சனி, 8 டிசம்பர், 2012

உலகம் கண்டறியா அருவினை புரிந்தவர்க்கு அமைதி காத்தவரின் வாழ்த்து

உண்மைதான். தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள், தம் மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்கள், உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் ஆகியோரின் முறையீடுகள், கதறல்கள், மன்றாடல்கள் முதலான தடைகளை மீறிக் கொத்துக் குண்டுகளையும் ஏவுகலன்களையும்  பிறபடைக்கலன்களையும் படைப்பயிற்சியையும் படை வீரர்களையும் அளித்து  நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்த மிகப்பெரும் சாதனை செய்தமைக்குப் பொருத்தமானவர்தான் வாழ்த்து தெரிவிக்கின்றார். எனவே, அருள்கூர்ந்து அவர் வேண்டிய பதவிகளை அவர் வேண்டியவர்க்கு அளியுங்கள். இத்தகைய களங்கமான சாதனை போதும் என எண்ணினால் அன்பும் அருளும் அறமும் கொண்டு எஞ்சிய ஈழத்தமிழர்களின் வேதனைகளைத் துடைத்தெறிந்து தமிழ் ஈழம் மலரச் செய்யுங்கள்.  அப்பொழுது இவர் மட்டுமல்ல அனைத்துத் தரப்பாருமே வாழ்த்துவர்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த சோனியா : கருணாநிதி வாழ்த்து


பல தடைகளைத் தகர்த்து சாதனைகளைப் படைத்து வரும் சோனியா என்று திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்தினை அனுப்பியுள்ளார்.
அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் தாங்கள், ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருகின்றீர்கள். தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றியிருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். இந்த அசாதாரண சூழ்நிலையில், மத்தியில், பாதுகாப்பான, நிலையான ஆட்சியை தங்களால்தான் தர முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்துள்ள சாதனைகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் வெகுவாகக் கவர்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காகவும், அவர்களது வாழ்வாதாரத்துக்காகவும் நீங்கள் காட்டும் ஆர்வத்தை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர்.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக சார்பில், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் வாழ பிறந்தநாளன்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக