தலைப்பு-காலத்தின் கட்டாயம்3/-விக்கினேசுவரன் ; thalaippu_thannaatchi_kaalathinkattaayam-vigneswaran

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3

 

நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?
  ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது.
  ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற, வரலாற்று அளவில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்தை அதன் பின் வெளிவிட்டனர்.
  ஆகவே, சிங்கள மொழியையும் பௌத்த சமயத்தையும் பௌத்த சிங்களவர் மிகக் குறைவாக வாழும் பகுதிகளில் கட்டாயமாகத் திணிக்கக்கூடும் என்ற அச்சம் எமக்கு இருக்கின்றது. அந்த வழியில்தான் அண்மைக் கால நடவடிக்கைகள் தெற்கிலிருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே கூர்மம் பெற்று வருகின்றது. பௌத்தக் கோயில்கள் கட்டுவது பற்றி, புத்தச் சிலைகள் அமைப்பது பற்றி ஏற்கெனவே கூறி விட்டேன்.
  தமிழ் பேசும் எமது பகுதிகளில் இன்னும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளைத் தருவதாகச் சென்ற கிழமை(வாரம்) கூட எமக்கு அறிவிக்கப்பட்டது. எமது வடக்கு – கிழக்குப் பகுதிகளில் எமது தாய்மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை.
  எமது நிலங்கள் பறி போகின்றன. படையினர், மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு இங்கே  குடியிருக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். எனவே, வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்தப் பகுதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எமது மொழியையும் சமயங்களையும், மரபுகளையும் பாதுகாக்க வடக்கு – கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம். வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழ் பேசும் மக்களின் மரபார்ந்த(பாரம்பரிய) வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு – கிழக்கு இணைப்பு இன்றியமையாதது ஆகின்றது. அதனைச் சிங்கள மக்கள் ஏற்பார்களா என்றதொரு ஐயம் எம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
  உண்மையைச், சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எமது வாதம். வடக்கு-கிழக்கில் காலம் காலமாகத் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்தார்கள் என்பதைச் சிங்கள மக்கள் ஏற்காவிட்டால் பன்னாட்டு வரலாற்றாசிரியர்களை அழைத்து நாம் கூறுவது சரியா அல்லது அண்மைக் காலங்களில் பெரும்பான்மையினர் கூறி வருவது சரியா என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். சிங்கள பௌத்த மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பல காலம் வாழ்ந்த வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் வந்தேறு குடிகளாக நுழைந்து வல்லாளுகை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்படி நிறுவிக் காட்டினால் நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்புக்கான கோரிக்கையைக் கைவிடுகின்றோம். அண்மைய பல வரலாற்றுக் கண்டுபிடிப்புக்கள், தொல்பொருள் ஆராய்ச்சிகள், புதிய தொழில்நுட்பப் பொறிமுறைகளின் அடிப்படையில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் நீண்ட கால இருப்பை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
 திடீரென்று அரசியல் யாப்பு ஒன்றைத் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது. சென்ற அரசு இருந்த காலத்தில் 18 தடவைகள் கமுக்கமாக(இரகசியமாக)ப் பல கலந்துரையாடல்கள் தமிழ் மக்கள் தலைவர்களுக்கும் அப்பொழுதைய அரசுக்குமிடையில் நடைபெற்றன. அவை பற்றி எதனையும் எவரும் வெளியிடவில்லை.
  அரசியல் யாப்புகளினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துகளைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், கெடுதிகள் தொடர்ந்தே செல்வன. ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த அக்கறைகளை நாம் வெளிக்கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியைக் கட்சி வேறுபாடின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
  (இந்தப் பேரணி) இவ்வேளையில் ஏன் என்று கேட்கின்றார்கள் நம்மவரில் சிலர். இவ்வேளையில் எமது அக்கறைகளை ஊரறிய, நாடறிய, உலகறிக் கூறாவிடில் பின் எப்பொழுது கூறப் போகின்றோம்? எமது எதிர்பார்ப்புக்கள் வரப்போகும் அரசியல் யாப்பினால் நிறைவுபடுத்தப்படுவன என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுவரை காலமும் தம் கையில் வைத்திருந்த ஆட்சியுரிமையை எம்முடன் பெரும்பான்மையினத் தலைவர்கள் முறையாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நாம் கடந்த காலப் பட்டறிவின் அடிப்படையில் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு பகிர்ந்தார்களேயானால் எமக்கு மகிழ்ச்சி. இல்லை எனில் எமது அக்கறைகளை எப்பொழுது நாம் வெளிக்காட்டப் போகின்றோம்?
  மத்தியின் மேலாதிக்கம் தற்பொழுதும் தொடர்கின்றது. படையினரின் உலாவல் தொடர்கின்றது; வல்லாளுகைகள் தொடர்கின்றன; அரசியல் கைதிகள் சிக்கல் தொடர்கிறது; காணாமல் போனோர் சிக்கல் தொடர்கின்றது; சமய அளவிலான வல்லாளுகையும் தொடர்கின்றது; வட மாகாண மக்கள் சார்பாளர்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் எமது அக்கறைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும்.
  புதிய அரசியல் யாப்பு இயற்றுதலானது எமது அக்கறைகளை உள்ளேற்க வேண்டும்! இணைந்த வடக்கு–கிழக்கு நிகருரிமை அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும்! நிலம், காவல், நிதி போன்ற ஆட்சியுரிமைகள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும்! இவற்றை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்! படையினர் படிப்படியாகக் குறிப்பிட்ட காலத்தினுள் திரும்பப் பெறப்பட வேண்டும்! சட்டத்திற்குப் புறம்பாக புத்தக் கோயில்கள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும்! வன்கொடுமைத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு தமிழ் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்! போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பக்கச் சார்பற்ற பன்னாட்டு உசாவல் (விசாரணை) நடைபெற வேண்டும்! காணாமல் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்! இவற்றையெல்லாம் வலியுறுத்தவே இந்தப் பேரணி.
  இவ்வாறான எமது அக்கறைகளைக் கருத்தில் கொள்ளாது, அவற்றிற்குத் தீர்வைக் காணாமல், நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது  செம்மங்கியைக்(காரட்டு) குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது.
  எமது சிங்கள உடன்பிறப்புக்கள், ஏன்… எமது தரைப்படை, கடல்படை, வான்படை உடன்பிறப்புக்கள் எமது மனநிலையைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்! எமது இன்றைய கேள்விகளுக்குப் பதில் கூற ஆட்சியில் உள்ளோர் கடமைப்பட்டுள்ளார்கள் எனக் கூறி என் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!
நன்றி! வணக்கம்!
நீதியரசர் க.வி.விக்கினேசுவரன்,
முதலமைச்சர்,
வட மாகாணம்
  • ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆற்றிய உரை
  • தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்