தலைப்பு-மாற்றம்விரும்பும் மக்கள் :thalaippu_maatram virumbum makkal02

மாற்றத்தை விரும்பும் மக்கள்


  கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர்  என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில்  நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான்  மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல், கல்வியை வணிகப்பொருளாக்கிக்  கொள்ளையடிப்பதை ஊக்குவித்தல், நாவில் நடமாடவேண்டிய தமிழன்னைக்குச் சாவுமணி அடிப்பதுபோல் தமிழின் பயன்பாடு குறைவதைக் களைய நடவடிக்கை எடுக்காமை, ஊழலை உயர்த்திப்பிடித்தல் எனத் தங்கள் நெறிமுறைகளை மாற்றிக்கொள்ளாமல் தங்கள்செல்வநிலைகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்களுக்குள்ளேயே மாற்றுதேடிய மக்கள் இம்முறை புதிய மாற்றத்தை விழையத் தொடங்கியுள்ளனர்.
  தேர்தல் கணிப்பு எனப் பலவகையாகச் செய்திகள்வந்தாலும்  தங்களை அறியாமல் தவறான கணிப்புகளின் மூலம் உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர். முடிவெடுக்காத நிலையில் 80இற்கு மேற்பட்ட தொகுதிகள் உள்ளதாகக் கூறியுள்ளமை மக்கள்நலக்கூட்டணிக்குப் பெரும்பான்மையும்  உரியனவே!  அதனை வெளிப்படுத்த விருப்பமின்றி இவ்வாறு குழப்பமான சூழல் உள்ளதுபோல் கூறுகின்றனர். நமக்குத் தொடர்பில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், அவர்களது சுற்றத்தார் வட்டம் எனப் பலரிடமும்  பேசியதில் அவர்களிடம் அல்லது அவர்கள் உள்ள பகுதியினரிடம் எவ்வகைக் கருத்துக் கணிப்பும் நடைபெறவில்லை என்றனர்.  தாள்கொடுத்துக் கருத்தினைக் கேட்காமல், கடைக்காரர்கள், அங்கு வரும்வாடிக்கையாளர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், சிறு வேலை பார்ப்பவர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் எனப் பல தரப்பாரிடமும் பலரும் பேசிப்பார்த்ததில் பெரும்பான்மையர் இம்முறை மாற்று அணிக்கே வாக்களிக்க முடிவெடுப்பதாகக் கூறினர். அதிமுக, திமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்மட்டும் தங்கள் கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.  காங்.கூட்டணி குறித்துத் திமுகவினரிடம் கேட்டதற்கு “உறவாக இருந்தாலும் பகையாக இருந்தாலும் உறுதியாக இருப்போம்” என்றனர். என்றாலும் இவ்விரு கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் ஆதரவாளரகளாக இருப்பவர்கள், இந்த முறை கண்டிப்பாக வேறு கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர். இவர்களுள் பெரும்பான்மையர் கொள்கை, செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பா.ம.க.விற்கே முதலிடம் தருகின்றனர். என்றாலும் இவர்களில் பெரும்பான்மையர் பா.ம.க.விற்கு வாக்களிக்கத் தயங்கி ம.ந.கூட்டணிக்கே வாக்களி்ப்போம் என்கின்றனர். நகர்ப்புற   படித்த இளைஞர்களில் பெரும்பான்மையர் நா.த.கட்சிக்கு முதலிடம் தருகின்றனர்.  வைகோவின் உழைப்பிற்கேற்ற உயர்வைத்தரத் தவறிவிட்டோம் என்கின்றவர்களும் ம.ந.கூட்டணிக்கே வாக்கு என்கின்றனர்.  விசயகாந்தைப்பற்றிக் கேட்டால், நடிகை ஆளும் நாட்டில் நடிகர் ஆண்டநாட்டில் மீண்டும் நடிகர் ஆண்டால் என்ன என்கின்றனர். நா.த.கட்சிக்கு  வெற்றி வாய்ப்பு இல்லாவி்ட்டாலும் பெறுகின்ற வாக்கு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதாக இருக்கும் என்றும் படித்த இணைஞர்கள் நம்புகின்றனர். இருப்பினும் இம்முறை மாற்றம் என்பது புதிய அணியே என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
  தேர்தலுக்குப்பிறகு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழல் வந்தால் பிற தரப்பார் கூட்டணி ஆட்சி  அமைக்கலாம். எக்காலமும் முதன்மைக்கட்சிகளுக்கு ஆதரவு அல்லது முதன்மைக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் மறுதேர்தலுக்குவழி வகுக்க வேண்டும்.
  இது கருத்துக் கணிப்பல்ல. மக்கள் எண்ண ஓட்டங்களை அறிந்து வெளிப்படுத்தும் கண்ணாடி.
  பிற மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று கவலைப்படாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்! இந்த  ஆண்டு நம் கடமையை நாம் ஆற்றினால் இத் தேர்தலில் இலலாவிட்டாலும் அடுத்த தேர்தலில் கண்டிப்பாகப் பயனிருக்கும்.
  எனவே வாக்குரிமை  உள்ள அனைவரும்  நமக்கு உதவும் ஒருவரை – நாட்டை  மேம்படுத்தும் ஒருவரை – ஊழலுக்கு இடமில்லாத ஒருவரை – நம் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்!
நன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
என்பதை வாக்குநாளன்று நினைவில் கொண்டு நற்செயலாகிய வாக்களிப்பைத் தவறாமல்செய்வோம்!
திருவாரூர்ச் செல்வன்