சனி, 8 டிசம்பர், 2012

சம்பா நெற்பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் போதாது : இராமதாசு

சம்பா நெற்பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் போதாது : இராமதாசு

சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டிஎம்சி தண்ணீர் போதாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லியில் நேற்று கூடிய காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு சாக்குபோக்குகள் கூறப்பட்டன. தற்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்ற போதிலும் வரவேற்கத்தக்க முடிவு ஆகும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்படுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவை முழு அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டால், காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கும் அவல நிலை தமிழகத்திற்கு இனி ஏற்படாது.
அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவாறு வினாடிக்கு 10 ஆயிரம் டி.எம்.சி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் கூட இம்மாதத்தில் சுமார் 25 டி.எம்.சி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விசயத்தில் கண்காணிப்புக்குழுவின் ஆணைக்குத் தான் கட்டுப்படுவோம் என்று கர்நாடக அரசு கூறியது. ஆனால், இப்போது கண்காணிப்புக்குழுவின் தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக முதல்வர் கூறுவது ஏமாற்றும் செயலாகும்.
காவிரியில் தண்ணீர் வராததால் பாசன மாவட்டங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
பயிர்கள் கருகி வைக்கோலாகி வருகின்றன. கருகிய பயிர்களைப் பார்த்த அதிர்ச்சியில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக