ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்
4/9
பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் குறித்து நாவலர் நெடுஞ்செழியன்,
“மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப்
பற்றும், வைணவச் சமயப் பற்றும், வருணாச்சிரம சனாதனதருமப் பற்றும் சார்ந்த
கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது
அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில்,
வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும்உண்மை.
மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை)
அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று
வலியுறுத்தினார்: அவர் குறிப்பிட்டுள்ள மறு என்பது, பரிமேலழகர்தம் உரையில்
புகுத்தியுள்
ள, எவராலும் ஒப்புக்கொள்ள இயலாத,
வடலூலாரின் சில கொள்கையைப் பற்றியதாகும். பரிமேலழகரால் புகுத்தப்பட்ட
மாசுவும், மறுவும் அறவே நீக்கப்பட வேண்டும் என்பதுதான் பேராசிரியர்
சுந்தரம் (பிள்ளை)அவர்களின் பேரவாவாகும்” என்று குறிப்பிடுகிறார். (நாவலர்
இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை; நன்றி: அகர முதல)
சமயக் கணக்கர் மதிவழிக் கூறாது
உலகியல் கூறிப்பொருளிது என்ற வள்ளுவன்
என்று கல்லாடனாரும்,
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக் கொருநீதி
என்று பேராசிரியர் சுந்தரனாரும் கூறியவற்றை மேலைநாட்டறிஞர் துறு (Rev.W.H.Drew), “ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலக மக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையெ தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார்.
இவ்விரிந்த உணர்வால் மற்ற மநு முதலிய நூல்களி;ல் கூறப்பெறும்
கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது” என்று
வழிமொழிந்துள்ளார். இக்கருத்துகளே தேசிகனுக்குரிய மறுப்புகளாம்.
“இந்த நாடு நம்முடைய நாடு. இந்நாட்டில்
நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ்
மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் பண்பாட்டிற்கும் நம் பழக்க
வழக்கங்களுக்கும் தொடர்பில்லாத – நம் நாட்டு எண்ணிக்கையில் 100க்கு 3
பேராகவுள்ள – இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பிராமணர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமசுகிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்துவரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா?
இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், பலருக்கு
முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது
இருந்த மரியாதை, தகுதி என்ன? பிராமண ‘மேலோர்’ மொழியாக –
சமசுகிருதத்துக்கு இருந்த தகுதி என்ன? என்பதுபற்றிய பல செய்திகள்
தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். ஏறத்தாழ 40 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்ககூடும்.” என்று தந்தை பெரியார் 1960 –இல் கூறியது 55 ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருப்பது ஏன்?
காலம் செல்லச் செல்ல கல்வி வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பொருளிய
வளர்ச்சியும் பெருகி வரும் நிலையில் பொருளியக் கண்ணோட்டமே இளைஞர் மனத்தை
ஆட்கொண்டிருப்பதை உணர முடிகின்றது. அவர்களுக்கு. குறிப்பாகப் பிராமணர்
அல்லாத தமிழ் இளைஞர்களுக்குத் தங்கள் சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை
தெரியவில்லை; தெரிந்து கொள்ளவும் முயலுவதில்லை. அதைப் போலவே தம் தாய்த்
தமிழின் நிலையையும் அவர்கள் உணரவில்லை. அதைத்தான் தந்தை பெரியார் அன்றே
சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நடுவண் ஆட்சியில் உள்ள சங்கப் பரிவாரத்தினர் தங்கள் இந்துதுவ வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகச், சமற்கிருதத்தைக்
காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரையில் எப்பாடு பட்டேனும் திணிப்பதன் மூலம்
செத்த அந்த மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்று வருகின்றனர். அது அவர்களுடைய இந்துத்தேசியத்தின் ஒரு கூறு. அதுதான் அவர்கள் விரும்பும் ‘தேசியம்.’
தேசியம் என்பதே தவறான கருத்தியல்
என்பதைத் தந்தை பெரியார், “தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை
நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமை மிக்க திராவிட
மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக் கொள்ளப்
பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. ….. இந்தச்
சூழ்ச்சிகளுக்கு நமது அமைச்சர்கள் விபீடணர்களாகிவிட்டார்களே என்பதுதான்
வருத்தமாக இருக்கிறது. இந்தி நுழைவால் உண்மைத் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படாது. கடுகளவு பயன் கூட ஏற்படாது. அதற்கு மாறாக எவ்வளவோ கேடுகள் வந்து சூழும்.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் போற்றிக் காப்பாற்றிவந்து, கடைசிக்
காலத்தில் கைவிட்டுத் தற்போது வெகு கட்டப்பட்டுப் பெற்ற வளர்ந்துவரும்
தமிழ்ப் பண்பு அடியோடு கெட்டுப் போகும்” என்று அறிவுறுத்தியுள்ளார். அது
இந்தி நுழைவு குறித்துக் கூறப்பட்ட கருத்தாயினும் சம்ற்கிருதத்துக்கும்
பொருந்துவதாகவே உள்ளதை உணரலாம்.
(சென்னை தூய மேரி கூடத்தில் 17.07.1948 அன்று ஆற்றிய உரையிலிருந்து, விடுதலை 20.07.1948)
(தொடரும்)
பெங்களூரு முத்துச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக