அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
48
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 414)
அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம் கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.
தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள் கேட்டலே உயர்வு தரும் எனக் கூறி அதற்கான பத்து வழிமுறைகளையும் கூறுகின்றனர்.
ஒற்கம் என்றால் தளர்ச்சி. “தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம்” என்கிறார் தேவநேயப்பாவாணர். ஒருவன்+கு= ஒருவற்கு.(ஒருவர்+கு=ஒருவர்க்கு). தளர்ச்சி வந்தபொழுது கேள்வியறிவு ஊன்றுகோல் போலத் தாங்கி உறுதியான உதவி புரியும் என்கின்றனர் உரையாசிரியர்கள். ஊன்று என்பது னகரம் திரிந்து ஊற்று ஆனதாகவும் குறிப்பிடுகின்றனர். அடுத்த குறளில் “ஊற்றுக்கோல் அற்றே”(415) என ஊன்றுகோலுடன் ஒப்பிட்டுச் சொல்வதால் இங்கும் ஊன்றுகோலாகக் கூறியிருக்க வாய்ப்பில்லை. ஊற்றுநீர் போல அறிவுபெருகத் துணையாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுவது இயல்பாக உள்ளது.
நல்லோர் சொற்கள் நமக்கு நற்துணையாக வருவன. எனவே, கேள்விச் செல்வத்தைத் தொடர்ந்து பெற்றால், உடனே நன்மை புலப்படாமல் போகலாம். ஆனால், இடையூறு வரும் பொழுது அதனைச் சமாளிக்க உறுதுணையாக அமையும். ஊருணி நீர் பெருகி உதவுவதுபோல் அறிவூற்று உற்ற துணையாக அமையும். எனவே, படிக்காவிட்டாலும் படித்தவர் சொல்லும் அறிவுக்கருத்துகளைக் கேட்க வேண்டும். கற்றிலன் என்பது ஒன்றுமே கற்காதவரையும் குறிக்கிறது. நமக்குத் தேவையான மெய்ப்பொருள் நூல்களையும் துறையறிவு நூல்களையும் கற்காதவரையும் குறிக்கும்.
படிக்காவிட்டாலும் படிக்காதவர் மூலம் நூல் கூறும் அறிவுக்கருத்துகளைக் கேட்டுப் பெறுக!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 24.09.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக