ஞாயிறு, 2 டிசம்பர், 2012

காவலர் உடையில் ஒரு புதுமையான மிதியூர்தி ஓட்டுநர்








போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை.


நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
போக்குவரத்து சீர்படுவதாகவும் இல்லை, அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.


அந்த நேரம் போலீஸ்காரர் போல சீருடை அணிந்த ஒரு வயதான ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் இருந்து இறங்கிவந்து, போக்குவரத்து நெருக்கடிக்கு நடுவில் நின்றுகொண்டு, வாகனங்களை சீர் படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை சுமந்து சென்ற வேன் டிரைவர்கள் உள்பட பலர், " நல்லவேளை பெரியவரே, நீங்க வந்தீங்க, ரொம்ப நன்றி'' என்று சொல்லிவிட்டு சென்றனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெரியவரின் தோற்றம் மட்டுமல்ல அவரது கதையுமே வித்தியாசமானதுதான்.
இன்றைக்கு 67 வயதாகும் ஆட்டோ டிரைவர் சந்திரன் வெள்ளந்தியாகவும், வெளிப்படையாகவும் தன்னைப்பற்றி சொல்கிறார்.


பசும்பொன் மாவட்டம் கமுதியில் பிறந்தவன் நான், அப்பாவின் கவனிப்பும், வளர்ப்பும் இல்லாததால் மகா மட்டமானவனாக வளர்ந்தேன், யாருக்கும் அடங்காத சேட்டைக்காரனாக விளங்கினேன், இதனால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, டான்ஸ் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது, ரிக்கார்ட் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து ஊர், ஊராக போய் டான்ஸ் ஆடினேன், டி.ராஜேந்தரின் மனைவியான உஷா ராஜேந்தர் கூட எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கேன்.
ரிக்கார்ட் டான்ஸ் ஆடுறவன்ங்றதால எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை, என்னடாது நம்ம நிலமை இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சு டான்ஸ் ஆடுறதை விட்டுவிட்டு, கார் டிரைவர் ஒருவரை பழக்கம் பிடிச்சு, அவரது காரை கழுவிக் கொடுத்து கார் ஒட்டக் கற்றேன். 35 ரூபாய் செலவழித்து லைசென்ஸ்ம் எடுத்தேன்.


ஆனால் யாரும் கார் ஒட்ட வாய்ப்பு கொடுக்கலை, அப்புறம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டுவோம்னு ஆட்டோ ஒட்டத் துவங்கினேன், அப்படி ஆட்டோ ஒட்டத்துவங்கி கிட்டத்தட்ட 37 வருஷமாச்சு, இப்ப சொந்த ஆட்டோ, சொந்த வீடு, மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என்று நல்லாயிருக்கேன்.
ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சு மனைவியோட நிம்மதியா வாழ்வோம்னு நினைச்ச நேரத்தில எனக்கு மஞ்சள் காமாலை நோய்வந்து பொழப்பேனான்னு ஆகிப்போச்சு, இயேசுவிடம் பிரார்த்தித்ததன் அடிப்படையில் பிழைச்சு எழுந்தேன், சபை சகோதரிகள் , "உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்களை ஒழிச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லைன்னாங்க, அன்னைக்கு வரை எனக்கு பழக்கமாகியிருந்த மது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்ற சகல கெட்ட பழக்கங்களையும், "சீ சனியன்களா'' என்று தூக்கியெறிந்தேன், இன்னைக்கு வரை அதை தொடவில்லை, அதே போல எந்த நோய் நொடியும் அதற்கு பிறகு என்னைத் தொடவில்லை.


சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் நான் ஆட்டோவ நிறுத்தற இடமான அபிபுல்லா சாலையில், காலையில் ஏற்படற போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யலாமேன்னு தோணுச்சு, அதன்படி ரோட்ல நின்னு சரி செய்தேன், எல்லோரும் நன்றி சொல்லி சென்றார்கள். அப்புறம் நான் சவாரி இல்லாம போகும்போது, எங்கே போக்குவரத்து நெருக்கடின்னாலும் உடனே இறங்கி அதை சரி செய்துவிடுவேன்.
இதை அடிக்கடி பார்த்த போக்குவரத்து டிஎஸ்பி ஒருவர், நமக்கு ஒத்தாசையா ஒருத்தன் எப்படி உழைக்கிறான் பாருன்னு சொல்லி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பி பழைய போலீஸ் யூனிபாரம், பூட்ஸ், பெல்ட் போன்றவைகளை கொடுத்துவிட்டாங்க, அதையெல்லாம் போட்டுக்கிட்டதும் ஒரு கம்பீரம் வந்திருச்சு, அப்போதிருந்து என்னோட ட்யூட்டி நேரம் முழுவதும் எப்பவும் இந்த டிரஸ்ஸோடதான் இருப்பேன்.


எனக்குன்னு நிறைய வாடிக்கையாளர் இருக்காங்க, செக்கை கையில கொடுத்து பணமாக்கி கொண்டுவந்து தர்ர அளவிற்கு நான் நம்பிக்கையான ஆளாகிட்டேன், இதுனால ஒருத்தரு மொபைல் போன் கொடுத்தாரு, ஒருத்தரு "ப்ளூ டூத்' கொடுத்தாரு, ஒருத்தரு புதுசாவே காக்கிதுணியில டிரஸ் தைச்சு கொடுத்தாரு. துப்பாக்கி வச்சுக்கிற இடத்துல போன் வச்சுக்குவேன், போலீஸ் ஸ்டார் குத்திக்கிற இடத்துல ஏபிசி என்று சும்மா குத்திக்குவேன். என்னால போலீஸ் உடைக்கு களங்கம் வராம பார்துக்குவேன்.
காலை 8 மணிக்கு ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சா மாலை 6 மணிக்கு வீட்டிற்கு போயிடுவேன், வீட்டில் மனைவி பேரன்களுடன் பொழுதை போக்குவேன், ஞாயிறு முழுவதும் சர்ச்சில் இருப்பேன், என் ஏரியாவில எந்த குழந்தை பார்த்தாலும் குட் மார்னிங் தாத்தான்னு சொல்லாம போகாதுங்க, அந்த அளவிற்கு குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன். பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன் என்ற சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.




- எல்.முருகராசு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மயிலாப்பூர் காரணீசுவரர்கோயில் தெருவைச் சேர்ந்த மிதியூர்திஓட்டுநர்  சங்கத்தினர் சாந்தோம் பள்ளி அருகே முறை வைத்துக் கொண்டு காலையில் நாள் தோறும் இரண்டுமணிநேரம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வந்தனர். ஆனால் போக்குவரத்துக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு இன்மையால் (தொந்தரவால்) இத் தொண்டினை நிறுத்தி விட்டனர். இனியேனும் இத்தகையோர் தொண்டுகளை மதித்து ஏற்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக