27 செட்டம்பர் 2019 கருத்திற்காக..
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
47
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413)
செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.
உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உணவியலிறிஞர்கள் இன்றைக்குக் கூறுவது இக்குறள் மூலம் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமேலழகர் அவி உணவு என்பது தேவர்க்கு வேள்வித்தீயில் கொடுப்பன என்கிறார். இவர் வழியில் இக்கால உரையாசிரியர்களும் வேள்வித்தீயில் அவிக்கப்படும் உணவு என்கின்றனர். தீயில் இடப்படும் உணவு தூய்மையாகித் தேவர்க்கு உணவு ஆகுமாம். தீயில் இடப்படுவன அழியத்தானே செய்யும்! அழிந்தபின் யாருக்கும் உணவு ஆக முடியாதே! அவ்வாறிருக்க இங்கே தீயில் இடப்படுவது எங்கோ உள்ளதாகக் கூறப்படுபவர்களுக்கு எங்ஙனம் உணவாகும். தீயில் பொருள்களைப் போடும் ஆரிய வேள்விக்கு எதிரானவர் திருவள்ளுவர்(குறள் 259). அவர் அத்தகைய வேள்வி உணவை எங்ஙனம் போற்றிக் கூறியிருப்பார்.
‘அவி’தல் = குறைதல்; அவியுணவு = ‘குறைவான உணவு’ என்று விளக்குகிறார் புலவர் குழந்தை. குறையுணவு உண்டு புலனடக்கி வாழும் ஆன்றோர் போலக் கேள்விச் செலவம் உடையோர் மதிக்கப்பெறுவர் என்கிறார் இவர்.
அவி உணவு = அவிக்கப்பட்ட உணவு = தீய தன்மை கெடுக்கப்பட்ட உணவு என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.
உணவிற்கும் பண்பிற்கும் தொடர்பு உண்டு. குறைந்த அளவு நல்லுணவை உண்டு ஆன்றோர் சிறக்க வாழ்கின்றனர். இத்தகைய ஆன்றோர்களுக்கு ஒப்பானவர்கள், கேள்விச்செல்வத்தை மிகுதியும் உடையவர்கள் எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
கேள்விச்செல்வம் பெற்று ஆன்றோர்க்கு இணையாக வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 23.09.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக