வியாழன், 24 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 116:
எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள்நாளை: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்!
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாவதற்கு முந்தின நாள் (28.7.1987) நடைபெற்ற ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக பின்னாளில் பேசப்பட்டது; எழுதப்பட்டது. அதுகுறித்து இங்கு அறிவது அவசியமாகிறது. வடக்கு, கிழக்கு இடைக்கால அரசொன்றை அமைப்பதுடன், அந்த அரசில் விடுதலைப் புலிகளே பெரும்பான்மை வகிப்பார்கள் என்று ராஜீவ் உறுதியளித்ததுடன், அதில் பிற அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியபோது பிரபாகரன் மறுத்ததாகவும், பின்னர் ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க சம்மதித்தார் என்றும் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால ஆட்சி, அதன் நிர்வாக அமைப்பு, அதன் அதிகாரம், செயல்பாடு, நிதி ஆதாரம் ஆகியவை தொடர்பாக ஜெயவர்த்தனாவுடன் பேசித் தீர்ப்பது என்றும் அப்போது உறுதியளிக்கப்பட்டதாகவும் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். அதுவரை தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றமோ புதிதாகக் காவல் நிலையமோ அமையக் கூடாது என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அதுநாள் வரை வரிவசூலிப்பில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்தச் செயல் தடை செய்யப்படும் என்று கூறியதுடன், ஆயுதம் கையளிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பிரச்னைக்கு ராஜீவ் வந்தார். அதன் விவரம் பாலசிங்கம் எழுதிய "விடுதலை' நூலில் வெளிவந்தபடி இங்கே தரப்படுகிறது: ""யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா எனக் கேட்டார் ராஜீவ் காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். ""மாதம் எவ்வளவு பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள்'' என ராஜீவ் கேட்க, ""இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபாய் வரை திரட்டுகிறோம்'' என்றார் பிரபாகரன். ""அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்'' என்றார் ராஜீவ். இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. ""ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயல்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?'' என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்ருட்டியார். ""எதற்காக யோசிக்க வேண்டும்? இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு'' என்றார். ""இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே அப்படித்தான்'' என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபாகரன். ""பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசு புதிய ஆயுதங்களை தரும் அல்லவா?'' என்றார் அமைச்சர் பண்ருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போலப் பிரதமரும் தலையசைத்தார். அப்பொழுது அதிகாலை (28.7.1987) இரண்டு மணி இருக்கும். அன்று (29.7.1987) காலை ஒன்பது மணியளவில் புது தில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ராஜீவ் காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகருடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்ருட்டியிடம் கேட்டேன். ""ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் எனப் பல விஷயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு, அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?'' என்றேன். பண்ருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ""இந்த ரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரங்கள் இருக்கின்றன. ஆயுதக் கையளிப்புப் பிரச்னை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியல் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரிடம் நம்பிக்கையில்லையா? இது ஒரு எங்ய்ற்ப்ங்ம்ங்ய் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?'' என்றார் அமைச்சர். ராஜீவ் காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். ""நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும்'' என்றார் ராஜீவ் காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் (பாலசிங்கம்) அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம் அனுப்புவதற்கு உடனே ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ராஜீவ். ராஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. ""அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த ரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை'' என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன். எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ராஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றியும் விவரமாக திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். ""அண்ணன் என்ன சொல்கிறார்'' என்று கேட்டான். ""பிரபாவுக்கு திருப்தி இல்லை. நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்'' என்றேன். ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன், ""அண்ணன் சொல்வதுதான் நடக்கும்'' என்றான். உண்மையில் அப்படியேதான் நடந்தது. ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் உருவாக்கப்படவில்லை'' இவ்வாறு அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 2000-ஆம் ஆண்டில் நூலாகும் வரை விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்படாத ரகசியமாகவே இது இருந்தது. இதற்கு முன்பாக லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் அப்சர்வர் ஏப்ரல். 30, 1989ல் எழுதப்படாத ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜா- தனது, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார். பின்நாளில் லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஈழ மண்ணில் அமைதிப் படைப் பணிக்காக சென்று திரும்பியது குறித்த தனது அனுபவங்களை ‘பட்ங் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ’ எனும் தலைப்பில் திரிசூல் பப்ளிகேஷன்ஸ் மூலமாக வெளியிட்டார். அந்த நூலின் பக். 66-67-இல் இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக புலிகள் தெரிவித்து அதனை எழுத்துமூலமாக கேட்கிறார்கள் என்றும் மேலிடத்துக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். "முறிந்த பனை' என்னும் நூலில் ராஜீவ் காந்தியும், பண்ருட்டி ராமச்சந்திரனும் தங்களது எல்லைகளை மீறி இவ்வாறான வாக்குறுதியை அளித்திருக்கமுடியாது என்று வாதிட்ட நிலையில் அடுத்த பத்தியிலேயே அந்நூலின் வாசகம் முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது. எழுதப்படாத ஒப்பந்தம் குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை முதன்முதலாக சண்டே லண்டன் அப்சர்வரில் (1988, ஏப்ரல் 3-ஆம் தேதி) வெளிவந்தது. கொழும்பிலிருந்து அதன் சிறப்புச் செய்தியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை, தீட்சித்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது. இந்தச் செய்திக் கட்டுரையில், பாலசிங்கம் சொன்னதைவிடவும் கூடுதலான தகவல்கள் உண்டு. இடைக்கால நிர்வாக சபையின் நிதியாதாரத்துக்கு இந்தியா பெருமதிப்பிலான தொகையை வழங்க இருந்ததாகவும் கூட அது கூறியது. இந்தத் தொகை வடக்கு கிழக்குப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பயன்படுத்தி, ஒரு தமிழ் போலீஸ் படை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் அதில் தகவகள் உண்டு. இவைகளையெல்லாம் கூறிவிட்டு, "முறிந்த பனை' மேலும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கான விடைகளை விடுதலைப் புலிகள் தரப்பில் அளிக்கத் தேவையில்லாத அளவுக்கு, இந்திய அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த தீபிந்தர் சிங் மற்றும் ஹர்கிரத் சிங் எழுதிய நூல்களில் ஏராளமாக உள்ளன. இந்த எழுதப்படாத ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு விடுதலைப் புலிகள் விஷயத்தில் எதுவும் நடக்காத காரணத்தால்தான் திலீபன் உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து அவரது மரணமும் நடைபெற்றது. திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில் கூட இந்த விஷயம் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக