வியாழன், 20 அக்டோபர், 2016

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி

தலைப்பு-புத்தன்பூமி, நூலாய்வு, சொர்ணபாரதி, நந்தவனம் சந்திரசேகர் ; thalaippu_buththanbhuumiyil_nandavanat

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம்  2/2

  அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.  அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும்,  கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு துக்க வீட்டில்  விருந்துண்டதைச்  சொல்கிறார். இழு வண்டியில் (Cycle Rickshaw) பயணித்ததையும் கூறுகிறார்.
  மியான்மரில் எழுநூறாயிரத்து ஐம்பதாயிரம் (7.5 இலட்சம்) புத்த மடங்கள் இருக்கின்றன என்ற விவரமும், பொங்கிகள் எனப்படும் புத்தத் துறவிகள் அன்றாடம்  வீதி வழி சென்று, மக்கள் இடும் உணவுப் பொருட்களைத் தானமாகப் பெற்றுதான் உணவு உண்பர் என்ற விவரமும் தெரிவிக்கிறார்.
 மேலும், குமுகச்(சமூக)த் தொண்டரான செல்வி எசு.தி.வனிதாவைச் சந்தித்ததையும் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.  குமுகச் சேவைக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தைகளுக்குத் தேவாரம், திருவாசகம் பாடக் கற்றுக் கொடுப்பதையே தனது கடமையாகக் கொண்டிக்கும் அவரது சேவை பாராட்டுக்குரியது. தாய்மொழியை மறந்து கொண்டிருக்கின்ற அயல்நாட்டு வாழ்க்கையில், இது போன்ற  இறையியல் இலக்கியங்கள் மூலம் மொழியைக் காப்பது பெருமைக்குரியது. தமிழக வரலாற்றிலும் களப்பிரர்கள் ஆட்சிக்குப் பின் பல நூற்றாண்டுகள் இறையியல் இலக்கியங்களே தமிழ் மொழியைக் காத்து வந்தன என்பது நாம் அறிந்ததே.
  மியான்மரிலும், தமிழ்நாட்டைச் சீரழிக்கும் திரைப்படப் பித்து பரவியிருக்கிறது என்பதையும் ஒரு நிகழ்வின் மூலம் நகைச்சுவையோடு உணர்த்துகிறார்.
  திரைத்துறையைச் சேர்ந்தவரின் மணவழி உறவினர் (சம்பந்தி) எனப்பட்ட ஒருவர், பத்துக் கல்லூரிகளின் உரிமையாளர், அங்கு சென்று தவறான வரலாறுகளையும், திரிபான செய்திகளையும் கூறியபொழுதும் நடிகரின் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் கூட்டத்தினர் கைத்தட்டி ஆரவாரம் செய்ததைப் பகடி செய்கிறார்.
 பருமாவில் ‘தமிழ்மாலை’, ‘நமது நல்ல காலம்’, ‘உங்கள் எதிர்காலம்’ முதலிய இதழ்கள் வருவதைப் பற்றிச் சொல்கிறார். பெரும்பாலும் அவை திரைப்படச் செய்திகளும், விளம்பரங்களும், சோதிடம் தொடர்பான செய்திகளும்  நிறைந்துள்ளதாக உள்ளன என்கிறார்.
  நானும் அந்த இதழ்களைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் தீவிரமான மொழி அறிவும் தமிழ் இலக்கியமும் வளர்த்த ‘இரசிக இரஞ்சனி’, ‘தொண்டன்’, ‘பருமா நாடு’ இதழ்களை எழுத்துக்கூட்டிப் படித்த நினைவுகள்  உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றன.
  அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்திற்கும் அழைத்துச் செல்லப்படுகிறார் நூலாசிரியர். திருமண விருந்துக்குப் பின் அங்கு நடனமாடிய பெண்களோடு ஒளி ப்படம் எடுத்துக் கொண்டதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
  பொதுவுடைமை நன்னெறி அவையில் (சமரச சன்மார்க்க சபை) தயக்கத்தோடு பேசத் தொடங்கி, தெளிவாக உரையாற்றியதைத் தனக்குள்ளே வியந்து விவரிக்கிறார்.  தொழில் முனைவோர் கருத்தரங்குகளை நடத்துகின்ற மலேசியா பாலன் எனும் நண்பரைச் சந்தித்ததையும் கூறுகிறார். பருமாவை வளம் மிக்க நாடாக உருவாக்கிய, இன்றும் பேணுகின்ற ஐராவதி, சால்வின், சிண்டுவின் நதிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
 இரங்கூன் துறைமுகம் ஐராவதி நதியின் கழிமுகப் பகுதியில் கடலிலிருந்து 15 புதுக்கல் (கிலோ மீட்டர்) உள் அமைந்துள்ளது. உலகின் முதன்மையான, மிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும். 1967 திசம்பரில் சவுதி கப்பல் ஐராவதி ஆற்றைக் கடந்து வங்கக் கடலில் உள்வாங்கியபொழுது கப்பல் ஆடிய ஆட்டம் 50 ஆண்டுகள் கழித்தும் இன்னும் நினைவில் ஆடிக் கொண்டிருக்கிறது.
   கைலியைச் சட்டைக்கு மேல் வெளியில் கட்டுவது ஏன் என்பது குறித்தும் ஒரு சுவையான கலந்துரையாடலை நடத்தியிருக்கின்ற செய்தி நம்மையும் அந்தக் கலந்துரையாடலில் பங்கெடுக்க வைக்கிறது.
  தமிழ்நாட்டிலிருந்து எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கு வாழும் தமிழர்கள் உரையாடும்பொழுது முதன்மையாக இடம் பெறுவது ஈழத் தமிழர் போராட்டம்பற்றிய கேள்விகளும், அதன் மீதான வருத்தங்களும். அந்தத் துய்ப்பு சந்திரசேகருக்கும் ஏற்படுகிறது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்குமே, தமிழ்நாட்டு அரசியலாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஈழத்தமிழர் போராட்டத்தின் திசைகளை மாற்றியதும், தங்கள் நலத்துக்காக ஈழ மக்கள் போராட்டத்தையே மக்களோடு சேர்த்துக் குழி தோண்டிப் புதைத்ததும் அவ்வளவு விரைவில் மறக்க முடியாதவையாக நெஞ்சில் பதிந்துள்ளன. என்ன மருந்திட்டாலும் அஃது ஆறக்கூடிய காயமுமில்லை.
  பீலிக்கான் முனிசுவரர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் முதியோர் இல்லத்திற்குச் செல்கின்றனர். மிகவும் தூய்மையாகவும், அழகாகவும் பாதுகாக்கப்படும் முதியோர் இல்லம் அது. முதியோர்களை மிகவும் போற்றி வணங்கக் கூடிய பண்பாடு கொண்ட நாடு மியான்மர். நூலகத்திற்கும் செல்கின்றனர். பீலிக்கான் முனிசுவரன், அங்காள ஈசுவரி, பூச்சித்தாத்தா கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். தமிழ்நாட்டிலும் பருமியத் தமிழர்கள் குடியேறிய பகுதிகள் அனைத்திலும் தங்களது பருமியப் பண்பாட்டின் இறையியல் உணர்வின் அடையாளமாக பீலிக்கான் முனிசுவரன், அங்காள ஈசுவரி, வெட்டுடையாள் காளி, பூச்சித்தாத்தா ஆலயங்களை நிறுவி இன்னும் ஆண்டுதோறும் பருமாவில் நடைபெறுவது போலவே தீ மிதித் திருவிழாவை வழிவழியாகக் கொண்டாடி வருகின்றனர்.
 இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மியான்மரில் கால் பதிப்பது என்பது பெருமைக்குரியதாகும். தனது ஏழு நாள் பயணத்தைச் சிறப்பாகச் சொல்லும் சந்திரசேகர், மனம் நெகிழக்கூடிய ஒரு நிகழ்வையும் பதிவு செய்கிறார்.
 அனுசுயா தேவி என்கிற பெண்மணியைச் சந்தித்ததைச் சொல்கிறார். அவருக்குப் பெற்றோர் இல்லை என்பதையும், இன்னும் திருமணமாகவில்லை என்னும் செய்தியையும் மனம் நெகிழக்கூடிய வகையில் சொல்லி வரும்பொழுது, அதன் மீதான உரையாடலில் சந்திரசேகர் தலையசைக்க மாட்டாரா எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
  பருமாவில் குடும்பக் கட்டுப்பாடு என்கிற ஒன்றே இல்லை. குழந்தைகள் நிறையப் பெற்றுக் கொள்வதையே பெரும் செல்வமாகக் கருதிய காலம் உண்டு. என் தந்தையாருக்கும் பருமாவில் இருந்து வரும்போது 12 குழந்தைகள் இருந்தனர். பெரிய குடும்பமாக வாழ்வதையே பருமியத் தமிழர்கள் மிகவும் விரும்பினர். கலகலப்பான குடும்பங்களே அங்கு நிறைந்து காணப்பட்டன.
  8.7.2016 முதல் 14.7.2016 வரை ஏழு நாட்களும் நூலாசிரியர் கூடவே இருந்து அவரை விருந்தோம்பி, வழிகாட்டியாகவும் பயணப்பட்ட திரு.எம்.ஏ.கருப்பையா நம் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.
  ஒரு பயணத்தில் என்னவெல்லாம் சொல்ல முடியும் என்பதைப் பல நூறு பக்கங்களிலும் சொல்லலாம்; சில பக்கங்களிலும் சொல்லிவிடலாம். அந்த வகையில், இந்த நூலில் தனது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைப் போல, தான் சந்தித்த மனிதர்களையும், கண்டு களித்த இடங்களையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன் என்ற முன்மொழிதலோடு படைத்துள்ள இப்பயண நூல் முழு நிறைவைப் படிப்பவர்களுக்கு வழங்கக்கூடிய எளிய மொழி நடையும் நிறைய குறிப்புகளும் கொண்டுள்ளது.
  இனி வரும் காலங்களில், விரிவான பயண நூல்களை ‘நந்தவனம்’ சந்திரசேகர் வழங்குவார் என்கிற நம்பிக்கையையும் விருப்பத்தையும் பதிவு செய்து, அவருடைய தொடர் பயணங்களும் படைப்புகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
தமிழன்புடன்
கவிஞர் சொர்ணபாரதி,
ஆசிரியர் – கல்வெட்டு பேசுகிறது,
பொதுச் செயலாளர் – உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்,
பொதுச் செயலாளர் – பாரதி கலை இலக்கிய மன்றம்,
செயல் தலைவர் – ‘பொன்மனம்’ கலை இலக்கியப் பேரவை,
துணைச் செயலாளர் – முத்தமிழ் ஆய்வு மன்றம்,
அமைப்பாளர் – ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம்.
பேச: 9677110102, 9884404635.
மின்னஞ்சல்:
ssornabharathi@gmail.com
kalvettu1996@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக