திங்கள், 21 செப்டம்பர், 2009

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

First Published : 21 Sep 2009 01:31:29 AM IST


இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாளதுவரை பெரும்பான்மையான காலகட்டங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்களே குறிப்பாக, நேரு குடும்பத்தினரே மத்தியில் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்கும் இடத்தில் இருந்துள்ளனர். முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவராக இருந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான வெளியுறவுக் கொள்கைகளில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்திய தேசத்துக்குச் சொந்தமான 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. மூன்றில் ஒருபங்கு காஷ்மீரத்தை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவுக்குச் சொந்தமான, இந்திய மக்களின் யாத்திரைத் தலமான - சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படும் - கைலாச மலை உள்பட அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. நாளதுவரை சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நேருவுக்குப் பிறகு அவரது புதல்வி இந்திராகாந்தியால் இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது போர் தொடுத்து இந்திய ராணுவம் வெற்றி பெற்ற பிறகும்கூட, பாகிஸ்தானின் இந்திய விரோதப் போக்குக்கு முடிவு கட்டப்படவில்லை. இந்திராகாந்திக்குப் பிறகு அவரது புதல்வர் ராஜீவ் காந்தியால் கடைபிடிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளாலும் எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. ராஜீவ் காந்திக்குப் பிறகு மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நேரு பாணியிலான வெளியுறவுக் கொள்கைகளே பின்பற்றப்பட்டன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகும் ராஜீவ் காந்தி குடும்பத்தாரின் வழிகாட்டுதலிலேயே வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. சமீபகாலமாக உலகம் முழுவதும் இந்தியர்கள் தாக்கப்படுவதும் இந்திய வம்சாவளியினர் பெரும் துன்பத்துக்கு ஆளாவதும், இந்து சமயம் அவமதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்திய அரசாங்கத்திடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இதே நேரத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிய மருத்துவர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்வதற்காக இந்திய அரசாங்கம் பெரும் முயற்சி செய்தது. அவர் விடுதலை ஆகும் வரை தனக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லையென நமது பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாகக் கூறினார். மலேசியாவில் இந்து தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டபோதும், மலேசியத் தமிழர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இந்துக் கடவுள்கள் அவமதிப்பு மற்றும் இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறபோதெல்லாம் இந்திய அரசாங்கம் அமைதி காத்து வருகிறது. பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது "ஜிஸியா' வரி விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிராக பயங்கரவாத முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் தொடரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசாங்கம் மறைமுகமாக ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுடன் பகைமை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே ஒழிய நிரந்தரத் தீர்வு ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. வங்கதேசத்தில் பலநூறு ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் துணையுடன் இடிக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, வங்கதேசத்தில் இருந்து கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்தவண்ணம் உள்ளனர். நம்மால் உருவாக்கப்பட்ட வங்கதேசம் இன்று நமக்கு ஓர் எதிரி நாடாகத்தான் இருந்து வருகிறது. இந்திய விரோத நடவடிக்கைகள் வங்கதேசத்தில் மிகத் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைச் சொல்லி மாளாது. நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக இருந்தது. சீன அரசாங்கத்தின் தூண்டுதல் மற்றும் உதவியின்பேரில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு முழுமையான இந்திய விரோத நாடாக நேபாளத்தை மாற்றி வருகின்றனர். அதன் எதிரொலியாக சமீபத்தில் நேபாளத்தில் உலகப்புகழ் பெற்ற பசுபதிநாதர் கோயிலில் பாரம்பரிய மரபுப்படி பணியில் அமர்த்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பூசாரிகள் தாக்கப்பட்டனர்; அவர்களின் குடுமியைக் கத்தரித்தும், பூணூலை அறுத்தும், உடைகளைக் கிழித்தும் அவமரியாதை செய்துள்ளனர். நேபாளம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய மரபு மற்றும் கலாசாரங்களோடு பிரிக்க முடியாத இணைப்பு கொண்டதாகும். நேபாளத்தில் உள்ள பெரும்பான்மையான ஆலயங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாகப் பணிபுரிவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மரபாகும். அதுபோல, இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக தென்னிந்தியாவில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். ராமேசுவரம் திருக்கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யும் உரிமை நேபாள நாட்டு மன்னருக்கு உரியதாகும். நேபாளத்தில் தற்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பாரம்பரிய இந்து ஒருமைப்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இலங்கையில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இலங்கையின் பூர்வகுடிகளாக உள்ள தமிழ் இந்துக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெüத்த மத ஆதிக்கம் நிரம்பிய சிங்கள அரசாங்கத்தால் கொடுந் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கே இந்துத் தமிழர்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற இந்து ஆலயங்கள், பெüத்த விகாரங்களாக மாற்றப்படுகின்றன. சமீபத்தில்கூட கதிர்காமம் முருகன் கோயில் பெüத்த விகாரமாக மாற்றப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கையோடு பல்வேறு காலகட்டங்களில் இந்திய அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதுவுமே பயன் தரவில்லை. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ் இந்துக்களுக்கு இலங்கையில் சமஉரிமையுடன் கூடிய அமைதியான வாழ்க்கையை இந்திய அரசாங்கத்தால் பெற்றுத் தர இயலவில்லை. இலங்கையில் யுத்தங்களின்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் இந்துக்கள் பலியாகியுள்ளனர். 3 லட்சம் தமிழ் இந்துக்கள் முள்வேலி கம்பிகளுக்குள் சொந்த நாட்டில் அகதிகளாகச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்குப் பின்பும் இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற வெளியுறவுக் கொள்கைகள், இலங்கை அரசுக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றன. இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த தவறான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக நாளது வரை இலங்கைப் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. கேரளத்துக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய நாடான மாலத்தீவில்கூட இந்திய விரோத நடவடிக்கைகள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. தடுப்பார் யாருமில்லை. இந்திய நாட்டைச் சுற்றி இருக்கின்ற எந்தவொரு நாட்டுடனும் நமக்குச் சுமுகமான நட்புறவு கிடையாது. பொதுவாக இந்திய நாட்டைச் சுற்றியிருக்கும் எல்லா நாடுகளுமே ஒருகாலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. நம்மிடம் இருந்து மதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்ற அவர்கள், தற்போது நமக்கு எதிரி நாடுகளாக இருக்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுமே மதச்சார்புடைய நாடுகள். இலங்கை பெüத்த நாடு, மாலத்தீவு இஸ்லாமிய நாடு, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, நேபாளம் கம்யூனிஸ நாடு, வங்கதேசம் முஸ்லிம் நாடு, சீனா கம்யூனிஸ நாடு, இவைகளுக்கு மத்தியில் இந்தியா மட்டும் ஒரு மதச் சார்பற்ற நாடு. உலகின் எந்தவொரு மூலையிலும் ஓர் அமெரிக்கன் தாக்கப்பட்டால் அமெரிக்க நாடு யுத்தம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதேபோல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் 40-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகள் ஒன்றுகூடி கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஒன்றுகூடி இஸ்லாமியர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. இலங்கை ஒரு பெüத்த மத நாடு என்கிற காரணத்தால் உலகில் உள்ள எல்லா பெüத்த மத நாடுகளும் சிங்கள அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா பின்பற்றுகின்ற போலி மதச்சார்பின்மைக் கொள்கைகளாலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளாலும் இந்திய மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்பதுதான் நாம் கண்டறிந்த, நமக்குச் சரித்திரம் உணர்த்தி இருக்கிற உண்மை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் பெரும்பாலும் சிறுபான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் அரசியல் சுயலாபங்களுக்காகவும் கம்யூனிஸ்டுகளின் நிர்பந்தங்கள் மற்றும் தவறான ஆலோசனைகளின்பேரிலும் வெளியுறவுக் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அண்டைநாடுகள் உடனான வெளியுறவுக் கொள்கைகளை முடிவு எடுக்கும்போது இந்திய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு இந்திய மக்களின் நலன் ஆகியவற்றை மையமாக வைத்து முடிவு எடுப்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நிர்பந்தங்களின்பேரில் வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ""உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். இந்திய நாட்டின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் பகை நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்யும் அணுகுமுறையோடு கொள்கைகளை வகுக்க வேண்டும். இனிமேலாவது நேரு பாணியிலான வெளியுறவுக் கொள்கைகளைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் இந்திய மக்களின் கெüரவத்துக்கும் நன்மை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கைகளை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டிய தருணம் இது. அதைவிடுத்து, அந்நிய சக்திகளுக்குப் பயந்து அல்லது அடிபணிந்து நடப்போமேயானால் இந்தியா இருக்காது என்பது மட்டுமல்ல, நமது சுதந்திரமும், ஜனநாயகமும் கூடக் கேள்விக்குறியாகிவிடும்!

கருத்துக்கள்

அருமையான கட்டுரை. எனினும் நேரு குடும்ப மாயையில் இருந்து காங்.கட்சியினரும் இந்தியாவும் இந்த இழிநிலை தொடரத்தான் செய்யும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக