திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

5

 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271)
ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல்.  இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார்.
வஞ்சக மனம் கொண்டு  அதனை மறைத்து வெளியில் ஒன்றுமாய் உள்ளுக்குள் வேறுமாய் இருப்பவனைப் பார்த்து ஐம்புலன்களும் உள்ளுக்குள் கேலி செய்து சிரிக்கும் என்கிறார். அஃதாவது போலித்துறவியரைப் பிறர் குறை சொல்லாவிட்டாலும் அவர்களின் மனச்சான்றே அவர்களைக் கண்டு எள்ளி நகையாடும் என்கிறார் திருவள்ளுவர். (படிற்று ஒழுக்கம் என்றால் பொய் ஒழுக்கம்.)
நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகியவை ஐம் பெரும் பூதங்கள்.
மெய் (காற்று), வாய்(நீர்), கண்(தீ), மூக்கு(நிலம்), செவி (வான் ) ஆகியன ஐம்பூதங்கள் உணர்த்தும் பொறிகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன ஐம்பொறிகள் உணர்த்தும் குணங்கள்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (திருக்குறள் 27)
என அவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சுவை முதலான ஐம்புலன்களின் வகைகளை ஆராயும் வல்லமையாளரிடம் உலகம் உள்ளது என்கிறார். வகைகளை ஆராய்தல் என்றால், ஐம்புலன்கள், அவற்றிற்கு முதலாய் அமைந்த ஐம்பூதங்கள், வகைப்பாடுகள் முதலியவற்றை ஆராய்தல்.
எடுத்துக்காட்டாக ஊறு என்றால் தீண்டுதல் உணர்ச்சி. வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, வழமை(வழுக்கும் தன்மை), கரண்மை(கரடுமுரடு) என இஃது எட்டு வகைப்படும். இவ்வாறு இவற்றையும் ஐம்பூத வழிவகைகளையும் ஆராய்தல்.
நிலத்திற்கு(மண்ணிற்கு) மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் ஐந்து குணங்களும் உள்ளன. நீருக்குச்  சுவை, ஒளி, ஊறு, ஓசை ஆகிய நான்கு குணங்கள், நெருப்புக்கு ஒளி, ஊறு, ஓசை ஆகிய மூன்று குணங்கள், காற்றுக்கு ஊறு, ஓசை என்ற இரண்டே குணங்கள், வானிற்கு  ஓசை என்ற ஒரே குணம் எனக் குணங்கள் அமைந்துள்ளன.
இதைப் பற்றி 
           மண்ணதனில் ஐந்தை
           மாநீரில் நான்கை
           வயங்கெரியில் மூன்றை
          மாருதத்து இரண்டை
          விண்ணதனில் ஒன்றை
என்று திருநாவுக்கரசர்  தேவாரத்தில்(திருமுறை , 6:60:3) பாடியுள்ளார்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன உண்ணல், காணல், மெய்உறுதல், கேட்டல், முகர்தல் என்பவற்றைக் குறிக்கும்.
எனவேதான் திருவள்ளுவர் பின்னர், ஐம்புலன் உணர்வுகளால் பெறும் இன்பங்களையும் ஒரே நேரத்தில் தலைவியிடம் தலைவன் காண்கிறான்  என்கிறார்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள (திருக்குறள் 1101).
என்பது அத்திருக்குறள்.
இவ்வாறு ஐம்பூதங்கள் பற்றியும் அவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பு பற்றியும் குணங்கள் பற்றியும் உள்ள அறிவியல் குறிப்புகளை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
காலந்தோறும் போலித்துறவியர் குறித்து எச்சரித்தாலும் அவர்கள் மீது மயக்கம் கொண்டு அவர்கள் காலடியில் வீழ்வோர் குறையவில்லையே!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 26.07.2019