சனி, 8 டிசம்பர், 2012

காவிரி நீர்ச் சிக்கல் : தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ


காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு

காவிரி நீர் சிக்கல் : தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
திருச்சி, டிச. 8-
திருச்சியில் நேற்று 'பாராளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் தொப்பாசிரியர், செந்தில் அதிபன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடந்தது. முதல் நூலை வக்கீல் வீரபாண்டியன் வெளியிட தொழில் அதிபர் நாகப்பா பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-

பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியின் ஜோதிர்மயிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூபேஸ்குப்தா, அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற என்.ஜி.ரெங்கா போன்றோரிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன். பொடா சட்டத்தை கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அப்போது ஆதரித்தேன். அதன் பிறகு அச்சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கடுமையான தயாரிப்புகளை மேற்கொண்டேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை.

நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்டி வைத்து கீழே உள்ள மற்ற மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் தீர நதிகளை தேசிய மயமாக்குவது தான் வழி.

நதிகள் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சக போக்கை கடைப்பிடித்தால் ஏன் மத்திய அரசின்கீழ் தமிழ்நாடு இருக்க வேண்டும். இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழா நடை பெறும் போது இந்தியா ஒரு நாடாகவே இருக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். கர்நாடகாவில் இருந்து நமக்கு தண்ணீர் கிடைக்காத போது இங்கிருந்து ஏன் அவர்களுக்கு மின்சாரம் தரவேண்டும் தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் அரசு மத்தியில் இருக்க கூடாது அதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

திருச்சியில் நேற்று நடந்த பாராளுமன்றத்தில் வைகோ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பங்கேற்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழிலும் வடிவேலு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பெயர்கள் வாழ்த்துரையில் இடம் பெற்றிருந்தது.

வடிவேலு நிகழ்ச்சிக்கு வருவதாக எதிர்பார்த்த நிலையில் அவர் ம.தி.மு.க.வில் சேரப்போகிறாரா? என்ற தகவலும் வதந்தியாக பரவியது. இந்த நிலையில் வடிவேலு விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் கூறப்படவில்லை. திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் விழாவில் வைகோவுடன் பங்கேற்று பேசினார். வடிவேலு வரவை எதிர்பார்த்து விழாவிற்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். வடிவேலு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக