(தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12 தொடர்ச்சி)
மணிப்பூர்க் கோப்புகள்
(MANIPUR FILES)
காதை (13)
புது தில்லி மகாவீர் வளாகத்தில் கிறித்துவ அரசுசாரா நிறுவனமாகிய ‘இவாஞ்செலிக்கல் பெலோசிப்பு ஆஃப் இந்தியா‘ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவர்களின் கருத்தரங்கக் கூடம் இடைக்காலத் தங்கல்முகாமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 9-10 குக்கிக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
என் பெயர் (உ)ரோசலிந்து. குக்கி இனம். அகவை 58. மெய்த்திக் கூட்டம் எங்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய போது சமையலறையில் எரிவாயு உருளை வெடிக்கக் கண்டு அவர்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். நான் சுவரேறிக் குதித்து காலை உடைத்துக் கொண்டேன். இங்கே புது தில்லியின் மகாவீர் வளாகத்தில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்திருக்கிறேன்.
தில்லியில் தஞ்சம் பெற்று வாழ்வது தாயகத்தில் வாழ்வது போன்றதல்ல. ஆனால் உயிரோடு மட்டும் இருப்பதிலேயே மகிழ்ச்சிதான். தட்பவெப்ப நிலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லைதான். நான் பாதுகாப்பாக இருப்பதுதான் முகன்மையானது.
நான் டாக்டர் தாரா மஞ்சின் ஃகாங்குசோ, அகவை 58. இம்பாலை விட்டுத் தப்பி வரும் போது என் 87 வயது தாயாரையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையையும் அழைத்து வர வேண்டியதாயிற்று.
அவர்கள் கூட்டம் கூட்டமாக எங்கள் குடியிருப்புக்குள் கத்திக்கொண்டே வந்தார்கள். கையில் தடிகளும் மின்சாரக் கைவிளக்குகளும் வைத்திருந்தார்கள். குக்கிகளைக் கொல்வோம்! குக்கிகளைக் கொல்வோம்! என்று கத்தினார்கள். நாங்கள் அரண்டு போனோம், செய்வதறியாது திகைத்து நின்றோம். எப்படியோ தப்பிப் பிழைத்து வந்து விட்டோம்.
நற்பேறு பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்றுதான் சொல்ல வேண்டும். அகவை முதிர்ந்த என் தாயாருக்கும், மனவளர்ச்சி குன்றிய என் தங்கைக்கும் இது பேரதிர்ச்சியான துன்பம். மாற்று உடைகள் இல்லாமல்தான் வந்தோம். தில்லியின் சூழல்கள் எங்களுக்குத் தெரியவில்லை. பணம் எடுக்கும் பொறி எங்குள்ளது, கடைக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. இருந்தாலும் நற்பேறு பெற்றவர்கள் என்பதால்தான் இன்று உயிரோடிருக்கிறோம்.
இம்பாலில் எங்கள் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தவரும் உய்ர்தப்பி தில்லிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. எங்கு போனாலும் யாராவது துணைக்குப் போக வேண்டும்.
எங்களைத் துரத்தி விட்டனர், மெய்யாகவே விரட்டியடித்து விட்டனர். திரும்பி வரக் கூடாது என்று தூக்கியெறிந்து விட்டனர். ஏனென்றால் நாங்கள் அயலாராம்! 60 ஆண்டுக் காலமாக மணிப்பூரில் வாழ்ந்திருக்கிறோம். எனக்கு 58 வயதாயிற்று. வாழ்நாள் எல்லாம் இம்பாலுக்குச் சொந்தமாகவே இருந்துள்ளேன். என் தாயாருக்கு 87 வயதாயிற்று. திரும்பிப் போக வேண்டும், தாயகத்தில் உயிர் விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
நான் இலால்போய் மங்குதே. அகவை 30. எங்கள் அண்டை வீட்டார், நானும் என் குடும்பமும் அவர்களோடு அறுபதாண்டுக் காலம் சேர்ந்து வசித்திருகிறோம். அவர்களே எங்களைத் தாக்க வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘இவர்கள் எப்படி நம்மைத் தாக்கக் கூடும்?’ கூட்டத்தில் சிலர் சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்திருந்தனர். நாங்கள் அடிக்கடி பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரர்களும் இருந்தனர். ‘அட கடவுளே! இவர்கள் எப்படி நம்மைக் கொல்ல வரக் கூடும்?’
எதிர்காலம் பற்றிய பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. தாயக மாநிலத்துக்குத் திரும்ப முடியுமா? என்று தெரியவில்லை. ஏதோ இயல்புநிலை போன்ற சூழலில் வாழத்தான் விரும்புகிறோம்.
நான் சியார்சு தங்குகோலா. அகவை 38. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்நாட்டுப் போரில் தப்பி இந்த ஏதிலி முகாமுக்கு வந்துள்ளேன். ஆமாம், அது உள்நாட்டுப் போர்தான். ஒரு சமுதாயம் மற்றச் சமுதாயத்தையே பகையாகப் பார்த்தது. வாய்ப்புக் கிடைத்ததும் கொலை செய்யவும், வீட்டை கொளுத்தவும் தயங்கவில்லை. யாருக்கும் பாதுகாப்பில்லை. நீங்கள் குக்கி என்றால் மெய்த்திகள் உங்களுக்குத் தீமை செய்யாமல் விட மாட்டார்கள்.
முதல் தாக்குதல் அலையிலேயே பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பியோடிப் பிழைத்தனர். இளைஞர் பலரும் வேலை இழந்து விட்டனர்.
நான் (இ)லல்லியன் வைப்பே. அகவை 28. போன மாதம்தான் இம்பாலில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்து தில்லிக்கு உயிர்தப்பி ஓடி வந்து விட்டதால் வேலை போய் விட்டது. இப்போது தில்லியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலை பொதுக் கணக்காயர் அலுவலகத்தில் தரவுப் பதிவு செய்யும் பணியாகும். இது மைய அரசுப் பணி, ஒரு திங்கள் மட்டுமே இந்த வேலையில் இருந்தேன். எதிர்பாராமல் வெடித்த வன்முறையால் வேலையும் இடமும் இழந்து வெளியேறி வந்து விட்டேன். நாட்டின் தலைநகரில் அதே போன்ற வேலைக்காக அலைகிறேன்.
நான் மாங்கு நிகைத்தே. எவாஞ்செலிகல் பெலோசுப்பு ஆஃப் இந்தியா ஒழுங்கு செய்துள்ள துயர்தணிப்பு முகாமில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். காலையும் பகலும் இரவும் அவர்களே உணவு சமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கிருக்கும் காலத்தில் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியாவது கிடைக்க வேண்டும், அதே போல் தமக்குள்ள திறன்களுக்குப் பொருத்தமான வேலைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.
மேலும், இவர்களில் பெரும்பாலாரின் வீடுகளும் மற்ற உடைமைகளும் எரிக்கப்பட்டு விட்டன. இவர்கள் தில்லியிலேயே நீடித்து வாழ்வதற்கு வேலை வாங்கித்தர இயன்றதனைத்தும் செய்கிறோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 267
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக