திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

6

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(திருவள்ளுவர், திருக்குறள் 298)
“புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர்.
உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத நீரைப்பற்றி இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தண்ணீர் இன்றியமையாதது. அதனை மாசுபடாமல் காப்பது நம் கடமையாகும்.. தண்ணீர் மட்டுமின்றிச் சுற்றுப்புறத்தில் நமக்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் மாசுபடாமல் காத்தல் வேண்டும். சுற்றுப்பறத் தூய்மைக்கும் நீரே அடிப்படையாக அமைகிறது.
 வாய்மையைப்பற்றிக் கூறும்பொழுது திருவள்ளுவர், பிறருக்குத் தீங்கு விளைவிக்காத சொல்லே வாய்மை, பிறருக்குக் குற்றம் இல்லா நன்மை தரும் பொய்ம்மையும் வாய்மையே, நெஞ்சறிந்து பொய்கூறும் பொய்யரை அவர் நெஞ்சே சுடும், உள்ளத்தில் பொய் இல்லாதவர் உலகத்தார் உள்ளத்தில் உள்ளார், வாய்மையிற் சிறந்தது யாதுமில்லை,  உண்மை பேசுதல் தவத்தையும் தானத்தையும்விடச் சிறந்தது, பொய்யாமை எல்லா அறமும் தரும், வாய்மையுடன் திகழ்ந்தால் பிற அறங்கள் தேவையில்லை,  பொய்யாமையே சிறந்த ஒளிவிளக்கு, அகஇருள் நீக்கும் விளக்கு பொய்யாமையே என   வாய்மையின் தன்மை, எது வாய்மை, வாய்மையின் சிறப்பு எனப் பகுத்துத் தெளிவுபடுத்துகிறார்.  அவ்வாறு கூறும்பொழுது நீருடன் ஒப்பிட்டுக் குற்றமற்ற தன்மைக்கு வாய்மையே அடிப்படை என வலியுறுத்துகிறார்.
மேற்குறித்த குறளுக்கு விளக்கம் தரும் பெரும்பாலோர் புறம் என்பதை உடலின் வெளிப்பகுதி எனக் கருதிக் கொண்டு உடல் அழுக்கைப் போக்க நீர் வேண்டப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர். உடல் அழுக்கை மட்டும்போக்க நீர் உதவவில்லை. உணவு மூலப் பொருள்களைத் தூய்மை செய்யவும் உணவை ஆக்கவும் சமையல் பாண்டங்கள், அறைகள், கழிப்பிடங்கள் என யாவற்றையும் தூய்மை செய்யவும் நீர் தேவைப்படுகிறது. அல்லது நன்னீாின்மையால் அல்லது கழிவு நீரால் அல்லது நீரை முறைப்படி பயன்படுத்தாமையால் தூய்மையின்மை என்ற நிலை உண்டாகிறது. எனவே, சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை நீர். இதையே திருவள்ளுவர் புறந்தூய்மை எனக் குறிக்கின்றார்.
கழிவுநீர் கலப்பதால் நீர் கேடுறுகிறது. இதனால் நாம் நோய்க்கு ஆளாகிறோம். தொற்றுநோய்க்கு ஆளானால் பிறருக்கும் நோய் பரவித் துன்பம் தருகிறது. நோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மையான சூழல் தேவைப்படுகிறது. இதற்கு நீர் அடிப்படையாய் அமைகிறது. ஆகப் “புறந்தூய்மை நீரால் அமையும்” என்பதன் மூலம் நன்னீரால் தூய்மையும் மாசுற்ற நீரால் கேடும் விளையும் என இரு நிலையையும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் என்பதே சரியாக இருக்கும்.
எனவே, உடலிலுள்ள அழுக்கைப் போக்க மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் சேரும் அழுக்கை அகற்றித் தூய்மையான சூழலில் வாழவும் நீரே தேவை என்பதையே திருவள்ளுவர் ‘புறந்தூய்மை’ என்பதன் மூலம் உணர்த்துகிறார்.
இன்றைய சுற்றுப்புற அறிவியல் வலியுறுத்தும் புறத் தூய்மையை அன்றே திருவள்ளுவர் சுட்டிக் காட்டி உள்ளார் என்பது சிறப்பல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 27.07.2019