புதன், 23 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-115: எம்.ஜி.ஆர்.மறைவு - புலிகள் அஞ்சலி



தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987). 9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள். இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு, வெளிநாட்டு இணையமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிடவேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக்கொள்வதற்காகவே நட்வர்சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் தில்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர்சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது- "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார். வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்: ""ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்'' (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்). எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில், ""தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த "ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., "விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்படவேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார். "பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை' என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது இனி அமைதிக்கான நடைமுறை சாத்தியமற்றதான நிலையை ஜெயவர்த்தனாவின் பேட்டி தோற்றுவித்தது. அதற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை அவரது அமைச்சரவையில் வெளிப்படையாக ஆதரித்தவர் இருவர் மட்டுமே. ஒருவர், காமினி திஸ்ஸநாயக்கா; மற்றொருவர் ரோனி டி மெல் ஆவர். பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட அமைச்சர்கள் கலகக்கொடியைத் தொடர்ந்து தூக்கியபடியே இருந்தனர். சிங்களப் பேரினவாதத்தைத் தூக்கிப்பிடித்த புத்தபிக்குகள் மற்றும் மதவெறியர்கள் மட்டுமன்றி, மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.யும் "இந்தியப்படையே வெளியேறு' என்று! வீதிக்கு வந்து போராடியது. போராளிகளில் விடுதலைப் புலிகள் தவிர்த்து பெரும்பாலான இயக்கங்கள் திம்புவில் குறிப்பிட்ட தங்களது உயிர்க்கொள்கையான 5 அம்சத்தை மறந்து ஒப்பந்தத்தை ஆதரித்தனர். விடுதலைப் புலிகளோ நிர்பந்தம் காரணமாகவும், இந்தியாவுடன் ஒரு யுத்தம் தவிர்க்கும் எண்ணத்திலும் ஒப்பந்தத்தை ஏற்றனர் என்பதையும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்த ஒப்பந்தம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததற்கு அடிப்படைக் காரணமே, இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு, ஈழத் தமிழர்களின் அடிநாதமான தமிழ்த் தேசியம் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாததுதான். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் தங்கள் தங்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்த் தேசியம் என்ற அடிநாதத்தை பூமிக்கடியில் புதைக்க முற்பட்டதுதான்! இந்தத் தமிழ்த் தேசியம் என்பது என்னவென்று கலாநிதி அ.க.மனோகரன் "இலங்கை தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்னும் தனது ஆய்வு நூலில், ""தமிழ்த் தேசிய வாதம் ஒருபோதும் வெறும் புத்திஜீவிகளின் ஓர் எண்ணக் கருவாக இருந்ததில்லை. அவ்வாறிருக்குமாயின் அதற்கு உயிரோட்டம் இருந்திருக்காது. அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுமல்ல. அவ்வாறிருக்குமாயின் அது நீண்டகாலம் தளராது தொடர்ந்திருக்க முடியாது. மேலும், அது வெறுமனே உணவையும் உடையையும் உறைவிடத்தையும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பொருள்சார்ந்த நிலைமைகளையும் ஒரு மக்களுக்கு உறுதிப்படுத்துகின்ற ஒரு விடயமுமில்லை. அவ்வாறு கூறுதல் தமிழ் தேசியவாதத்துக்கு அதன் வளமான கலாசார மரபுரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும். தமிழ் தேசியவாதம் இவை அனைத்தையும் அதிலும் விடக் கூடியனவற்றையும் உள்ளடக்கியது. அது இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான விகிதாசாரங்களின் கூட்டுத் தொகையைவிட அதிகமான ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை. எதிர்ப்பு - வேறுபடுத்தல் - கூட்டுழைப்பு என்ற நீடித்த சிக்கலான செயல்முறையின் ஊடாக உருப்பெற்ற ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை'' என்று குறிப்பிடுகிறார். இலங்கைத் தமிழ் தேசியவாதம் என்பதை ஏற்று, அதில் உறுதிப்பாடுடன் நம்பிக்கை கொண்டு, அதனை 13-வது சட்டத் திருத்தத்திலும் சேர்த்து, அதனை நிறைவேற்றுவதில் ராஜீவ் காந்தி முன்னின்று செயல்பட்டிருந்தால், நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால், ராஜீவ் காந்திக்கே, தமிழ் தேசியம் என்பதில் நம்பிக்கையே இல்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால் மட்டுமே மேற்கண்ட யாவும் நிகழ்ந்திருக்கக் கூடும். இதற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் "ரா' அமைப்பினர் முன்னணியில் இருந்தனர். அடுத்த நிலையில் ஒருவகை தந்திர மனிதராக ஜெயவர்த்தனா. இவர்கள் போட்ட தூபம்தான் ராஜீவ் காந்தியைத் தமிழ் தேசியத்துக்கு எதிராகத் திருப்பியது. இலங்கையில் தமிழ் தேசியம் பலம் பெற்றால், அது இந்தியாவில் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று பயமுறுத்தினார்கள். அது காரணமாகவே, தேசியத்தை ஆதரிக்கும் ராஜீவ், மொழிவாரி தேசியத்துக்கு எதிரானவராக இருந்தார். "நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள்' என்ற மேலாதிக்கமே இந்தியாவிடம் இருந்தது என்பது புஷ்பராஜாவின் கருத்து. விடுதலைப் புலிகள் உள்பட அனைத்து இயக்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தான் விரும்பியதைச் செய்யும் குழுக்களாக, அவ்வியக்கங்களை வைத்திருக்க விரும்பியதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. இவை எல்லாவற்றையும்விட, விடுதலைப் புலிகளைச் சம்மதிக்க வைக்க, ஜூலை 28, 29 அதிகாலை அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, அதாவது எழுதப்படாத ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததும் ஒரு காரணமாயிற்று. அந்த எழுதப்படாத ஒப்பந்த விவரம் என்ன?நாளை: எழுதப்படாத ஒப்பந்தம்...

கருத்துக்கள்

MGR the great.Why did Jayalalitha not follow him.

By Mani
9/23/2009 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக