செவ்வாய், 28 ஜூன், 2016

தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா! – வவுனியா மாவட்ட மக்கள்குழு கடுந்தாக்கு!


இனப்படு கொலை இந்தியாவிற்குக் கண்டனம்,  வவுனியா01 : vavuniaya_vvc01

தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா!

– வவுனியா மாவட்ட   மக்கள்குழு கடுந்தாக்கு!

  தமிழர் தாயகத்தின் தலைநகரம் திருகோணமலையில் தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து, பொருளாதார வளம் கொழிக்கும் மூதூரின் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து, வவுனியா மாவட்டத்தில் கடந்த  ஆனி 11, 2047 / 25.06.2016 சனிக்கிழமை அன்று எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
  ‘தமிழ் இனப்படுகொலை’ கூட்டரசு இந்தியாவின் ‘இன்னுமொரு இனஅழிப்பு’ ‘சம்பூர் அனல்மின் நிலையத்திட்டத்தை நிறுத்து!’ என்று வலியுறுத்தி பதாதையைத் தாங்கியவாறு, வவுனியா மாவட்ட  மக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தலைவி திருமதி கா.செயவனிதா, செயலாளர் திருமதி பே.பாலேசுவரி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலிருந்து காலை 10.00 மணிக்குப் பேரணியாகப் புறப்பட்ட சங்கத்தின் அறுபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் மணிக்கூடு கோபுரச்சந்தி ஊடாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.
  அங்கு கவனவீர்ப்புப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்த வவுனியா சமுக நீதிக்கான வெகுமக்கள் அமைப்பு, பசுமை திருகோணமலை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்துகொண்டு, இந்திய அரசாங்கத்தின்  ஒத்துழைப்போடு நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனஅழிப்புக்கு எதிராகத் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
  இவ்விரு அமைப்புகளின் போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கிய பின்னர், ‘தங்கள்பிள்ளைகளைக் கடத்தியது மகிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களைக் காப்பாற்றுவது மைத்திரி அரசு’ என்றும், ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ எனும் பெயரால் இந்த உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் பகிரங்கப்படுத்தி, வவுனியா மத்தியப் பேருந்து நிலையம் முன்பாகவே காலை11.00 மணிக்கு மற்றுமொரு கவனவீர்ப்பு போராட்டத்தையும் நடத்தினர்.
  இந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில், சிறீலங்கா அரசின் ஆட்கடத்தல்-தடுத்து வைத்தல்  நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களும், வவுனியா மாவட்ட  மக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தலைவி திருமதி கா.செயவனிதா ஆகியோரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக