புதன், 7 ஜூலை, 2010

விலைவாசிக் கொள்ளியில் எண்ணெய் வார்க்கும் அரசு!ட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளின்மீது லிட்டருக்கு முறையே, ரூ. 3.50, ரூ. 2, ரூ. 3 என்று உயர்த்தவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 எனக் கூட்டவும் மத்திய அரசாங்கம் 2010, ஜூன் 25 அன்று முடிவு செய்தது. இந்த ஆண்டில் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலைகளை இரண்டு தடவைகள் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. மூன்றாவது தடவையாக உயர்த்துவது 18 சதவிகித அளவுக்கு விலைவாசிகளை, குறிப்பாக பெரும்பாலான மக்கள் அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களின் விலைகளை அதிகப்படுத்துவதாகும். நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. அதைப் பற்றி அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை. 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 206 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மை பலம்தான் இருக்கிறது என்றாலும், அதற்குள்ள ஆட்சிப் பலம் மக்களின் ஆதரவாலோ, தேர்தலில் கிடைக்கும் வெற்றியாலோ தரப்படவில்லை. ஒன்று சேர இயலாத எதிர்க்கட்சிகளின் பலவீனம்தான் இன்றைக்கு ஆளுங்கட்சிக்கு உள்ள பலம். பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியது மட்டுமல்ல, அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்த இதுவரை அரசாங்கத்துக்கு இருந்த அதிகாரத்தை நீக்கிவிட்டு, பெட்ரோல்-டீசல் விலைகளை இனி அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதைதான். அமைச்சர் அறிவித்ததற்கு மேலாக, வளர்ச்சியடைந்த ஜி-20 நாடுகளின் கனடா நாட்டு டோரண்டோ உச்சகட்ட மாநாட்டில் கலந்துகொண்டு, பொருளாதார வல்லரசு நாடுகளின் பெரும் தலைவர்களுடன் கைகுலுக்கிவிட்டு நாடு திரும்பும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் இருந்தபடியே ஜூன் 29-ம் தேதியன்று பத்திரிகை நிருபர்களுக்குத் தந்த பேட்டியில், ஒரு புதிய ஜனநாயகக் கோட்பாட்டை வெளியிட்டிருக்கிறார். அதாவது: பொது மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்குச் சிலவற்றைச்  செய்யவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.   நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் வளர்ச்சி அல்ல, அது நாடாளும் கட்சியின் வளர்ச்சி, மந்திரிசபை மகான்களின் தனிப்பட்ட வளர்ச்சி என்று விரிவடைந்து கொண்டே போகும்.பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசி உயர்வு கூடாது என்று சொன்னது எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல. இந்தச் சமயத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், தி.மு.கழகத் தலைவரும் பெட்ரோலிய விலைகளை உயர்த்த வேண்டாம் என்று தெரிவித்தனர். விலைவாசி ஏற்றங்களை 2010 ஜூன் 25-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் தந்தார். முடிவெடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கலந்துகொள்ளவில்லை. உரத்துறை அமைச்சர் எம்.கே. அழகிரியும், உழவுத்துறை அமைச்சர் சரத் பவாரும் உள்ளிட்டு தத்தம் கட்சிகளின் சார்பாக முழு ஆதரவைத் தந்துள்ளனர்.  இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர், உர அமைச்சர் அழகிரி ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தாலும், அதை அவர் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது உழவுத்தொழில். பயிர் வளர உரமும் தேவை. வயலில் நெற்பயிரை வளர்க்காமல், கள்ளியும், முள்ளியும், காளான்களும் நிறைந்த களைகளை வளர்க்க, நடத்தப்படும் உழவும், போடப்படும் உரமும் பயன்படுத்தப்படும் என்றால், மக்களை யார் வாழ வைப்பது? பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது மட்டுமல்ல, கடந்த எட்டாண்டு காலமாக விட்டு வைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்தியதுடன், சமையல் எரிவாயு விலையை இதற்கு முன் கண்டிராத அளவுக்கு அரசாங்கம் உயர்த்திவிட்டது. வியாபார முறையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு புதிதல்ல. பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசிகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் மத்திய அரசிடம் இருந்து வந்ததை, 2002 ஏப்ரல் மாதத்தில் பா.ஜ.க. அரசாங்கம் நீக்கியது. அதை காங்கிரஸ் கட்சி அப்பொழுது கண்டித்தது. ஆனால், கச்சா எண்ணெயின் விலைகள் வேகமாக உயர்ந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்கள் தத்தம் போக்கில் விலைகளை உயர்த்த முற்பட்டதால், உடனடியாக விலைவாசிகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசே மீண்டும் ஏற்றுக்கொண்டது. 2002-ல் பெட்ரோலியத் தயாரிப்பு பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்பொழுது பல தனியார் நிறுவனங்களும் பெட்ரோலியத் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. நெருக்கடியான கட்டங்களில் மிதமிஞ்சிய அளவில் பெட்ரோலிய விலைகள் ஏறுவதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. இந்த விலை ஏற்றங்களுக்கு கிரிட் பரிக் குழுவின் பரிந்துரைகள் முக்கிய ஆதாரமாக காட்டப்படுகின்றன. சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழுவின் அறிக்கை 2010 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசிடம் தரப்பட்டது. ஆயினும், 2010 பிப்ரவரி 26-ம் நாளன்று 2010-11 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபொழுது, கிரிட் பரிக் குழுவின் பரிந்துரைகள் குறித்து பெட்ரோலிய அமைச்சர்  முடிவெடுப்பார் என்று கூறினார். அதன் பிறகு 2010 ஜூன் 21-ல் பெட்ரோலியப் பொருள்கள் மீது போடும் விற்பனை வாட் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சர் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். பெரும்பாலான மாநில அரசுகளிடமிருந்து ஆதரவான பதிலேதும் வராததால் ஜூன் 25-ல் விலைவாசி உயர்வுகளை பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டார். மக்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புகளைத் தரும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அரசாங்கம் அடிக்கடி வெளியிடுகிறது. அவற்றில் ஒன்றாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 70 லட்சம் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1,400 அளித்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான திட்டத்தை பெட்ரோலிய அமைச்சகம் சென்ற ஆண்டு தயாரித்து, 2010-11 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் சேர்த்துவிட்டது. இந்தத் திட்டம் இரண்டாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் அந்த மானியக் கோரிக்கை வெளியீட்டில் விவரம் தரப்பட்டுள்ளது. ஆக, 70 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் தர மொத்தம் 980 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால்,  இந்தத் திட்டத்துக்காக 2010-11 வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டும்தான்.  2010-11 ஆண்டுக்கான நிதிநிலை-மானியக் கோரிக்கைகளில் திடீரென எதையும் சேர்த்துவிட முடியாது. வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கும் முறைகளின்படி 2009 நவம்பர் இறுதிக்குள் பெட்ரோலிய அமைச்சரகத்தின் இந்த 70 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தின் முழுவிவரங்களை நிதியமைச்சரகத்துக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்களைப் பரிசீலித்து நிதியமைச்சகம் அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அந்தத் திட்டத்துக்குத் தேவையான மானியத்தை ஒதுக்கும்.  ஆனால், 26 பிப்ரவரி 2010-ல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைக்கப்பட்ட மத்திய அமைச்சரகங்களின் மானியக் கோரிக்கைகளில் மேலே கூறப்பட்ட திட்டத்துக்கான விவரங்கள் தரப்பட்டிருந்தாலும், ஒதுக்கப்பட்ட மானியத் தொகை வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே. வறுமையில் தத்தளிக்கும் 70 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வசதி தருவதாக போட்ட திட்டம்-அதற்குத் தேவைப்படும் மானியத்துக்கு ஒரு கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியது, ஏழைகளிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி பின்பு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் அரசியல் மோசடியாகத்தான் இருக்கிறது. சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற அரசியல் கோட்பாட்டுக்கு இது முற்றிலும் முரண்பட்ட நடவடிக்கை ஆகும்.  பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசிகள் ஏற்றம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிச்சுமைதான் முக்கியமான காரணம். இதை பெட்ரோலிய அமைச்சகத்தின் 2005-06 மானியக் கோரிக்கைகளை ஆராய்ந்த அமைச்சகங்களுடன் தொடர்புடைய நாடாளுமன்றத்தின் நிலைக்குழு தனது ஆறாவது அறிக்கையில் சுட்டிக்காட்டி மத்திய, மாநில வரிகளைக் குறைக்க வேண்டும் என்று தக்க புள்ளிவிவரங்களுடன் பரிந்துரை செய்தது. 2005-06 பெட்ரோல் விலைவாசிகள் பற்றிய அறிக்கையில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விற்பனை விலை ரூ.43-23 என இருந்தது. அதில் கச்சா எண்ணையிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்க ஆகும் செலவு ரூ.17.54 என்றால் அதன்மீது மத்திய அரசாங்கத்தால் போடப்பட்ட சுங்க கலால் வரிகள் ரூ.13.97. அதற்குமேல் மகாராஷ்டிர மாநில அரசாங்கம் போட்ட விற்பனை வரி ரூ.11.72. தயாரிக்கும் செலவுக்குமேல் மத்திய-மாநில அரசுகள் போடும் வரிகளின் மொத்த அளவு ரூ.29.69. ஆக, ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிப்பதற்கு ஆகும் செலவைவிட 146 சதவிகித அளவுக்கு மத்திய-மாநில அரசுகள் வரிகள் போட்டன. இதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்க ஆகும் செலவுக்குமேல் சென்னையில் 138 சதவிகிதம், கொல்த்தாவில் 132 சதவிகிதம், தில்லியில் 112 சதவிகிதம் என்ற அளவில் மத்திய-மாநில அரசுகள் போடும் வரிச்சுமைகள் இருக்கின்றன. இவ்வாறான வரிகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்கவில்லை. பிறகும் வரியின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அதே நிலைக்குழு 2007-ல் மீண்டும் வலியுறுத்தியது. அதையும் அரசாங்கம் பொருள்படுத்தவில்லை.  இந்த ஆண்டில் 2010-11 பெட்ரோல் அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைளை ஆராய்ந்த நிலைக்குழு 2010 ஏப்ரல் மாதத்தில் தந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய-மாநில அரசுகள் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசிகளைச் சீரமைக்க முடியும். நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் எல்லா நிலைமைகளையும் நன்கு ஆராய்ந்து தந்த பரிந்துரைகளைக் கவனிக்காமல், தனிப்பட்ட ஓர் அதிகாரியை வைத்து நடத்தும் ஆய்வு அறிக்கையை அப்படியே நிறைவேற்ற அரசாங்கம் முனைப்பாக இருப்பது சரியல்ல. இந்த நிலைக்குழுவின் தலைவர் உந்தவல்லி அருணா குமாரும் ஒரு காங்கிரஸ்காரர்தான்.  மாநில அரசுகள் போடும் விற்பனை வரி விகிதங்களில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. விற்பனை வரி விதிப்பில் ஆந்திரம் 33, தமிழ்நாடு 30, கேரளா 29.30, மத்தியப்பிரதேசம் 28.75, மகாராஷ்டிரம் 28.70, மேற்கு வங்கம் 27.71 என உயர்ந்து, ஒரிசா 18, தில்லி 20, சண்டிகார் 20.03 என குறைந்தும் இருக்கின்றன. மத்திய அரசாங்கத்திடம் குவிந்திருக்கும் விரிவடையும் பல வரிவகைகளைப்போல மாநில அரசுகள் தமக்குள்ள பல்வேறு செலவுகளை ஈடுகட்ட விற்பனை வரியைத் தவிர வேறு இல்லை என்பது உண்மையே.  பெட்ரோல்-டீசல் தயாரிக்கும் நிறுவனங்கள் வியாபாரப்போக்கில் அவற்றுக்கான விலைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் தீர்மானம், கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் தேவைகளையும், நிதிவசதிகளையும் செம்மைப்படுத்த வேண்டிய தனது கடமையிலிருந்து மத்திய அரசு தவறிவிட்டதையே காட்டுகிறது.
கருத்துக்கள்

கூட்டாட்சியை அல்லது தன்னாட்சியைப் பேச்சளவில் வலியுறுத்துபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டுரை. எரிபொருள் நிலையில் கையாலாகாத நிலையில் இருக்கும் மாநில அரசுகள் பிறவற்றிலும் அவ்வாறுதான் உள்ளன. செழியனார் குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளின் வலுவின்மை ஆளுங்கட்சியின் வலுவாக உள்ள நிலைமை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மக்களின் அடிப்படைச் சிக்கல்களிலாவது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக