தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது.
1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக
மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து
ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும்
பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள்
அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது.
இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள்,
அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட
குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம்.
இக்குளத்தை பொதுமக்களுக்காகக் கட்டியதோடு
அதில் பொதுமக்கள் மீன்பிடிக்க உரிமையும் அக்குளத்தை வீணாக்கினாலோ
அக்குளத்தில் உள்ள தண்ணீரை முறைகேடாகப் பயன்படுத்தினாலோ சந்திரன் சூரியன்
உள்ளவரை அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்ற கல்வெட்டையும் குளக்கரையில்
நிறுவிப் பாதுகாத்து வந்தார்.
மஞ்சளாறு அணையிலிருந்து வருகின்ற தண்ணீர்
இந்த மத்துவார் குளத்தில் சேமிக்கப்பட்டு கெங்குவார்பட்டி, காட்டுச்சாலை,
சிரீராம்நகர், பரசுராமபுரம் பகுதி மக்கள் வேளாண்மைக்கும் பயன்படுத்தி
வந்தனர்.
தற்பொழுது மத்துவார்குளம் தனியாரால்
கவரப்பட்டும் தூர்வாரப்படாமல் மேடாகவும் காட்சியளிக்கிறது. இவை தவிர
குளத்தின் கரையில் செங்கல்தொழிற்சாலை, பொள்ளல்(hollow) பாளத் தொழிற்சாலை,
தேநீர்கடைகள் ஆகியவற்றால் குளத்தின் பகுதிப் பறிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் நீர்தேக்கம் இல்லாமல்
உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்துவார்குளத்தில்
உள்ள வன்கவர்வுகளை அகற்றித் தூர்வாரவேண்டும் என இப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
வைகை அனிசு, 9715795795, தேவதானப்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக