திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர்,உலகப்பொது நூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
 2

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)
 ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல் தன் நீர் வளத்தில் குறையும். இதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார்.
‘தடிந்து எழிலி’ என்பதன் மூலம், இடிஇடித்து மின்னி மழை பெய்வதையும் பூரித்து (முகில் பெருத்து) மழை பெய்வதையும் உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
நீர் நிலைகளில் உள்ள நீர், வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று காற்றில் கலந்து முகிலாக உருவாகிப் பின்னர் மழையாக மாறுகிறது என்பதுதான் அறிவியல் உண்மை. அவ்வாறு பெய்யும் மழை மீண்டும் கடலில் கலந்து மீண்டும் முகிலாக மாறுகிறது. இந்த நீர்ச் சுழற்சியைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நீரில் இருந்து எழுந்து உருவாகும் முகிலின் பெயர் ‘எழிலி’(nimbostratus). இச்சொல்லைச் சங்க இலக்கியங்களில் புலவர்கள் 33 இடங்களில் கையாண்டுள்ளனர்.
திருவள்ளுவர் தம் காலத்தில் மக்கள் நன்கறிந்த அறிவியல் உண்மையை இத்திருக்குறள் மூலம் நமக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்கும் பொழுது ‘எழிலி’ என்னும் அறிவியல் கலைச்சொல்லையும் பயன்படுத்தியுள்ளார்.
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டாவது அதிகாரமாக வான்சிறப்பு கூறி மழையைச் சிறப்பிக்கிறார்.
மழை இல்லையேல் உணவு இல்லை, பூசைகளும் வழிபாடுகளும் இல்லை, தானமும் தவமும் இல்லை, உயிர்கள் இல்லை, உலகமும் இல்லை என அடுக்கடுக்காகக் கூறுகிறார்.
மழை இல்லாமல்  நீர்நிலைகள் மூலம்  பயன்பெறலாமே! நீண்ட பரப்பிலான கடல்கள் உள்ளனவே! அவற்றின் மூலம் நீராதாரம் பெற்றுப் பயனுறலாமே எனச் சிலர் எண்ணுவர். எனவேதான்,  மழையின்றி நிலம் மட்டும் தன்னிலை கெடும் என எண்ணவேண்டா என்பதற்காகத்தான் கடலும் தன் தன்மை கெட்டு நீர் வளம் அற்றுப் போகும் என எச்சரிக்கிறார்.
இவ்வாறு கூறும் பொழுது, தொடக்கத்தில் தெரிவித்தவாறு மழையின் தோற்றம் குறித்த அறிவியல் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் தொடக்கநிலையில் உள்ள முகிலின் பெயரான ‘எழிலி’ என்பதையும் கையாண்டுள்ளார்.
திருவள்ளுவரின் எச்சரிப்பை உணர்ந்து  நாம் நீர்ச் சேமிப்பிலும் நீர்நிலைகள் காப்பிலும் மழைஆக்கத்திற்கான வழிகளிலும் கவனம் செலுத்துவோமாக. 
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 23.07.2019