவ்வாய், 6 ஜூலை, 2010

சமச்சீர் கல்வியில் செம்மொழிப் பாடம் சேர்க்கும் பணி மும்முரம்

First Published : 05 Jul 2010 12:55:55 AM IST


மதுரை, ஜூலை 4:    ஏழு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி தமிழ்ப்  பாடங்களில் செம்மொழி பற்றிய பாடங்களை இணைப்பதற்கான பணியில் ஆசிரியர் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இக் கல்வியாண்டு  முதல் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பிற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தலைமையில் தனியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் பல்கலைக்கழக, கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பள்ளிகள் என்ற அளவில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதுநிலைப் பட்டதாரி  ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரை இடம்பெறச் செய்து இதற்கான பாடங்களைத் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வியில் தமிழ்ப் பாடத்  திட்டங்கள் :   சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்படவுள்ள  7, 8, 9, 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடங்களுக்கான செய்யுள், உரைநடை, இலக்கணம், மொழிப்பயிற்சி ஆகியவை தயாரிக்கும் பணிகள் மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.   இதில், 45-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் அடங்கிய தனித் தனிக் குழுவினர் பாடங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு மனதில் நிறுத்திப் படிக்கும் வகையில் பாடங்களை உளவியல் ரீதியாகவும், பொது அறிவு முறையிலும் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துக்கள்

எல்லா மொழிப்பாடங்களிலும் தமிழ்ச் செம்மொழி குறித்த பாடங்கள் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழே தெரியாமல் படிப்பவர்கள் குறைந்தது தமிழ் பற்றியாவது தெரிந்திருக்கட்டும். (இதற்கு முன்பு இவ்வாறு எழுதிய குறிப்பைக் காணோம்.ஏன்????) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக