தேவதானப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றிவருவதால் குறுகிய காலப்பயிர்த் தொழிலுக்கு உழவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.
தேவதானப்பட்டி பகுதியில் நீண்டகாலப்
பயிர்களான கரும்பு, வாழை, நெல் போன்றவை நடப்பட்டு வேளாண்மை நடைபெற்று
வந்தது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசுமை விரித்தாற்போல
நெல்வயல்களும், வாழை மற்றும் கரும்பு விவசாயமும் நடைபெற்று வந்தது. இதனால்
இப்பகுதியில் விளையும் பொருட்கள் தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும்
ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
கடந்த மூன்று வருடங்களாகத்
தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய மழைகள் பொய்த்துவருகின்றன.
இதனால் வயல்வெளிகள், ஆறுகள், ஒடைகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற
நீர்நிலைகள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இதனால் உழவர்கள் தாங்கள் செய்த வேளாண்
தொழிலில் இழப்பிற்கு மேல் இழப்பைச்சந்தித்து வங்கியிலும், தனியார்
நிறுவனங்களிலும் கந்துவட்டிக்கு வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பலர் உழவை
விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடத் தொடங்கிவிட்டனர். இருக்கின்ற உழவர்கள்
நீண்ட காலப்பயிர்களை வேளாண்மை செய்வதைத் தவிர்த்துவிட்டுக் குறுகிய
காலப்பயிர்களான கம்பு, சோளம், சாமை, தக்காளி, கேழ்வரகு போன்றவற்றைப்
பயிரிடத் தொடங்கிவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக