மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும்
என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர்ப் பேணுகை, நீர்
மேலாண்மையில் முன்னோடியாகத் தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகச்
செப்பேடுகள், கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தண்ணீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு ஏரிகள்
உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு ஆவணப் பொறிப்புகளையும்,
அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம்.
அரசனின் எந்த ஆணைப்படி அது
அமையப்பெற்றது, அதைப் பேணுவதற்கு அளிக்கப்பட்ட கொடைகள், அந்த அரசனின் அரச
முத்திரை ஆகியவை எழுதப்பட்டிருக்கும்.
நீர்த்தேக்கங்கள் வகை
நீர்த் தேக்கங்கள் குறிக்க கண்மாய், ஏந்தல், ஊருணி, குளம், குட்டை, குண்டு என்ற சொற்கள் நடைமுறையில் உள்ளன.
ஆற்று நீரினைக் கொண்டு வருவதற்கு நீண்ட
குறுகிய கால்வாய்கள் வெட்டப்பட்டு இருந்தன. இவை ‘நீர்வாங்கி’,
‘வரத்துக்கால்’ எனவும், ‘வாய்க்கால்’ எனவும் வழங்கப்பட்டன. சில பகுதிகளில்
இந்தச்சொற்கள் ‘வகுத்துக்கால்’ என வழக்கில் இருந்தது. இவற்றின் மூலம்
வரப்பெற்ற வெள்ளநீரை மிகுதியாகப் பெற்ற பொழுது அதனை வெளியேற்றுவதற்குப்
பிறிதொரு காலும் பயன்படுத்தப்பட்டது. அதற்கு ‘மறுகால்’ எனப்பெயர்.
கண்மாய்களில் இருந்து நேரடியாக நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பெற்ற பெரிய
கண்களை உடைய வழி ‘கலுங்கு’ என்று அழைக்கப்பெற்றது. சிறிய கண்மாய்களின் நீர்
கொள்ளளவு குறைவாக இருப்பதால், கூடு கரையின் ஒரு இடத்தில், கரை இல்லாமல்
இடைவெளி விட்டு கரை அமைக்கப்பட்டு இருக்கும். இதன் வழி வெள்ளம் தானாக
வழிந்து வெளியேறும். அந்தப்பகுதிதான் ‘போகி’ எனப்பட்டது. ஆற்று நீரைத்தவிர
மழை நீரைக் கொண்டு வருகிற கால், ஓடை எனப்பட்டது.
ஒரு கண்மாயின் நீண்ட கரை அடுத்த
கண்மாயுடன் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்பட்டு இருந்தால் அந்த இணைப்புப்
பகுதி ‘பொருத்து’ ஆகும். அந்தக் கண்மாயின் மூலை, தொடக்கம் அல்லது இறுதிப்
பகுதி, கொம்பு, கடைக்கொம்பு என்று குறிப்பிடப்பட்டன. இந்த கண்மாய்க்கரையை
அடுத்துள்ள கண்மாய்ப் பகுதி ‘உள்வாய்’ என்றும் இந்தப் பகுதியில்
நீர்ப்பிடியை யொட்டி இருந்த விளைநிலம் ‘குளம்கோர்வை’ என்றும் வழங்கப்பட்டன.
இந்தக் கரைகள் மிகுதியான வெள்ளத்தினால் அழிந்து போனால் அவை ‘உடைப்பு’
ஆகும். கண்மாய்களில் நீர் நிரம்பிய பிறகும், சிற்றூர்ப்புறங்களில்
நீர்ப்பிடிப்பு அல்லாத பகுதி அதாவது கண்மாயின் வெளிப்பகுதி, தண்ணீர் தேங்கி
நிற்கும் பகுதி காலாங்கரை எனப்பட்டது. அஃதாவது காலை ஒட்டிய கரை. நாளடைவில்
இந்தப் பகுதியின் நீர் வற்றி சகதியுமாக மாறிய ஈரப்பகுதி – ‘வதி’ – ஆக
மாறிவிட்டது.
நீர்நிலைப் பேணுகை
நீர் நிலைகளைப் பேணவும் செப்பனிடுவதற்கும் ஒரு புதிய முறை மேற்கொள்ளப்பட்டதை கல்வெட்டுச் சான்றுகளால் அறியமுடிகிறது.
பொன், நெல், நிலம் போன்றவற்றை இருப்பாக
வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து வரும் வட்டியினைக் கொண்டு மேற்சொன்ன
வேலைகளைச் செய்வதற்கான செலவுகள் ஈடுகட்டப்பட்டன. கி.பி.768 ஆம் ஆண்டின்
கல்வெட்டில் இதுபற்றிய குறிப்பு கிடைத்துள்ளது. இவ்வாண்டில் பையனூர்
கணத்தாரிடம் மாமல்லபுரத்தைச் சார்ந்த ஒரு வணிகர் 6400 காடி நெல்லினை
வழங்கியுள்ளார். அதனை கணத்தார் கொடையாக ஏற்றுக்கொண்டனர். அதாவது ஓர்
இருப்பாக ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் ஏரியைப் பேணிக்காத்துள்ளனர்.
சிதைக்கப்பட்ட மரபு
ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்
பொதுப்பணித்துறையின் கீழ் ஏரிகள் வந்தன. அப்பொழுது தமிழகத்தின் பண்டைய
காலத்தில் பயன்படுத்தப்பட்ட மதகுகளைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலேயர்
நாட்டில் பயன்படுத்தி வந்த முறையைப் பின்பற்றினர். இதுவே தண்ணீர்ப்
பற்றாக்குறை ஏற்படக்காரணமாக அமைந்தது.
இதனால் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான
ஏரிகள் வறண்டும் பல நூற்றுக்கணக்கான ஏரிகள் தனியார் வயமும், பல ஏரிகள் சாலை
விரிவாக்கத்தின்போது காணாமல் போன நிலையும் ஏற்பட்டன. விளைவு ஒரு குடம்
தண்ணீரை 5 உரூபாய்க்குச்சிற்றூர்களிலேயே விலைக்கு வாங்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டு விட்டோம்.
குன்றத்தூர் கல்வெட்டு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில்
உள்ள பாலறாவாயர் திருக்குளம், நிழல் தரும், பயன்தரும் மரங்களுடன் கூடிய
கரையுடனும், 6 படித்துறைகள் இருக்கும்படியாகவும், குளத்தில் நீர்
குறைந்தால் நிரப்பவும், நீர் மிகுதியானால் நீர் வடியவும் வசதியாக
வாய்க்கால்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குளத்தின் தூய்மையினைப் பாதுகாக்க
அச்சுதக் களப்பிராயன் என்பவர் ஆணைப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று
இக்குளத்தின் கிழக்குப் பகுதியில் இன்றும் உள்ளது. இதில் உள்ள செய்தி
யாதெனில் இப்பாலறாவர் குளக்கரையில் மண் எடுத்தவனும், மண் எடுக்கச்
சொன்னவனும், இரைத்தவனும், நீர் இரைக்கச்சொன்னவனும் கங்கைக் கரையில் காராம்
பசுவைக் கொன்று போட்ட பாவத்தில் போகக்கடவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்தெய்வம்
ஒவ்வோர் ஏரியிலும் ஏரிக்கரையில் ஏரியைக்
காக்க அய்யனார் முதலான சில தெய்வங்களைக் காவல் காக்க வைத்துக் கோயிலும்
கட்டி வைத்துள்ளான் தமிழன்
இவ்வாறு நீர்நிலைகளில் மண் எடுத்தாலும், தண்ணீரைத் திருடினாலும் அவர்களுக்குச் சாவுரையும்(சாபமும்) விடப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தின் நீர்த் தொழில்நுட்பம்
ஏரிகளின் கரைகளிருந்து எந்தெந்த
இடங்களில் பாசனக் கால்வாய்கள் பிரிந்து செல்கின்றனவோ அந்த இடங்களில்
ஏரிக்கரையிலிருந்து 100 அல்லது 300 கோல்(மீட்டர்) தொலைவில் ஏரிக்குள்
குமிழிகள் அமைக்கப்பட்டன. அந்தக்குமிழிகளை இன்றும் ஊர்ப்புறங்களில் இராசா
இராணிக்கல் என்று அழைக்கிறோம்.
ஏரியின் தரை மட்டத்தில் மிக கடினமாகக்
கருங்கற்கள் கொண்டு ஒரு தளம் அமைத்து அதன் நடுவே கருங்கல்லினால்
செய்யப்பட்ட பலகைகளை நாற்புறமும் நட்டு, தொட்டி போன்ற ஓர் அமைப்பை
உருவாக்குவர். அத்தொட்டியின் தரைத்தளத்தில் அரை அடி விட்டத்துளையுடன் கூடிய
சுரங்க அமைப்பு உருவாக்கி அந்தச் சுரங்கக் குழாய் வழி ஏரிக்கரைக்குக்
கீழாகச் சென்று வெளியில் உள்ள வாய்க்காலில் முடிவடையும். கருங்கல்
தொட்டியினை மேலே ஒரு கற்பலகை கொண்டு மூடி அதன் மையத்தில் அரை அடி
விட்டத்தில் மேல்நோக்கியவாறு ஒரு துளை இருக்கும். இதனை ‘நீரோடித்துளை’
என்று அழைப்பர். தற்பொது கல்பெட்டியாக விளங்கும் அந்த தொட்டியமைப்பின்
பக்கவாட்டில் ஓர் இடத்தில் மூன்று சிறிய துளைகள் இருக்கும் அவற்றைச்
‘சேரோடித்துளை’ என்று அழைப்பார்கள்.
கல்பெட்டியின் இரு பக்கங்களிலும் இரண்டு
உயரமான தூண்களை நட்டு அவற்றை இரண்டு குறுக்கு விட்டக் கற்களால் இணைப்பர்;
அந்தக் குறுக்கு விட்டக் கற்களின் மையத்தில் நீரோடித் துளைக்கு நேர் மேலாக
இருதுளைகள் இருக்கும். அத்துளைகள் வழியாக நீண்ட இரும்புக் கம்பியைச்
செலுத்தி அதன் அடி முனையில் நீரோடி துளை வழியே நீர் வேகமாக கல்பெட்டிக்குள்
நுழைந்து கால்வாயை சென்றடையும். வேகமாக நீர் செல்லும்போது குமிழி ஏற்பட்டு
சகதி கலந்த நீரோடு தூம்பு வெளியேறும். இவ்வாறு சகதியோடு வெளியேறுவதால்
ஏரியில் தண்ணீர் மட்டும் இருக்கும். இதனால் ஏரியில் மண்மேடு உருவாகாது.
இத்தகைய நுட்பமாக அறிவியல் திறனோடு
அமைந்த ஏரிகள் தற்பொழுது மேலைநாட்டைப் பின்பற்றியதால் நீர் வீணாவதோடு
ஏரிகள் மண்மேடாகக் காட்சியளிக்கிறது. விளைவு தண்ணீருக்காக மூன்றாம்
உலகப்போரை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம்.
வைகை அனிசு
9715795795
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக