எழுவகை நாடோடிப் பாடல்கள்
நாடோடிப் பாடல்களில் பல வகைகள்
உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன் பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய
தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல்
பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள்
பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை.
வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை.
திருமணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும்
இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது பாடுபவை முதலியன உணர்ச்சி
மிக்கனவாக உள்ளவை. இவை ஒரு வகை.
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும்போதும், சோறு ஊட்டும்போதும், தாலாட்டும்போதும் தாய்மார் முதலியோர் பாடுபவை ஒரு வகை.
குழந்தைகளும் மகளிரும் விளையாடும்போது தாமே பாடும் அம்மானை, பலிஞ்சடுகுடு, கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுப் பாடல்கள் ஒரு வகை.
அரிய கருத்துகளை உடையனவாய்ப்
பாமரர்களல்லாதவர்களிடத்தில் வாய்மொழியாகவே வழங்கும் பாடல்கள் பல உண்டு;
இவற்றில் சிறந்த மெய்யறிவுக் (தத்துவக்) கருத்துக்கள் இருக்கும். இவை ஒரு
வகை.
கதை பொதிந்த பாடல்கள் ஒரு வகை. இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆயினும் ஒருவாறு மிகுதியாக வழங்குபவற்றை எண்ணி மேலே கூறியபடி
(1) தொழில் செய்வார் பாடல்,
(2) இன்பப்பாடல்,
(3) உணர்ச்சிப் பாடல்,
(4) குழந்தைப் பாடல்,
(5) விளையாட்டுப் பாடல்,
(6) கருத்துப் பாடல்,
(7) கதைப்பாடல்
என்று ஏழு பகுப்பாகப் பிரித்துக் கொள்ளலாம்.
தரவு : இ.பு.ஞானப்பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக