செவ்வாய், 21 அக்டோபர், 2014

செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்


செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்



தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது செல்வாக்கை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியன முதன்மையைக் குறைத்துள்ளன.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேசுவரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன.
கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்தத் தெரியாத ஒருநிலையா? அல்லது தமிழர்களிடையே இனப்படுகொலைப் போருக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
 tha.the.kuuttamaippu
வெளிப்படைத் தன்மையில்லை
இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கவில்லை என்பது வேறு. அது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிக்கல். இப்போது வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண சபையின் அதிகாரங்களை உரியமுறையில் செயற்படுத்த அரசாங்கம் இசைவளிக்கவில்லை என்பதும் இருக்கின்ற அதிகாரங்களைப் பிடுங்கி எடுக்கின்றார்கள் என்பதும் பன்னாட்டளவில் தெரிந்த செய்திகள்.
இறுதிக்கட்ட இனப்படுகொலைப்   போரில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையும் அதன் மூலமான நிலையான அரசியல் தீர்வுக்கும் பலதரப்புகளும் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், 2009ஆம் ஆண்டு மேமாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்குப் பொறுப்புடன் செயற்படுகின்றது என்பது கேள்வியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 38 உள்ளூராட்சி   அவைகளில் 90%அவைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியில் வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண அவயைில் 14 உறுப்பினர்கள் வடமாகாண அவையில் 30 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள். ஆகவே, குறைந்த அளவு இத்தனை உறுப்பினர்களையும் வடமாகாணத்தின் ஆட்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றதா?
பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் ஆகிய கூட்டங்களைக் கூடத் தலைமை உரியநேரத்தில் கூட்டுகின்றதா? அல்லது இவர்களுடன் கலந்துபேசி ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்களா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
கூட்டுப் பொறுப்பு இல்லை
யுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்தில் இயல்பான கட்சி அரசியல் செயற்பாடுகளை விட, ஒரு தேசிய இயக்கம் போன்ற செயற்பாடு ஒன்றுக்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வந்தனர். ஆனால், இங்கு இயல்பானகட்சி அரசியல் செயற்பாட்டு முறைகள் கூட இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட ஆட்ககளுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூட்டமைப்பு செயற்படுவதாகத் திறனாய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மூன்று செய்திகளை அவர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று சம்பந்தன், சுமந்திரன், விக்னேசுவரன் என்ற மூவருடைய செயற்பாடுகள். அதுவும் சம்பந்தன், சுமந்திரன் கூறுவதையே விக்னேசுவரன் வடமாகாண அவையில் செயற்படுத்துகிறார் என்பது முதன்மையானது. இரண்டாவது கூட்டமைப்புக்குள் மக்களாட்சிமுறையிலான செயற்பாடுகள் இல்லை. தனியாள் அல்லது மேற்படி மூவர் முடிவுகள். மூன்றாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் வடமாகாண அவைக்கும் கிடைக்கின்ற நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளிலும் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய மக்களாட்சிக்கு எதிரான செயற்பாடுகள் என்பது முன்னாள் போராளிகளாக இருந்து தற்போது அரசியல் கட்சிகளாகச் செயற்படும் இயக்கங்களை வெளியேற்றும் முற்றதிகாரப் போக்காக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேசுவரன் இலங்கைத் தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சிகளைக் குறைகூறிப்பேசியிருக்கின்றார்.
அப்போது கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றை மற்றைய கட்சித் தலைவர் ஒருவர் எடுத்துக் கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக வருவதானால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் சேர்ந்து அழைப்பு விடுக்க வேண்டும் என விக்னேசுவரன் அப்போது கூறியதையும் தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவன் என்று குறிப்பிட்டதையும் சில உறுப்பினர்கள் ஞாபகப்படுத்தினர்.
 sumenthiran,sambanthan,viknes01
சம்பந்தன், சுமந்திரன் அமைதி
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் சேர்ந்து இயங்க வேன்டும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட முடியாது என விக்னேசுவரன் கூறியதும், அதற்கு ஏனைய கட்சிகளின் சார்பாளர்கள் விடையிறுத்தபோதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் எதுவுமே பேசமுடியாத நிலையில் அமைதியாகவே இருந்தனர். அதாவது தமது நிலைப்பாட்டை விக்னேசுவரன் வெளிப்படையாகவே கூறிவிட்டார் என்பதனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண அவையில் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்குபேர் அமைச்சர்கள். ஒருவர் தவிசாளர். ஒருவர் முதலமைச்சர். இந்த ஆறு பேரையும் தவிர ஏனைய 24 உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விக்னேசுவரன் உரையாடுவதில்லை என்றும் இந்த ஆறு பேருமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
நான்கு அமைச்சுகளும் முதலமைச்சரின் கீழ் 16 திணைக்களங்களும் உள்ளன. இந்த 24 உறுப்பினர்களுக்கும் இவற்றைப் பகிந்தளித்து நிருவாகத்தை இலகுவாக்கலாம். ஆனால், முதலமைச்சர் விக்னேசுவரனிடம் அவ்வாறான திட்டங்கள் இருப்பதாகக் கடந்த ஒரு வருட ஆட்சியில் காணமுடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி வினவியபோது விடையிறுத்த விக்னேசுவரன் 24 பேரில் இரு உறுப்பினர்களையும் தவிர, ஏனையவர்களில் எந்தப் பயன்பாடும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் வடமாகாண அவையின் நிருவாகச் செயற்பாடுகள் மேலும் முடங்கக்கூடிய கண்டம்(ஆபத்து) உண்டு. அரசாங்கம் அரசியல் அதிகாரங்களை வழங்கவில்லை என்பது ஒரு புறம்.
மறுபுறத்தில் இருக்கின்ற அதிகாரங்களைச் சரியாக தமக்குள்ளே பரவாலாக்கம் செய்து செயற்படுத்த முடியாத நிலையில் விக்னேசுவரன் உள்ளார். ஏனைய 24 உறுப்பினர்களும் வெறுமனே கூட்டங்களுக்கு மட்டும் வந்து செல்பவர்களாகவே காணப்படுகின்றனர். சரியான தலைமைத்துவம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் கூறியபோது சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-அ.நிக்சன்


தரவு : முதுவை இதாயத்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக