(தோழர் தியாகு எழுதுகிறார் 238 : உழவர் போராட்டம் வெல்க! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

காதை 14

என் பெயர் இமா (உ)லூரம்பம் நிகாம்பி. அகவை 72. நான் மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் போரில் மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மீரா பைபி பெண்களை ஒரு கருவியாகக் கையாண்டு வருவது வெட்கக் கேடானது. மீரா பைபி குழுவை நிறுவிய பெண்களில் ஒருத்தி என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன்.

2004ஆம் ஆண்டு மணிப்பூரில் அசாம் படைப் பிரிவினரின் காவலில் மனோரமா தஞ்சாம் என்ற 32 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கிறதா? அந்தக் கொடுமையை எதிர்த்து ஆடை களைந்து INDIAN ARMY RAPE US என்ற பதாகையுடன் போராடிய 12 பெண்களில் நானும் ஒருத்தி.

மீரா பைபி அமைப்பு எப்போது எதற்காக நிறுவப்பெற்றது? எப்படிப் புகழ் பெற்றது? என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பைபி என்றால் சுடரேந்தி என்று பொருள். மீரா பைபி என்றால் பெண் சுடரேந்தி! அல்லது சுடரேந்திய மகளிர்! மணிப்பூரில் மனிதவுரிமை மீறல்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இந்த இயக்கம் வகித்த பங்கினால் மணிப்பூர் அன்னையர் என்றும் புகழ்பெற்றனர்.

இப்போதைய காக்சிங் மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு மீரா பைபி இயக்கம் தொடங்கப்பெற்றது. மணிப்பூர் மக்கள் அப்போது தன்-தீர்வுக்காகவும் தன்னாட்சிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். அரச வன்கொடுமைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஆய்தப்படைகள் சிறப்பதிகாரச் சட்டத்துக்கு (AFSPA) எதிராகவும், போதைப் பழக்கத்துக்கு எதிராகவும் அடித்தட்டுப் பெண்களைத் திரட்டி மணிப்பூர் சமுதாயத்தில் ஒரு புத்தெழுச்சியை மீரா பைபிகள் தோற்றுவித்தார்கள்.

மணிப்பூரில் மகளிர் இயக்கம் என்பது பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாகும். மகளிர் போர், மகளிர் எழுச்சி என்ற பொருளில் ‘நூப்பி இயான்’ என்ற மகளிர் இயக்கம் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1939ஆம் ஆண்டு மணிப்பூரில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணமான அரிசி ஏற்றுமதியை எதிர்த்து மகளிர் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் மீரா பைபிக்கள் திசம்பர் 12ஆம் நாளை மகளிர் போர் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

1970களில் நிசா பந்திகள் என்ற பெண்கள் இயக்கம் வளர்ந்தது. குடிவெறிக்கும் போதைப் பழக்கத்துக்கும் எதிராக இந்தப் பெண்கள் நடத்திய போராட்டத்தால் மணிப்பூரில் மதுவிலக்குச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பெண்கள் இம்பாலிலும் மணிப்பூர் எங்கும் தெருக்களில் நடக்கும் போது கையில் விளக்கேந்திச் செல்வார்கள். மதுவெறியர்களைக் கண்டிப்பார்கள். மதுபானக் கடைகளுக்குத் தீவைப்பார்கள். விளக்கேந்திகள் தீச்சுடர் ஏந்திகளாக மாறிய போது பெண் சுடரேந்திகள் என்று பெயர் பெற்றனர். இப்படித்தான் மீரா பைபிக்கள் இயக்கம் பிறந்தது.

இந்திய இராணுவம் புரிந்த வன்கொடுமைகளுக்கு எதிராக மீரா பைபிக்கள் நடத்திய அறப் போராட்டம் உலகப் புகழ் பெற்றது. இதன் உச்சமாகத்தான் 2004ஆம் ஆண்டு 12 பெண்கள் ஆடை களைந்து போராடினார்கள். மீரா பைபி என்ற முறையில்தான் இரோம் சருமிளா ஆண்டுக் கணக்கில் நீண்டு சென்ற பட்டினிப் போராட்டம் நடத்தினார்.

எப்படி இருந்த மீரா பைபி இயக்கம் இப்படி ஆகி விட்டது என்று நினைக்க நினைக்க அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. குக்கி பழங்குடிகளுக்கு எதிராக மெய்த்தி வன்முறையைத் தூண்டுவதில் மீரா பைபிக்கள் முனைப்புடன் செயல்படுவதற்குச் சான்றாகப் பல செய்திகள் வருகின்றன. 2023 சூலை 21ஆம் நாள் இம்பால் கிழக்கில் 18 வயதுக் குக்கிப் பெண்ணை ஆய்தமேந்திய நான்கு மெய்த்தி இளைஞர்கள் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்ணை வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்ததே மீரா பைபி இயக்கப் பெண்கள்தாம் என்பது நம்ப முடியாத கொடுமை!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 268