வெள்ளி, 7 டிசம்பர், 2012

காவிரியில் 10,000 கன அடித் தண்ணீர்..



பெங்களூரு: தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டும், அதை ஏற்க மறுத்துவந்த கர்நாடக அரசு வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரென தண்ணீர் திறந்து விட்டது.

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான வழக்கை, நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட், "தமிழகத்திற்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீரை, வரும், 9ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டும். அத்துடன் காவிரி கண்காணிப்பு குழுவை, மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று, சட்டசபை, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர்களுடன், பெல்காம் நகரில் ஆலோசனை நடத்தினார்.

மாநில துணை முதல்வர் ஈஸ்வரப்பா, அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார் ஜோல், உமேஷ் கட்டி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சி
தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், சட்டசபை ம.ஜ.த., தலைவர் ரேவண்ணா மற்றும் மேலவை ம.ஜ. த., தலைவர் நானய்யா ஆகியோர், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து, சித்தராமையாவும், ரேவண்ணாவும், "தமிழகத்துக்கு தண்ணீர் விடும் பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் ஷெட்டர் இன்றே (நேற்று) டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, கர்நாடக அணைகளில் நீர் குறைவாக உள்ளது. விவசாயிகளின் போராட்ட மிரட்டல் ஆகியவைகளை எடுத்து கூறி, தண்ணீர் விட முடியாது என்பதை தெளிவாக கூற வேண்டும்' என்றனர். அத்துடன், சுப்ரீம்கோர்ட் வக்கீல்களை அணுகி, "மறு ஆய்வு மனுவை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், "சுப்ரீம் கோர்ட்டின் அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடுமா' என, கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சியினரும், அமைச்சர்களும், "சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனு செய்ய

Advertisement
இருப்பதால், கோர்ட் அவ மதிப்பு வழக்கு வர வாய்ப்பில்லை' என்றனர்.

இதனையடுத்துபிரதமர் உட்பட, சிலரிடம் முறையிடவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனு தாக்கல் செய்வது தொடர்பாக, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டார்.

அதன்படி, டில்லிக்கு புறப் பட்டுச் சென்றார். ஆனால், இந்த விவகாரத்தில், நேற்று இரவு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி,நேற்றிரவு, மைசூரு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, தமிழ கத்திற்கு வினாடிக்கு, 10ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இதற்கு மாண்டியா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கிருஷ்ணராஜ சாகர் அணையைச் சுற்றிலும், 3,000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணையை சுற்றிலும், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு, கன்னட ரட்ஷண வேதிக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக