karpuuram01vaigaianeesu
  கோவில்களில் இறைவனுக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரத்திற்குப் பின்னால் சுவையான தகவல் உண்டு. ஆங்கில மொழியில் ‘கம்போர்’ என்று அழைக்கப்படும் கற்பூரத்தின் பின்னால் பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. ‘கம்போர்’ என்ற ஆங்கிலச்சொல் ‘கோம்ப்ர்’ எனும் பிரஞ்சுச் சொல்லிருந்துதான் தான் உருவானது. ‘கோம்ப்ர்’ எனும் இச்சொல் ‘கம்ப்போரா’ எனும் இலத்தீன் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூர்’ எனும் அரபு மொழிச் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூத் பராசு’ எனும் மலாய் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். தென்கிழக்காசியாவின் தீபகற்பமான மலாய்ப் பகுதியிலிருந்து இங்கிலாந்து காட்டிற்கு ஒரு நேர்க்கோட்டில் நோக்கினால் கற்பூரம் கடல் கடந்த பாதையினையும் அப்பொருள் எத்தனை நாடுகளைத் தாண்டி பயணித்தது என்பதையும் அறியமுடியும்.
  பண்டைய காலத்தில் கற்பூரம் கடல்வணிகத்தில் சந்தையாக்கப்பட்டுள்ளது. கற்பூரம் முதன் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது சீனத்து தாங்(கு) மரபு ஆட்சியில்தான் (கி.பி.610-907). தமிழகத்தில் கற்பூரம், மரபுவழி மருந்துகள் உருவாக்கப்பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர இந்துக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் கற்பூரம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. கற்பூரம் பற்றிய முதல் தமிழ்க் கல்வெட்டுக் குறிப்பு கி.பி.864 இல் கிடைத்துள்ளது.
  கற்பூரம் பூச்சிகளையும், கிருமிகளையும் விரட்டும் மணம் கொண்டது. நுண்கிருமிகளை ஒழிக்கும் தன்மை உடையது. இவற்றைத் தவிர இறைவழிபாட்டில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு பயன்பட்டு வரும் கற்பூரம் தாங்கிய சோழ மன்னன் பெயரும் நினைவில் கொள்ளத்தக்கது. சோழ அரசன் ஒருவன் கிருமிகண்ட சோழன் என அழைக்கப்பட்டுள்ளான்.
வைகை அனிசு, 9715795795, தேவதானப்பட்டி