செவ்வாய், 4 டிசம்பர், 2012

காவிரி நீர் - கண்காணிப்பு க் குழு மீது தமிழக அரசு முறையீடு




காவிரி நீர் - கண்காணிப்பு க் குழு மீது  உச்ச மன்றத்தில் தமிழக அரசு  முறையீடு

புதுதில்லி :"காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்து விடும் விஷயத்தில், காவிரி கண்காணிப்பு குழு, எந்த முடிவும் எடுக்காதது, கவலை அளிக்கிறது. கர்நாடகாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், கண்காணிப்பு குழு, இந்த போக்கை பின்பற்றுகிறது' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இடையே, காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகள் சார்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது' என, கர்நாடகம் கைவிரித்து விட்டது.

இது தொடர்பான விவரங்களை, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து, "இரு மாநில அரசுகளும், தங்களிடம் உள்ள தண்ணீர் இருப்பு, தண்ணீர் தேவை குறித்து, நம்பத் தகுந்த ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இரு மாநில அரசுகளும், அறிக்கை தாக்கல் செய்தன. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல், வைத்தியநாதன், வாதிட்டதாவது: விவசாய காலம் எது, பருவ மழைக் காலம் எது என்பது, காவிரி கண்காணிப்பு குழுவான, சி.எம்.சி.,க்கு நன்றாக தெரியும். ஆனாலும், வறட்சி காலத்தில், நதி நீரை பகிர்ந்து கொள்வது பற்றிய கொள்கையில், சி.எம்.சி., வேண்டுமென்றே, எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது.தென் மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால், தமிழக விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இது தொடர்பாக, சி.எம்.சி., சார்பில், கர்நாடகாவுக்கு, எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; தேவையான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. சி.எம்.சி.,யின் இந்த போக்கிற்கான, உண்மையான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. கர்நாடகாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், சி.எம்.சி., இந்த போக்கை பின்பற்றுகிறது என, நினைக்கத் தோன்றுகிறது.இவ்வாறு, வைத்தியநாதன் கூறியதும், குறுக்கிட்ட நீதிபதிகள், "காவிரி நதி நீர் பிரச்னையில், இந்த விவகாரத்தை இழுக்க வேண்டாம்'என்றனர்.

இதையடுத்து, தொடர்ந்து, வைத்தியநாதன் கூறியதாவது:ஆனால், இது தான் உண்மை. வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிடுவது குறித்து, ஜனவரி, 31ம் தேதிக்கு பின், முடிவு செய்து கொள்ளலாம் என, கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.அதற்குள், டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள, சம்பா நெற்பயிர், முழுவதும் பாதிக்கப்பட்டு விடும். சம்பா சாகுபடியை காக்க, அடுத்த, 15 நாட்களுக்கு, குறைந்தது, 30 டி.எம்.சி., தண்ணீராவது தேவைப்படுகிறது.இவ்வாறு, வைத்தியநாதன் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடகா வழக்கறிரும், தன் வாதத்தை எடுத்து வைத்தார்.

அவர் கூறுகையில்,""அணைகளில், எங்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், எங்களின் நிலை என்னாவது'என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக